November 05, 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு கருவிடமும், சஜித்திடமும் காலில் விழாத குறையாக கேட்டேன் - ஜனாதிபதி மைத்திரிபால

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். 

'' மக்கள் மகிமை '' பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 உறுப்பினர்கள் எப்போதோ உறுதியாகிவிட்டனர். வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய பிரதமருடன் இணைந்து விரைந்து செயற்படவுள்ளேன். எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை.

நான் பிரதமர் பதவியை ஏற்குமாறு கரு ஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்தேன் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. காலில் விழாத குறையாகவே கரு ஜயசூரியவிடம் கேட்டேன். ஆனால் ஒரு நாள் கரு ஜயசூரிய ரணிலுடன் என்னிடம் வந்து இவருக்கு எதிராக எப்படி வருவது என்று என்னிடமே கேட்டார்.

அதேபால் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்து பிரதமர் பதவிக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் அவரும் அதற்கு மறுப்புத் தெரிவித்து ரணிலுடன் மோத முடியாதெனத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்து எதையும் செய்ய இயலாதென இருவரும் தெரிவித்ததனால் நான் சிந்தனை செய்தேன் நாட்டை அபிவிருத்தி செய்து வழிநடத்தக் கூடிய ஒருவரை பிரதமராக்க.

இதனால் ரணில் விக்கிரமசிங்கவை மோதிக்கொண்டு செல்லக்கூடிய மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதமர் பதவியை வழங்க நான் தீர்மானித்தேன்.

இதேவேளை, வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்ய முடியாது. இப்போது ஒரு கூட்டம் வெளிநாட்டுத் தூதரகங்கள் முன்னால் விழுந்து கிடக்கின்றது.

சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்தே இதற்கான தீர்மானத்தை எடுத்தேன். நான் தனியாகத் தீர்மானம் எடுக்கவில்லை. அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பின்படியே இடம்பெற்றன. இதில் எவ்வித சர்ச்சைகள் இருந்தால் யாரும் உயர்நீதிமன்றம் செல்ல முடியும்.

வடக்கிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். வீடமைப்புத் திட்டத்தை வடக்கில் நடைமுறைப்படுத்துவதற்கு சுவாமிநாதன் போன்ற அமைச்சர்கள் கடந்த அரசில் முட்டி மோதிக்கொண்டதினால்  ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. அதை நாம் இப்போது நடைமுறைப்படுத்துவோம்.

பெரும்பான்மை என்பது எப்போதோ உறுதியாகி விட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 உறுப்பினர்கள் எப்போதோ உறுதியாகிவிட்டனர். 70 வீதமான நாட்டு மக்கள் நான் எடுத்த முடிவு சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். 

இந்திய அரசை என்னுடன் பிரிப்பதற்காக ரணில் சதி வேலை செய்கிறார். அமைச்சரவை விடயங்களை வெளியில் திரிபுபடுத்திக்கூறி இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமக்கு பௌத்தத்தை கொடுத்த இந்தியாவுடன் நான் உறவை பேணுவேன். அவர்களுடன் சிறந்த உறவு பேணப்படும். என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன். எனது பயணத்தை தொடர்வேன்.

கடந்த மூன்றரை வருடங்களில் அனைவரிடத்திலும் வரி சுமத்தப்பட்டது. பழ வியாபாரியிடம் வரி, லொத்தர் விற்பவரிடம் வரி அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

Good character certificates to Karu and Sajith. He has insulted Mahinda as a third choice.

Absolute lies. As my3 said if Karu n Sajith refused to accept premiership, he should have resigned from the presidency.

One of the useless president in the world

Post a Comment