Header Ads



"என்ன மயிருக்கு, அவர்களை மாத்திரம் கௌரவிப்பது"...?

 -Zinthah Nawaz-

2013 இல் A/L றிஸல்ட் வந்த போது என்னுடைய ஒரு நண்பனின் வீடு மையத்து வீடு மாதிரி இருந்தது.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் "அவன் மூன்று பாடத்திலும் குண்டடித்திருக்கிறான்" என்று நினைக்கின்ற அளவுக்கு ஒரு மயான அமைதி இருந்தது. அன்று அவர்களின் வீட்டில் சமைத்திருக்கவும் மாட்டார்கள். அவ்வளவு சோகம்.

ஆனால் உண்மையில் அவன் மூன்று பாடங்களும் சித்தியடைந்து மாவட்டத்தில் 45 வது நிலையில் தேறியிருந்தான். அதே றிஸ்ல்டை வைத்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 50 பேர் மட்டுமே உள்வாங்கக் கூடிய பட்டப்படிப்பைத் தெரிவு செய்து, படிப்பை முடித்து இன்று வேலை செய்துகொண்டிருக்கிறான்.

2015 இல் என்னுடை சாச்சியின் மகள் ஒருத்தி உயர்தர வர்த்தகப் பிரிவில் 3C எடுத்துத் தேறியிருந்தாள். O/L இல் கூட மிகவும் சாதாரண றிஸல்ட் எடுத்த அவளுக்கு, அந்த 3C என்பது பெரிய விடயம். ஆனால் "அவள் ஏ.எல் பாஸ் பண்ணல தானே" என்று யாரோ அவளைப்பற்றி உறவினர் ஒருவரிடம் கதைத்திருந்தார்கள்.

இப்போது இன்னொரு சாச்சியின் மகன் E tech பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி, C2S எடுத்து சித்தியடைந்திருக்கிறான். சாச்சிக்கு Call எடுத்து றிஸல்டைக் கேட்டால், அவரின் குரலில் உயிர்ப்பே இல்லாமல் பதில் சொல்கிறார். இத்தனைக்கும் இவன் O/L பரீட்சையில் முதல் தடவை கணிதத்தில் பெயில் ஆகி, இரண்டாம் தடவை கஷ்டப்பட்டு எழுதி S எடுத்து உயர்தரத்திற்குத் தெரிவானவன். இப்போது முதல் தடவையிலேயே உயர்தரத்தில் சித்தியடைந்திருக்கிறான். எனது பார்வையில் இவனது இந்த C2S என்பது பெரும் சாதனை.

உண்மையில் பார்த்தால் இவர்களை எல்லாம் அவர்களின் குடும்பங்கள் கொண்டாடியிருக்க வேண்டும்.

"வைத்தியர்கள்", "என்ஜினியர்கள்" என்று கொண்டாடுகிற சமூகம், இவர்களைக் கொண்டாடும் என்பதை எதிர்பார்க்கவே முடியாது.

ஆனால் குறைந்தது குடும்பத்தினரும், உறவினர்களுமாவது வீட்டிலிருக்கும் பிள்ளை உயர்தரத்தில் மூன்று பாடத்தில் சித்தியடைந்தால் அதைத் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள்.

அவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள். அவர்களைக் கொண்டாடுங்கள். அவர்களின் றிஸல்ட்டையும் ஸ்கிரீன் ஷொட் எடுத்து "Alhamthulillah... My son has successfully passed in A/L" என்று போஸ்ட் போடுங்கள். ஆட்டிறைச்சி அல்லது நாட்டுக்கோழி வாங்கி வந்து பிரியாணி சமையுங்கள். ஏதாவது பரிசுகளை வாங்கிக் கொடுங்கள். அவர்களின் றிஸல்ட்டை அடுத்தவர்களிடம் சந்தோஷமாகச் சொல்வதற்கு பிள்ளைகளுக்குத் தெம்பூட்டூங்கள்.

அவர்கள் A/L இல் சித்தியநை்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அடுத்தகட்ட உயர்கல்வி தயாராக இருக்கிறது. அரச பல்கலைக்கழகத்தில் ஏதாவது கற்கைகள் கிடைக்கும். நேரடியாகக் கிடைக்காவிட்டாலும் Aptitude test மூலமாகக் கிடைக்கும். அதுவும் இல்லாவிட்டால் HND, NDT, NDES, Marine University, Low college, defence university, College of Education, University of vocational technology, SLT engineering school etc etc என்று ஆயிரத்தெட்டுத் தெரிவுகள் இருக்கின்றன.

