October 07, 2018

"வெற்றி கிடைக்கும்வரை போராட, புத்தளம் மக்கள் உறுதிபூண்டனர்"

/மர்லின் மரிக்கார்/

வந்தோரை வாழவைக்கும் பூமி புத்தளம். இதற்கு வரலாற்றுக் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 543 இல் விஜயனும் அவரது 700 தோழர்களும் புத்தளத்திற்கு அருகிலுள்ள தம்பபன்னி ஊடாகவே இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தனர் என்கிறது மகாவம்சம். அவர்கள் தம்பபன்னியை தளமாகக் கொண்டே தமது முதலாவது இராச்சியத்தையும் அமைத்தனர். அதேபோன்று 1300 களில் மொரோக்கோ நாட்டின் நாடுகாண் பயணியான இப்னு பதூதா புத்தளத்தின் ஊடாகவே இலங்கைக்குள் வந்தார். இவை மாத்திரமல்லாமல் 1990 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தினரால் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் புத்தளத்திற்கு இடம்பெயர்ந்து கடந்த 20 வருடங்களாக அங்கேயே தங்கி வாழ்கின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் 2010 இன் பின்னர் சொந்த இடங்களுக்கு திரும்பினர்.

இவ்வாறு வந்தாரை வாழவைக்கும் சிறப்புமிக்க புத்தளத்தில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் சில வேலைத் திட்டங்களால் புத்தளத்தின் சுற்றாடலும், இயற்கை ஒழுங்கும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அவை பிரதேச மக்களின் சுகவாழ்விலும் தாக்கம் செலுத்தக்கூடியனவாக இருக்கின்றன. சிமெந்து தொழிற்சாலை, இறால் பண்ணைகள், நுரைச்சோலை அனல் மின் நிலையம், தும்பு உற்பத்தி கைத்தொழில் என்பன ஏற்கனவே இப்பிரதேசத்தின் சுற்றுசூழல் பாதிப்பில் அதிக தாக்கம் செலுத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் கொழும்பில் சேருகின்ற குப்பைகளை புத்தளம் அறுவைக்காட்டுக்கு கொண்டு வருவதற்கு தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2014 இல் கழிவகற்றல் என்பது கொழும்பில் பெரும் பிரச்சினையாக உருவானபோது, சுமார் 170 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள அறுவைக்காட்டுக்கு கொண்டு சென்று அங்குள்ள கிடங்குகளை நிரப்புவதன் மூலம் தீர்வுகாண திட்டமிடப்பட்டது. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (ஈ.ஐ.ஏ) படி வில்பத்து சரணாலயத்தின் பாதுகாப்பு வலயம் (buffer zone) அதாவது கங்கேவாடிய என்ற மீன்பிடிக் கிராமத்திற்கு அருகிலுள்ள கிடங்குளை நிரப்பவே திட்டமிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் வில்பத்து சரணாலயமும். அங்குள்ள யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு உயிர்பல்வகைமைப் பாதுகாப்பு அமைப்புகளும், சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பைத் வெளிப்படுத்தினர். அத்தோடு வனஜீவராசிகள் திணைக்களம் இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுத்தது. அதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பின்னர் இத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. என்றாலும் 2017 ஏப்ரல் மாதம் சிங்கள,- தமிழ் புத்தாண்டு தினத்தில் கொழும்பு மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்ததில். பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு மேலும் பலர் காயங்களுக்கும் உள்ளாகினர்.

அதனால் கொழும்பு குப்பைகளை மீதொட்டமுல்லையில் கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு அண்மித்த வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு பிரதேசவாசிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இக்குப்பைகளை அறுவைக்காட்டுக்கு கொண்டு சென்று அங்குள்ள கிடங்குளை நிரப்பும் திட்டம் மீண்டும் மேலெழுந்தது.

இதன் நிமித்தம் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி பாரிய கொழும்புப் பிரதேசத்தில் சேருகின்ற குப்பைகளை களனியிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 45 ஏக்கர் காணிக்கு கொண்டு வந்து அங்கிருந்து கொல்கலன் ஊடாக ரயில் மூலம் அறுவைக்காட்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. தினமும் 1200 மெற்றிக் தொன் (12 இலட்சம் கிலோ) குப்பை கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முதல் 10 வருடங்களில் 64 ஏக்கர் நிலத்தை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது சுண்ணாம்புக்கல் அகழப்படும் இடத்திற்கும் கரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படுகின்றது. இந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் தான் வில்பத்து சரணாலயம் உள்ளது. அதேநேரம் இத்திட்டத்திற்கு மேற்கு புறமாக 100, 150 மீற்றர்கள் தூரத்தில் புத்தளம் களப்பும் உள்ளது.

