Header Ads



பாராளுமன்றில் இன்று, நடந்தது என்ன..? (முழு விபரம்)

-Vi-

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்த நிலையில் தம்மை ஆளும் கட்சியென ஒருபோதும் கூற முடியாது எனவும் அதனால் அவர்களுக்கு அதிக இடம் வழங்க முடியாது என ரணில் தரப்பினரும் மோதிக்கொண்டனர். 

இந்நிலையில்  பாராளுமன்றத்தில் கட்சிகளின் பெரும்பான்மை அடிப்படையிலேயே  தெரிவுக்குழு அமைய வேண்டும் என ரணில் தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பில் ஆராய இன்று காலை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டம் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இதையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மன்றில் அறிவித்திருந்தார்.

இது குறித்து பாராளுமன்றில் அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடையும் நிலையில் இன்னும் பாராளுமன்றில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளனர். 

அவ்வாறு தமக்கு பெரும்பான்மை இருக்கின்றது என நிரூபித்தாலும் தாம் அவர்களுக்கு இடம்விட்டு விலகியிருக்க தயாராக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக மன்றில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் என ஒருவர் இல்லை எனவும் சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். அதன் அடிப்படையில் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு தெரிவுக்குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்க முடியும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, சபாநாயகரின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தெரிவுக்குழுவில் எனக்கும் ஒரு உறுப்புரிமை தேவையென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

நான் ஆளுங்கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது எனது முடிவு.

ஆனால் நான் எனது கட்சியின் மூலமே நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். அதன்படி எனது கட்சிக்கும் தெரிவுக்குழுவில் உறுப்புரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

தற்போது அராசாங்கம் என்று ஒன்று இல்லை, தெரிவுக் குழு குறித்து வாக்கெடுப்பை நடத்துங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க மன்றில் வேண்டுகொள் விடுத்தார்.



இதேவேளை, பாராளுமன்றில் அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்படவில்லையென விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்று மன்றில் தினேஷ் குணவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, அநுரகுமார திஸாநாயக்க, வீமல் வீரவன்ச, அஜித் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், ஆட்சியில் உள்ளவர்களுக்கே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமான அங்கத்துவம் வழங்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ  தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளமையால் அவர்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சபாநாயகரின் அறிவிப்புக்கமைய பெரும்பான்மையற்றவர்களுக்கு எவ்வாறு அதிகமான அங்கத்துவத்தை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் முன்னணியினர் கேள்வியெழுப்பினர். 

இதற்கு மத்தியிலேயே இன்று பாராளுமன்றம் கூடிய போது எழுந்த வாதப் பிரதிவாதங்களால் மஹிந்த அணியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் மன்றில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, சபாநாயகர் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென அறிவித்தார். 

இதனையடுத்து மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலருக்கு இலத்திரனியல் கோளாறு காரணமாக இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் இருந்தது. அவர்கள் வாய்மூலம் தமது வாக்கை செலுத்தினர்.

தெரிவுக்குழு உறுப்பினர் தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 121 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.