அதுவும் இல்லாவிட்டால் Open University இருக்கின்றது. அதுவும் இல்லாவிட்டால் வருடாந்தம் இலங்கைக்கு என்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இலவசமாக வழங்குகின்ற நூற்றுக்கணக்கான புலமைப் பரிசில்கள் இருக்கின்றன. அதுவும் இல்லாவிட்டால் "தரமான" தனியார் பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் நாட்டில் கொட்டிக்கிடக்கின்றன.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை மூன்று பாடத்தில் S சித்தி. இதில் ஏதாவது ஒன்றுக்குள் ஒருவர் நுழைந்துவிட்டால் அதிலிருந்து PhD வரை படிப்பதற்கான பாதை சும்மாவே திறந்துகிடக்கும். இதில் நிச்சயம் எங்காவது உங்களின் பிள்ளைக்கு ஒரு இடம் இருக்கும். எனவே பரீட்சையில் சித்தியடைந்தவர்களைக் கொண்டாடுங்கள்.

***** ******* ****** ****** ****** ******
மெத்தைப் பள்ளியில் ஜும்ஆவிற்குப் பிறகு "வைத்தியத் துறைக்கும், பொறியியல் துறைக்கும் தெரிவானவர்களை கௌரவித்தல்" என்று ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இருட்டில் நின்று அசிட் அடித்தால் தேவலை போல் இருக்கின்றது எனக்கு.

"என்ன மயிருக்கு அவர்களை மாத்திரம் கௌரவிப்பது" என்று கேட்கத் தோன்றினாலும், சபை அடக்கம் கருதி அதைக் கேட்காமல் வாய்க்குள் முழுங்கிக் கொள்கிறேன்.

இந்த வைத்தியர்களாலும், பொறியியலாளர்களாலும் சமுகம் அடைந்த அதே பலனைத்தான் அல்லது அதைவிடக் கூடிய பலனைத்தான் மற்ற பட்டதாரிகளாலும் சமுகம் அடைகிறது. "ஆகக் குறைந்தது" அரச பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான அனைவரையுமாவது சரிசமமாக நடாத்துங்கள்.

சமூகமும் சரி பாடசாலைகளும் சரி, உடனே பாரட்டுவதாக இருந்தாலும், பிறகு ஆறுதலாக கலாசர மண்டபத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், பல்கலைக் கழகத்திற்கு தெரிவான (தெரிவாகக் கூடிய) சகலரையும் பாராட்டுங்கள். அவர்களின் பெயரையும் பேஸ்புக்கில் போடுங்கள்.

இந்த சமூகம் இப்படி "பொறியிலாளர், மருத்துவர்" என்று போற்றிப் புகழ்ந்து அனுப்பியவர்களில், பல்கலைக்கழகப்படிப்பில் குண்டடித்து, மூன்று வருடம் நான்கு வருடம் பயிலாகி பயிலாகிப் படிப்பவர்களும் இருக்கிறார்கள்.

சமூகம் கணக்கெடுக்காமல் விட்டு B.Sc இற்குச் சென்று படித்து First Class Honour டிகிரி எடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

எங்களுக்கு இருக்கின்ற பிரதேச செயலாளர் வெற்றிடத்தை, அதிபர்கள் வெற்றிடத்தை, ஏனைய அரச அதிகாரிகளுக்கான வெற்றிடத்தை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான வெற்றிடத்தை, சிறந்த ஆசிரியர்களுக்கான் வெற்றிடத்தை, உளவியலாளர்களுக்கான வெற்றிடத்தை, உற்பத்தி வியாபாரிகளுக்கான வெற்றிடத்தை, கணக்காளர்களுக்கான வெற்றிடத்தை, நல்ல ஊடகவியலாளர்களுக்கான வெற்றிடத்தை, தேசிய சர்தேச வியாபாரிகளுக்கான வெற்றிடத்தை இந்த டாக்டர்களாலும் என்ஜினியர்களாலும் மாத்திரம் தீர்க்க முடியாது.

இந்த "Doctor, Engineer" மாயையில் இருந்து வெளிவராதவரை இந்த சமுகம் உருப்படப் போவதில்லை.

எல்லாத் துறைக்கும், எல்லாப் படிப்பிற்கும் ஒரேயளவான மரியாதையையும், பார்வையைும் கொடுத்துக் கொண்டாடுகிற ஒரு சமுகம்தான் தன்னிறைவடையும்.

2018 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த சகலருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

3 comments:

  1. இதைப்படித்ததுமே ஒரு சபாஷ் போடலாம்னு தோணுதுங்க...... சரியாகச் சொன்னீர்கள்!!!

    ReplyDelete
  2. A/L is just a start of higher Education, Achieving good results is good should be praised, But there should be a limit for it, Marketing and sharing these details Over the whatsup and Media, Feel we are praising without limit and spoiling his carrier. Parents should be very careful in spreading kids temporary achievements to public. These kids should have higher goals, and they should work towards it.

    ReplyDelete
  3. Writer, Appreciate your thinking pattern. But even you had finished the article with appreciating only those who passed the Exam. I believe you should have ended it with wishing everyone who had sat the exam. isn't it?

    ReplyDelete

Powered by Blogger.