Header Ads



காத்திருந்து காத்திருந்து, காலங்கள் போகுது...!

சிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26ஆம் நாள், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆட்சி மாற்றம் பற்றி சிறிலங்கா தூதரகங்கள் மூலம், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது, எனினும், எந்தவொரு நாடும், வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

முன்னதாக, சீனத் தூதுவர் செங் ஷியுவான், மகிந்த ராஜபக்சவை கடந்த 12ஆம் நாள் சந்தித்து வாழ்த்துக் கூறியிருந்தார். எனினும், சீன அரசாங்கம் இந்தச் சந்திப்புக் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதிகாரபூர்வ வாழ்த்துச் செய்தி பீஜிங்கில் இருந்து அனுப்பப்படவும் இல்லை.

அதைவிட, மகிந்த ராஜபக்சவை சந்தித்த அதே நாளன்று, அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவையும், சீனத் தூதுவர் சந்தித்திருந்தார்.

பாகிஸ்தான் தூதுவர் நொவம்பர் 1ஆம் நாள் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த அதேவேளை, சபாநாயகரையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடியிருந்தார்.

வேறு எந்தவொரு நாடும், மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவோ, வாழ்த்துக் கூறவோ இல்லை.

புரூண்டியின் பிரதிநிதி ஒருவரை மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காண்பிக்கப்பட்டது. எனினும், மகிந்தவைச் சந்தித்தவர் ஒரு இராஜதந்திரியா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

சிறிலங்காவில் புரூண்டிக்கு தூதரகம் கிடையாது. புதுடெல்லியில் தான் தூதரகம் ஒன்று உள்ளது. அங்கு பெண் தூதுவர் ஒருவரே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அரசாங்கம் ஒன்று மாறும் போது, வாழ்த்துச் செய்தியை அனுப்புவது இராஜதந்திர நடைமுறையாகும். ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஒரு மாதமாகியும், எந்தவொரு நாடும் அதிகாபூர்வமாக வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.