Header Ads



JVP ரணிலுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு - சம்பந்தனுடனான சந்திப்பில் தெளிவாகியது

நாட்டில் புதிய பிரதமர் நியமனம் மற்றும் பிரதமர் நீக்கம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியலமைப்பு, அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளமையின் காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பிற்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பில் தலையீட்டினை மேற்கொள்வது குறித்து எமக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருகட்சிகளினதும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் பிமல் ரத்நாயக்க மற்றும் கே.டி.லால் காந்த என்போரும் கலந்துகொண்டிருந்தனர். இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க,

டந்த 26 ஆம் திகதி இந்நாட்டில் நடைபெற்றது அரசியல் ரீதியிலான சதித்திட்டமாகும். ஒரு சூழ்ச்சித் திட்டத்தின் மூலமாக புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கோ அல்லது அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 

கடந்த காலத்தில் இடம்பெற்ற செயற்பாட்டினால் ஏற்பட்ட ஜனநாயக மீறல் காரணமாக நாட்டின் மக்கள் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக வடக்கு மக்களும், அரசியலில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் நாங்களும் ஜனநாயக மீறலின் காரணமாக ஏற்படத்தக்க பின்விளைவுகளுக்கு முகங்கொடுத்திருந்தோம்.

எனவே ஜனநாயகம் எங்கே கேள்விக்குரியதாக்கப்பட்டாலும், எவ்வித செயற்பாடுகளால் ஜனநாயகம் பாதிப்பிற்கு உட்பட்டாலும் அப்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு முன்னிற்க நாம் தயாராகவுள்ளோம்.

No comments

Powered by Blogger.