November 27, 2018

ஹக்கீமும், றிஷாட்டும் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்

ரணிலின் தலைமைத்துவத்தைக் காப்பாற்றினால்தான் தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் பாதுகாப்பானது என்பதை உணரும் ஹக்கீம், மனோ ஆகிய தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பொ து முன்னணி வேலைத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றனர் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பெரிய அரசியல் கட்சிகள் அவற்றின் பண்புகளில் மாற்றங்கள் ஏதும் நிகழாதவாறு அவதானமாக அவற்றின் அமைப்பு வடிவங்களை மாற்றுவதற்கு ஆயத்தமாகிவிட்டன. இந்த மாற்றம் இரண்டு கட்டங்களாக அரங்கேறுவதை அவதானிக்கலாம். 

முதல் கட்டம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்பும் இரண்டாம் கட்டம் ஒக்டோபர் 26 இல் நடந்த பிரதமர் மாற்றத்தின் பின்பும் அரங்கேறுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் அப்போதைய செயலர் மைத்திரியின் தாவலின் பின்பும் மஹிந்த ராஜபக்சவின் தோல்வியின் பின்பும் குலைவையும், பிரிவையும் சந்தித்தது.

மஹிந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற தனக்கான தனிக்கட்சியை உருவாக்கிக் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரிய வெற்றியைக் காட்டியதும், ஸ்ரீ.ல.சு. கட்சி கிடையாகப் படுத்துவிட்டது. ஆயினும் மஹிந்தவை மைத்திரி புதிய பிரதமராக நியமித்தவுடன், பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இரண்டறக் கலந்து வந்துவிட்டன. 

பொது ஜன பெரமுனவும்  சுதந்திரக் கட்சியும் இருக்கின்றன. இதில் சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் கட்சிகளான தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும் நடுவில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இவ்விரு பெரிய சிங்களக் கட்சிகளும் தமிழ் முஸ்லிம் சிறிய கட்சிகளும் இணைந்து தற்போது பேசப்படுவது போல் ஒரு பொது முன்னணியாகப் பதிவு செய்யப்பட்டு பொதுச் சின்னம் ஒன்றுக்குள்ளோ அல்லது மொட்டுக்குள்ளோ ஒன்றிக்குமானால்,மேற் குறித்த தமிழ் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் காலப் போக்கில் காணாமல் போய்விடும்.சிங்களக் கட்சிக் கூட்டில் தலை குனிந்திருக்கும் சிறுபான்மைத் தலைவர்கள் சிலர் பதவிகளில் மட்டும் குந்தியிருப்பதை நாம் காண நேரும்.

இதனைவிடவும் இந்த இரண்டு தமிழ்- முஸ்லிம் தலைவர்களும் நாடாளுமன்றில் தலை நிமிர்ந்தவர்களாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பது தத்தமது இனங்களுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமாகும்.

தேவாவும் அதாவுல்லாவும் தமது இரு கட்சிகளையும் இணைத்து தமிழ் பேசும் மாற்றுக் கூட்டு முன்னணியை அமைப்பது இன்னும் மேலானதாகும்.இவ்விணைவுக்கு இடையில் இருக்கும் தடை வடக்கும் கிழக்கும் இணைவது தொடர்பானது, ஆனாலும் பரிகாரம் இல்லாமல் போகுமா? காயம்பட்ட ஓரினம் காயம்பட்ட இன்னோர் இனத்துக்கு மருந்து தடவுவது போல ஒரு குணப்படுத்தல் முறைமை விடுதலைக்கு உரிய பண்பல்லவா?

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் ஜனாதிபதி, தான் பதவி வகிக்கும் காலத்தில் ரணிலைப் பிரதமாராக நியமிக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக இருப்பதால், இவ்வளவு காலமும் ஐக்கிய தேசிய முன்னணியை ஒரு கூட்டு முன்னணியாகப் பதிவு செய்ய மறுத்து வந்த ரணிலும் அவரது உயர் குடிக் கட்சிப் பிரமுகர்களும் தற்போது  அவர்களது கூட்டு முன்னணியைப் பதிவு செய்வதற்கு முயல்கிறார்கள்.

தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலை வந்தால் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை தக்கவைப்பது முடியாமல் போகும் என்பதை உணர்ந்ததால் இப்புதிய நிலை தோன்றியுள்ளது. 

ரணிலின் தலைமைத்துவத்தைக் காப்பாற்றினால்தான் தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் பாதுகாப்பானது என்பதை உணரும் ஹக்கீம், மனோ ஆகிய தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பொது முன்னணி வேலைத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்றனர். அண்மையில் ரணிலின் தூண்டுதலுக்கமைவாக மனோவும் ஹக்கீமும் ஊடகங்களுக்கு முன் தோன்றி ஐக்கிய தேசியப் பொது முன்னணி பற்றிய சாதகமான கருத்துகளை வெளியிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையை மாற்றி வைரத்தை (Diamond) முன்னணியின் பொதுச் சின்னமாக மாற்றுவதற்கான ஒப்புதல் அதிருப்தியுற்றிருக்கும் சந்திரிக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர்களை உள்ளீர்ப்பதற்கான உத்தியாகும். இது ஐ.தே. கட்சியின் அடையாளத்தை இழக்கவும் ரணில் தயாராகிவிட்டார் என்பதைத் தெரிவிக்கிறது. அதாவது, ரணில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் என்ற முகமூடியை அணிவதற்கு முயல்கிறார் என்பதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியும், சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியும் கூட்டைப் பதிவு செய்யுமானால் ஐ.தே. கட்சியும், சுதந்திரக் கட்சியும், முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆதரவளிக்கும்.

இந்தப் பச்சைக் கூட்டில் இணையும் சிறுபான்மைக் கட்சிகளும் காலப் போக்கில் காணாமல் போய்விடும். ஒரு சில தமிழ் முஸ்லிம் தலைவர்கள் மட்டும் கதிரைகளில் ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பர்.

பதவிக் கதிரைகளைப் புறந்தள்ளி ஹக்கீமும்,மனோவும், றிஷாட்டும் எதிர்க்கட்சியில் அமர்ந்து தமது இனங்களின் குரலாக ஒலிப்பது ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு நிகரானதாகும். தமிழ்- முஸ்லிம்- மலையகத் தமிழ் கூட்டு முன்னணியைத் தோற்றுவித்து மக்களைத் தோல்வியில் இருந்து விடுவிப்பது மக்கள் புரட்சிக்கு ஒப்பானதாகும்.

தற்போது நாம் தனி அரசியல்வாதிகளின் இரட்டைக் கொம்பு அரசியலை எதிர்கொள்கிறோம். அதாவது மைத்திரியும் சஜித் பிரேமதாசவும் இணைந்து தீட்டிய கொம்புத் திட்டம் செயல்படுகிறது என்று சிங்களப் புத்தி ஜீவிகள் கருதுவதாக அறியக் கிடைக்கிறது.

சம்பிக எதிர் கம்மன்பில மற்றும் ஜே.வி. பி எதிர் விமல் வீரவன்ச ஆகிய போட்டிக் குழுவாத அரசியலும் நிகழ் அரசியலில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது.

மதத் தலைவர்களின் ஆசீர்வாத அரசியலும் கோலோச்சுகிறது.
பன்சல வலைப் பின்னல் அரசியல், வழமை போல தனது வெற்றியை இம்முறையும் உறுதி செய்யத் துடிக்கிறது.இதன் துணைக் கோள்களான தீவிரவாதமும் நாட்டுப் பற்றும் நாட்டின் நடு மண்டபத்துக்குள் வந்து வரம் கேட்டு நிற்கின்றன.

இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலும் இலங்கையின் நெருக்கடி நிலையைத் தீர்க்காது போல் தெரிகிறது.


1 கருத்துரைகள்:

அரசியல் தத்துவ மேதையின் வாக்கு மூலம் !!!

Post a Comment