Header Ads



முதுகெலும்பில்லாத அமைப்புகளின் எச்சரிக்கைகளுக்கு அஞ்சி, நான் ஒருபோதும் முடங்கமாட்டேன் - றகீப் ஆவேசம்

'கல்முனை மேயருக்கு கிழக்கு மாகாண எல்லாளன் குழு எச்சரிக்கை' எனும் தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் மறுப்பறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் முதல்வர் றகீப் தெரிவித்திருப்பதாவது;

"கல்முனையில் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு செயற்பாட்டிலும் தான் ஒருபோதும் தமிழ் சமூகத்திற்கெதிரான நிலைப்பாட்டுடன் இன ரீதியாக செயற்படவில்லை.

நான் கல்முனையின் முதல்வர் என்ற ரீதியில் இப்பிரதேசத்தில் இன, மத, பிரதேச பாகுபாடு எதுவுமின்றி அனைவரும் இப்பிரதேச வாழ் குடிமக்கள் என்ற கண்ணோட்டத்துடன் எனது கடமைகளையும் சேவைகளையும் சமத்துவமாகவே முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த கோட்பாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துளியளவும் நான் மீறி செயற்படவில்லை. இனியும் அக்கோட்பாட்டில் நான் உறுதியாக பயணிப்பேன் என்றும் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

அந்த வகையில் மேற்படி குறித்த செய்தியில் எனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும். இவை முற்றிலும் பொய்யானதும் திட்டமிட்டு புனையப்பட்டதுமாகும்.

குறிப்பாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து குப்பைகளை சேகரித்து அகற்ற வேண்டாம் என்று எமது மாநகர சபை பணியாளர்களுக்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அவ்வாறான கீழ்த்தரமான செயலொன்றை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

சில தமிழ் இனவாத அமைப்புகளும் இனவாத ஊடகங்களும் தமிழ்- முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இவ்வாறான விசமப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. 

அண்மைக்காலமாக எனக்கெதிராக இவ்வாறான திட்டமிட்ட பிரசாரங்கள் சில இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. எமது கல்முனை மாநகர அபிவிருத்தியிலும் எனது அரசியல் உயர்ச்சியிலும் காழ்ப்புணர்வு கொண்டே அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையில் அக்கறை கொண்டுள்ள எவரும் இத்தகைய விசமப் பிரசாரங்களை நம்பி விடக்கூடாது என்று அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதேவேளை முகம்காட்ட மறுக்கும் முதுகெலும்பில்லாத அநாமேதய அமைப்புகளின் எச்சரிக்கைகளுக்கு அஞ்சி நான் ஒருபோதும் எனது பணிகளை முடக்கிக் கொள்ளப்போவதில்லை என சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்" என்றும் முதல்வர் றகீப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

-அஸ்லம் எஸ்.மௌலானா
முதல்வரின் ஊடகப் பிரிவு 

1 comment:

  1. மட்டக்களப்பிலும் அம்பாறையில் இராணுவ அரண்கள் மீதும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடாத்த தமிழ் பயங்காதவாதிகள் திட்டங்களை வகுத்துகொண்டு வருகின்றனர். ரணிலுடைய அரசாங்கத்தின் காலத்தில் தான் இலங்கையில் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பயங்கரவாதம் எழுச்சிபெற்றது

    ReplyDelete

Powered by Blogger.