Header Ads



பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம், 10 வான்கதவுகள் திறப்பு - பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை

கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு பிரிவுக்கான பதில் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பிரதேச செயலகப் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிற்ற ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்க, பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவுஏ ற்படும் ஆபத்துக் காணப்படுகிறது. 

இது குறித்து மக்களை அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு ஆபத்துள்ள இடங்களை விட்டு பாதுகாப்பு இடங்களுக்கு சென்று குடியமருமாறும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ராஜாங்கனை தெதுறு ஓயா மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசத்தில் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்றமையே இதற்கான காரணமாகும். தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் நேற்று திறக்கப்பட்டன. தம்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி ஆறு அங்குல அகலத்தில் திறக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதியில் குடியிருப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கலாஓயா நீர்த்தேக்கதின் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.