Header Ads



மகிந்தவுக்கு எதிரான, மனுவை விசாரிக்காதீர்கள் - நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல்

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க சட்ட ரீதியான உரிமை இல்லை என்பதால், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவைக்கு செல்லுப்படி தன்மை இல்லை என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று -30- மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன எதிர்ப்புகள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சியை சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, கனகீஸ்வரன், பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா எனக் கூறி, இரண்டு யோசனைகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த யோசனைகளுடன் சம்பந்தப்பட்ட ஹன்சார்ட் அறிக்கைகளை சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்பித்தார். பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என நாடாளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதால், அந்த பதவிகளை வகிக்க அவர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை எனவும் கனகீஸ்வரன் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க, நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளுக்கு அமைய நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கின் பிரதிவாதியான மகிந்த ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, மனுதாரர்கள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என வாதிட்டார்.

முதலில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குரல்களை அடிப்படையாக கொண்டு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 47(1) கீழ் யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை நிலையியல் கட்டளைச் சட்டங்களை நிறுத்திய பின்னர் விவாதத்திற்கு எடுக்கப்பட்டதாக கூறிய காமினி மாரப்பன, அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 47 (1) கீழ் எப்படி வாக்கெடுப்பை நடத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படியான யோசனையை நிறைவேற்ற முடியாது. நாடாளுமன்ற கலைக்கப்பட்டமை சட்டரீதியானதா இல்லையா என்பது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்குமாறு இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் எனவும் மாரப்பன கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை முதல் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் ஹன்சார்ட் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் பொய்யானது மற்றும் போலியானது எனக் கூறினார்.

மேலும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனுவில், மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை எனவும் அதனை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச சட்டரீதியாக பிரதமராக பதவி வகிக்க முடியாது எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க சட்ட ரீதியான உரிமையில்லை என தீர்மானித்து, அவரது நியமனத்தை செல்லுப்படியற்றது என உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவில் மகிந்த ராஜபக்ச உட்பட 49 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.