Header Ads



தொலைபேசியை பொலிசார் உடைத்தமையால், நடுவீதியில் இளைஞன் செய்த அட்டகாசம்

பொலிஸ் அதிகாரிகள் தனது கைத்தொலைபேசியை உடைத்து எறிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நபரொருவர் மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார்.

களுத்துறை நகரின் மத்தியில் பெற்றோல் போத்தல் மற்றும் லைட்டருடன் மின்கம்பத்தில் ஏறி நேற்று காலை போராட்டம் நடத்தியுள்ளார்.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தீ மூட்டி தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தியவர் களுத்துறை தெற்கு ஹொடபரகஹகேனே பகுதியில் வசிக்கும் கோரளகே சுஜித் தர்மசிறி என்ற 34 வயது நபராவார்.

களுத்துறை பொது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் காணாமல்போன குறித்த நபரின் கைத்தொலைபேசியில், பெண்ணொருவரின் புகைப்படம் இருந்துள்ளதுடன் அது தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரை பிணையில் விடுதலை செய்திருந்த நிலையில், அவரது தொலைபேசியை அவரைக்கொண்டு பொலிஸார் உடைத்தெறிய வைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மின்சார சபைக்கு சொந்தமான வண்டியும் தீயணைப்பு படைக்கு சொந்தமான வண்டியும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், குறித்த நபரின் அட்டகாசத்தை நகரிற்கு வந்த பல மக்கள் கண்டுள்ளனர்.

இந்நிலையில் மேல் மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் களுத்துறை நகரசபைத் தலைவரும் மின்சார சபையில் வாகனத்தில் ஏறி இரண்டு முறை குறித்த நபரை இறக்க முயச்சித்தபோதிலும் அவர் மின்கம்பத்தின் நடுவிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் அங்கிருந்த வாகனங்களை அகற்றியுள்ளனர்.

பகல் 12.30 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்ற பிக்குவின் கோரிக்கைக்கு அமைய அவர் மின்கம்பத்திலிருந்து இறங்கியுள்ளார்.

அதன்பின்னர் பிக்கு அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.