Header Ads



ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்க, சவூதி அரசிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின் முஹம்மத் தாஹிர் பன்தன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர். ரபத் இப்னு இஸ்மாஈல் இப்ராஹீம் பதர் ஆகியோரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸர் எச். அல் ஹரிதி ஊடாக குறித்த கடிதம் சவூதி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வருடா வருடம் கிடைக்கப்பெறுவதாக சுட்டிக்காட்டி இவ்வருடம் 5ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக செயற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. உங்களோடு போட்டிக்கிட்டு ஒருவரும் இல்லாததால் நிம்மதியாக உங்கள் பொறுப்பை செய்யலாம்.

    ReplyDelete

Powered by Blogger.