தற்போதைய திட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தை நிரப்புவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது சுண்ணாம்புக்கல் அகழ்வு இடம்பெறும் பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. அங்கு சுண்ணாம்புக்கல் அகழ்வுக்காக வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தை 274 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 115 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி முன்வந்தது. ஆனால் உலக வங்கி இத்திட்டம் அதன் விதிமுறைகளுக்கு அமைய வேண்டும் என எதிர்பார்த்தது. அதாவது உலக வங்கியின் அறிக்கைகளின்படி இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு தெரிவு செய்யப்படும் இடம், மக்கள் குடியிருப்பு இல்லாத இடமாக இருக்க வேண்டும். எதிர்க்காற்று வீசாத பகுதியாகக் காணப்பட வேண்டும். அதாவது யானை உள்ளிட்ட விலங்குகள் வராத இடமாக இருப்பது அவசியம். மேலும் சுண்ணாம்புக்கல் உள்ள இடங்களில் இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது. ஏனெனில் சுண்ணாம்புக்கல் உள்ள இடத்தில் சுத்தமான நீர் காணப்படும். அத்தோடு திண்மக்கழிவு பொருட்களை சுண்ணாம்புக்கல் உள்ள பிரதேசங்களில் நிரப்பும் போது திண்மக்கழிவுகளின் பாரம் காரணமாக சுண்ணாம்புக்கல் பாறைகள் உடைந்து தாழிறங்கும். அதனால் அப்பிரதேசங்களில் மேலும் குழிகள் ஏற்படும் சாத்தியங்கள் மிக அதிகம். அதேநேரம் நில அதிர்வு மற்றும் நிலத்தில் அதிர்வு ஏற்படக்கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கும் பிரதேசங்களிலும் இவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முடியாது.

இருந்தும் உலக வங்கியின் விதிமுறைகளுக்கு அப்பால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாலும் இத்திட்டத்தை செயற்படுத்தும் நிறுவனம் இத்திட்டம் தொடர்பில் முன்னனுபவத்தைக் கொண்டிராத நிறுவனமாக இருப்பதாலும் இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ள பணத்தை உலக வங்கி இரத்து செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

'இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பிரதேசத்தில் தற்போது சுமார் 7 யானைகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வறட்சிக்காலத்தில் பல வனவிலங்குகள் உயிரிழக்கும். ஆனால் யானைகள் அவ்வாறு உயிரிழப்பதில்லை. ஏனெனில் அவை நீர் இருக்கும் இடத்தை தேடிச்சென்று நீரைப் பெற்றுக்கொள்ளும். அதாவது, 19 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள நீரையும் தன் சுவாசத்தின் மூலம் கண்டறியும் சக்தி யானைகளுக்கு இருப்பதாக வனவிலங்குகள் தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் இப்பகுதியில் குப்பைகளை கொட்டத் தொடங்கும்போது யானை, மனிதன் சண்டை தீவிரமடையும். இந்தப் பகுதியிலுள்ள 5 கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் தலைவிரித்தாடும். அங்கு மக்கள் வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். விவசாய நிலங்களும் அழிவடையும்' என்று கொழும்புக் குப்பைகளை அறுவைக்காட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு வரும் திட்டத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் அமைப்பின் தலைவரான எஸ்.எம். முபாரக் ஆசிரியர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை விஞ்ஞான பட்டதாரியும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சுற்றுசூழல் அறிவியல் பட்டபின்படிப்பபு டிப்ளோமா பட்டதாரியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான அர்ஷத் அலி, 'கொழும்பிலிருந்து தரம் பிரிக்காமல்தான் குப்பைகள் கொண்டு வரப்படவுள்ளது. அதனால் இக்குப்பைகளிலிருந்து ஒருவகைத் திரவம் வடியும். அது விஷத்தன்மை கொண்ட திரவம். அத்திரவம் நிலக்கீழ் நீரில் கலக்கும். அதன் விளைவாக குடிநீர் அசுத்தம் அடையும். இதன் விளைவாக தென்னை, வாழை, மரமுந்திரிகை, கொய்யா உள்ளிட்ட பிரதேசத்தின் பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படும்'.

