Header Ads



எர்துவானுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு - ஜமால் கொலை தொடர்பில் முக்கிய பேச்சு


துருக்கி சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி காணாமல்போன விவகாரம் குறித்து துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திலேயே அவர் கொல்லப்பட்டதாக துருக்கி ஊடகம் புதிதாக குற்றம்சாட்டி இருக்கும் நிலையிலேயே நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக சவூதிக்கு சென்ற பொம்பியோ கடந்த செவ்வாயன்று அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை சந்தித்தார். செய்தியாளர் காணாமல் போனதுடன் தொடர்பு இருப்பதை சவூதி அரேபியா நிராகரிப்பதாக பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி இந்த துணைத் தூரகத்திற்குள் நுழையும்போது கசோக்கி கடைசியாக காணப்பட்டுள்ளார். எனினும் அவர் தூதரகத்தில் இருந்து வெளியேறியதாக சவூதி கூறி வருகிறது.

துணைத் தூதரகத்திற்குள் செய்தியாளர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்த விபரங்களை துருக்கியின் அரச ஆதரவு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

கசோக்கி காணாமல்போனதுடன் சந்தேகப்படும் 15 பேரில் நால்வர் சவூதியின் பலம்மிக்க முடிக்குரிய இளவரசருடன் தொடர்புபட்டவர்கள் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த விடயத்தில் அவசரப்பட்டு சவூதி மீது குற்றம்சாட்டுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவதானத்துடன் உள்ளார். இந்த விவகாரம் சவூதி மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இந்த விடயம் குறித்து சவூதி வெளிப்படையுடன் செயற்பட வேண்டும் என்று ஜீ7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே கசோக்கி விவகாரத்தை அடுத்து சவூதியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் விலகிக் கொண்டுள்ளார்.

1 comment:

  1. May Allah Protect all Muslim Leaders and Guide them toward Islamic way of life. Also make our public not to protest these leaders for their mistakes, which even Islam ask us to be passion with them till they keep praying, if they ask you not to follow Allah and Rashool, then you do not obey them.

    ReplyDelete

Powered by Blogger.