Header Ads



வரலாற்றில் அதிகூடிய 278 கிலோ, 336 கோடி பெறுமதி ஹெரோயின் பிடிபட்டது - லதீப்பின் நேரடி கட்டுப்பாட்டில் அதிரடி

இலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸாரால் அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர். 

அத்துடன் அது தொடர்பில் இரு பங்களாதேஷ் பிரஜைகளை கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைவாக கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 9 கிலோ நிறையுடைய ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட சிறப்பு விசாரணைகளின் பலனாக போதைப்பொருள் விநியோக மத்திய நிலையமாக இயங்கிய பாதுகாப்பு இல்லம் என கருதப்படும் தெஹிவளை கெளடான பார அத்திட்டிய பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றை சுற்றிவளைத்தனர். 

அங்கிருந்தும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைதுசெய்த பொலிஸார் இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் தொகையான ஹெரோயின் போதைப்பொருளினையும் 7.5 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளையும் கைப்பற்றினர் .

போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அதிரடி படையின் கட்டளைத் தளபதி எம்.ஆர். லதிப்பீன் நேரடி கட்டுப்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தனபால ஆகியோரின் வழி நடத்தலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லூடவைட்டின் கீழ் இயங்கிய சிறப்புக்குழு அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. 

இதன்போதே இந்த மாபெரும் தொகை ஹெரோயினும் கொக்கெயினும் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த இடங்களில் இருந்து கிடைத்த சாட்சியங்கள் மற்றும் சந்தேகநபரின் வாக்குமூலங்களை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தெஹிவளையில் வைத்து 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் இந்த மாபெரும் போதைப்பொருள் விநியோக மத்திய நிலையத்துக்கும் இடையில் மிகநெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெளிவாவதாக பொலிஸ் அத்தியட்சர்கள் ருவான் குணசேகர சுட்டிகாட்டினார். 

விசேட அதிரடி படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசேட நடவடிக்கையில் நேற்று கல்கிஸ்ஸை டெம்ளஸ் வீதியிலுள்ள 48 கட்டிடத் தொகுயொன்றின் 4 ஆம் மாடியில் வைத்து பங்களாதேஷ் பிரஜையொருவர் 9 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய கேக் பெட்டியொன்றுடன் கைதுசெய்யப்பட்டார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது அவரிடமிருந்த ரோலர் கேட் தானியங்கி (ரிமோட் கருவி) ஒன்றும் சாவியொன்றும் மீட்கப்பட்டது. இதனையடிப்படையாக வைத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கல்கிஸ்ஸ அத்திட்டிய பகுதியிலுள்ள மேலுமொரு அதி சொகுசு வீடு குறித்து கண்டறியப்பட்டது. 

அந்த வீட்டை நோக்கி சந்தேகநபருடன் படையெடுத்த பொலிஸாரால் அங்கு சென்றதும் மேலும் ஒரு பங்களாதேஷ் பிரஜை கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து ஜன்னல் கதவுகளை திறந்த பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதல் பணிகளில் குறித்த வீட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேக் பெட்டிகள், பயணப்பொதிகள் மற்றும் இதர பொருட்களிலிருந்து மேலும் ஹெரோயின் மீட்கப்பட்டது. 

இந்நிலையில் சம்பவத்தில் கைதான இருவரும் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதைவிடுத்து குறித்த நபர்கள் இருவரும் இதற்கு முன்னர் எத்தனை முறை இலங்கை வந்துள்ளனர் என்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, குறித்த வீடானது இவர்களினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதுவரையான பொலிஸாரின் விசாரணைகளில் குறித்த வீட்டிலிருந்தே இலங்கை பூராகவும் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமையும், அங்கிருந்தே பொருட்கள் பொதி செய்தல் மற்றும் எடைபோடுதல் பணிகளும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் டிசெம்பர் 14 ஆம் திகதி நுகேகொட பாகொட பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்ட 1 கிலோ நிறையுடைய ஹெரோயின், மற்றும் டிசம்பர் 15 ஆம் திகதி ரத்மலானையில் கைதான பங்களாதேஷ் பெண்ணிடம் மீட்கப்பட்ட ஒரு கிலோ மற்றும்  தெல்கா சந்தியில் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 31 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகை என்பதும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே கைதுசெய்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

இலங்கை வரலாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 261 கிலோ நிறையுடைய ஹெரோயின் தொகையே, இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய தொகை கொண்ட போதைப்பொருளாக காணப்பட்டது. 

இந்நிலையில் நேற்று இங்கிருந்து மீட்கப்பட்ட 278 கிலோ நிறையுடைய 336 கோடி ரூபா பெறுமதிவாய்ந்த தொகையே இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட அதிகூடிய தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார். 

2 comments:

  1. need to impose capital punishment for drag dealers and no needs to keep them at Jail wasting public money for criminals
    with in one week or two weeks complete the judgement hung them
    then only country can be drugs free and save our young kids

    ReplyDelete
  2. Execution of death penalty is absolute necessary to obliterate lethal drug abuses.
    We have to act with zero tolerance in this crimes against humanity.

    ReplyDelete

Powered by Blogger.