Header Ads



ஜமால் கசோக்கியின் ஜனாஸாவை, மதீனாவில் நல்லடக்கம் செய்யவேண்டும் - மகன் சாலா பேட்டி

துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க விரும்புவதாக அவரது மகன் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார். 

சவுதி அரேபியாவின் முடியாட்சியை மிக கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு வந்தவர் ஜமால் கசோக்கி. இவர் சமீபத்தில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது.

இந்த கொலை உலகின் பல்வேறு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சவுதி அரசுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்த சவுதி அரசு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜமால் கசோக்கியின் மகன் சாலா கசோக்கி, தனது தந்தையின் இழப்பை இன்று வரை நம்பமுடியவில்லை எனவும், அவரது பிரிவு மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது தந்தைக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டிய கடமை இருப்பதாகவும், அவரது உடலை இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மதீனாவில் உள்ள அல் பக்கியில் அடக்கம் செய்ய விரும்புவதாகவும் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஜமால் கசோக்கியின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை என்பதும், உடலை அடையாளம் காண முடியாதபடி முழுமையாக அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உடல் கிடைக்க வேண்டாமா?
    சர்வதேச அரசியல் நாடகம் வேறு பக்கம் திரும்பி விட்டது. துருக்கி இதனை வைத்து தனது அரசியல் நலன்களை மேம்படுத்திக் கொண்டது. நீதி, நியாயம் எல்லாமே நாடகம்.

    ReplyDelete

Powered by Blogger.