Header Ads



மஹிந்த தரப்பினர் பணம், பதவியினை இலஞ்சமாக வழங்கி அனைவரயும் விலைக்கு வாங்கிவிட முடியாது

பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட மனுஷ நாணயக்கார, அப்பதவியினை இராஜினாமா செய்து, மீண்டும் எம்மோடு இணைந்து கொண்டுள்ளார். இவ்வாறு இன்னும் சில உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவித்த ராஜித சேனாரத்ன, மஹிந்த தரப்பினர் பணம், பதவியினை இலஞ்சமாக வழங்குவதன் மூலம் அனைவரயும் விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதுகருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஒரு பொது மேடையில் மனநலம் குன்றியவர்கள் போன்று செயற்படுபவர்களின் கருத்துக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? புதிதாக அரசியலில் பிரவேசித்துள்ள ஒருவரெனின் 'இவ்வாறு பேசலாம், இவ்வாறு பேசக் கூடாது, இது சரி, இது பிழை' என வழிநடத்தலாம். ஆனால் இத்தனை வருடகாலமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற ஒருவர் இவ்வாறு செயற்படும் போது அவரை வழிநடத்துவதில் பயனில்லை. தூங்குபவரை எழுப்ப முடியும். தூங்குவது போன்று நடிப்பவரை எவ்வளவு முயற்சித்தாலும் எழுப்ப முடியாது.

புதிய பிரதமர் நியமனத்தினையும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

116 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் பாராளுமன்றத்தில் எம்முடைய பெரும்பான்மையினை நிரூபிக்கும் வகையிலான கடிதத்தினை நாம் சபாநாயகரிடம் கையளித்திருந்தோம். 

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் அவ்விதமாக தம்முடைய பெரும்பான்மையினை எவ்வகையிலும் நிரூபித்திருக்காத நிலையிலேயே சபாநாயகர், புதிய அமைச்சரவை நியமனங்களையும், புதிய பிரதமர் நியமனத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்துள்ளார்.

இந் நிலையில் தற்போது மஹிந்த தரப்பு படிப்படியாகத் தோல்வியடைந்து வருகின்றது. ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் எதிரான அவர்களது செயற்பாட்டிற்கு எதிராக எமக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோரின் ஆதரவு கிடைக்கப்பெறும் என்றார். 

No comments

Powered by Blogger.