Header Ads



16 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்திய மொஹம்மத் ஷசாத்


டி 10 லீக் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் 16 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் மொஹம்மத் ஷசாத்.

பெங்கால் டைகர்ஸ், கேரளா நைட்ஸ், மராத்தா அரேபியன்ஸ், நார்தன் வாரியர்ஸ், பாக்டூன்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், ராஜ்புட்ஸ், சிந்திஸ் ஆகிய எட்டு அணிகள் இத்தொடரில் பங்கெடுக்கின்றன.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதல் ஆட்டத்தில் சிந்திஸ் - ராஜ்புட்ஸ் அணிகள் மோதின. ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்திஸ் அணி 10 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்தன.

ஷேன் வாட்சன் 20 பந்துகளில் நான்கு பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 42 ரன்கள் குவித்திருந்தார். ராஜ்புட்ஸ் அணியின் முனாப் படேல் 2 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஜ்புட்ஸ் அணியின் தொடக்க வீரராக அணித்தலைவர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொஹம்மத் ஷசாத் களமிறங்கினர்.

முதல் ஓவரின் முதல் பந்தில் ஷசாத் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை எதிர்கொண்ட அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஒரு ரன் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் மூன்று பௌண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார் ஷசாத்.

இரண்டாவது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீச, ஷசாத் ஒரு சிக்ஸர் மற்றும் மெக்கல்லம் இரண்டு சிக்ஸர் விளாசினர்.

மூன்றாவது ஓவரை இலங்கையின் திசேரா பெரேரா வீச, அதில் ஒரு பந்தை கூட வீணடிக்காமல் அனைத்தையும் எல்லைக்கோட்டுக்கு துரத்தினார் ஷசாத். மூன்று பௌண்டரி, மூன்று சிக்ஸர் என பெரேராவின் ஓவரில் மட்டும் 30 ரன்கள் எடுத்தார். 12 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தார்.

நான்காவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி ராஜ்புட்ஸ் அணியை வெற்றிபெற வைத்தார் ஷசாத். நேற்றைய போட்டியில் அவர் 16 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். நான்கு ஓவர்கள் முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி போட்டியை வென்றது ராஜ்புட்ஸ்.

யோ-யோ

இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய யோ - யோ எனும் பரிசோதனையில் தகுதி பெறுவது முக்கியமானது. இந்த பரிசோதனை குறித்து பலர் விமர்சித்துவரும் நிலையில் நேற்றைய தினம் ஷசாத்திடம் இது குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு ''சிலர் யோ-யோ பரிசோதனையில் 20 புள்ளிகள் எடுத்தாலும் அவர்களால் ஒரு சிக்ஸர் கூட அடிக்கமுடியாது. நான் யோ-யோ பரிசோதனை குறித்து கவலைப்படுவதில்லை'' என அவர் தெரிவித்ததாக டைம்ஸ் நவ் நியூஸ் இணையதளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.