Header Ads



வசீம் கொலை வழக்கும், விலக மறுக்கும் மகிந்தவும்


இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் தோல்வியடைந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கோரிக்கை விடுத்தும், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யாது இருந்து வருவதற்கான காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஷிரந்தி ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுக்கவே மகிந்த ராஜபக்ச பலவந்தமாக பிரதமர் பதவியில் இருந்து வருவதாக அந்த கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

ஷிரந்தி ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியின் அழைப்பு கிடைத்ததும் மகிந்த ராஜபக்ச தரப்பினர் உடனடியாக அரசாங்கத்தை அமைத்தாகவும் இல்லாவிட்டால், மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அரசியலமைப்பு விரோத சதித்திட்டத்தில் பங்காளியாக இருந்திருக்க மாட்டார் பொதுஜன பெரமுனவின் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வசீம் தாஜூடீன் கொலை வழக்கில், கொலையுடன் சம்பந்தப்பட்ட டிப்பெண்டர் வாகனம் ஷிரந்தி ராஜபக்சவின் பொறுப்பில் இருந்தது. இந்த டிப்பெண்டர் வாகனம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

தாஜூடீன் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தாஜூடீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்தும் சென்ற வாகனம் மற்றும் நபர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு கெமரா காணொளிகள் ஊடாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் அந்த வாகனம் மற்றும் அதில் பயணித்த நபர் சம்பந்தமாக செய்மதி புகைப்படம் மூலம் தகவலை அறிய நாசா நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கொலை குற்றம் சுமத்தப்படக் கூடிய சந்தேக நபர்கள் இருந்தால், அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறிய நீதவான், இந்த வழக்கு கொலை வழக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.