'அதேநேரம் இத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த 64 ஏக்கர் நிலப்பகுதியானது புத்தளம் களப்புக்கு மிக அண்மித்ததாக இருப்பதால் நிலக்கீழ் நீரோட்டத்தின் ஊடாக இந்நச்சுத் திரவம் களப்பில் கலக்கும் அபாயம் அதிகமுள்ளது. அதனால் இப்பிரதேசத்தின் மீன்பிடி, இறால் வளர்ப்பு என்பனவும் பெரிதும் பாதிக்கப்படும். அத்தோடு உப்பு உற்பத்தியும் பாதிக்கப்டும்'.

“மேலும் குப்பைகளைக் கொண்டு ஒரு பிரதேசத்தை நிரப்பும்போது அதிலிருந்து மீதேன் வாயு வெளியாகும். பூகோள வெப்பமாதலுக்கு காபன் டயக்சைட்டை விடவும் 23 மடங்கு இந்த மீதேன் வாயு பங்களிப்பு நல்கும். மீதேன் வாயுவானது விரைவாக தீப்பற்றும் தன்மை கொண்டது. அதனால் புத்தளம் வறண்ட பிரதேசமாக இருப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் அபாயமும் தோற்றம் பெறும். அத்தோடு காட்டுத் தீக்கு முகம் கொடுக்கும் அச்சுறுத்தலை வில்பத்து சரணாலயம் எதிர்கொள்ளும். புத்தளத்தின் உஷ்ணம் மேலும் அதிகரிக்கும்” என்றும் சுட்டிக்காட்டுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் அர்ஷத்அலி.

'இவ்வாறு குப்பைகளை கொண்டு நிரப்பப்பட்ட அமெரிக்க பிரதேசமொன்றின் அனுபவமொன்றையும் அவர் குறிப்பிட்டுக் கூறத்தவறவில்லை. அமெரிக்காவின் நியூஜேர்சி பிரதேசத்தில் 1967 -1978 வரையான பத்து வருட காலப்பகுதியில் இவ்வாறு குப்பைகளைக் கொண்டு நிரப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக பிரதேசத்தின் நிலக்கீழ் நீர் அசுத்தமடைந்தது. அதனால் அங்கு வாழ்ந்த மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அதன்பின்னர் அப்பகுதியை சுத்தப்படுத்தும் வேலைகள் 1991ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டன.

அதாவது அப்பகுதியில் நிரப்பப்பட்ட குப்பைகள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. அப்பிரதேசத்தின் ஐந்தரை அடி உயரத்திற்கு மண்ணும் அகற்றப்பட்டு வேறு இடத்திலிருந்து மண் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டது. இவ்வாறு அப்பகுதியை சுத்தப்படுத்தும் திட்டம் 1991 இல் ஆரம்பிக்கபட்பட்டு 27 வருடங்கள் கடந்தும் இன்னும் முற்றுப்பெறவுமில்லை. பிரதேசம் சுத்தமடையவுமில்லை. இது தொடர்பான தகவல்களை அமெரிக்காவின் ஈ.பி.ஏ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க பிரதேசத்தின் மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலரான பொறியிலாளர் எச்.எஸ் நப்ராஸ், “இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் இடம் பொறுத்தமற்ற பிரதேசமாகும். இவ்வாறான திட்டத்தை முன்னெடுப்பதற்கு நில அதிர்வு இடம்பெறாததும், நிலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாததுமான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்”.

“ஆனால் இத்திட்டம் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு சுமார் ஒரு கிலோ மீற்றர்கள் தூரத்தில் இன்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்படுகின்றது. இங்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் ஏற்படுத்துகின்ற அதிர்வுகள் காரணமாக ஒரு கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள கரைத்தீவு பிரதேசத்தின் பல வீடுகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன” என்கிறார் நப்ராஸ்.

ஆகவே, திண்மக்கழிவுப் பொருட்கள் பல்வேறுவிதமான தாக்கங்களையும் பாதிப்புக்களையும் சுற்றாடலுக்கும் உயிரின ஆரோக்கியத்திற்கும் ஏற்படுத்தக்கூடியதாகும். அதன் காரணத்தினால் தான் இத்திட்டத்திற்கு புத்தளம் பிரதேச மக்கள் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டத்திற்கு இன, மத, கட்சி பேதங்கள் பாராது சகலரும் ஆதரவு நல்குவதோடு போராட்டத்தில் பங்குபற்றவும் செய்கின்றனர். சர்வமதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் உட்பட சகல மட்டத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'புத்தளத்தை பாதுகாப்போம். புத்தளத்தின் சுற்றாடலைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் கொழும்பு உள்ளிட்ட வெளிப்பிரதேச கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டுவரும் திட்டம் முழுமையாக கைவிடப்படும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a comment