Header Ads



மூடிய அறைக்குள் பேசிய இரகசியம், கடைசி அமைச்சரவையில் பேசியதை துல்லியமாக பெற்ற மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மூடிய அறைக்குள் தனியாக நடத்திய சந்திப்பின் போது, தன்னைக் கொல்ல ‘றோ’ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே பேசப்பட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியில் நேற்றுமுன்தினம் இந்திய – சிறிலங்கா பிரதமர்கள், தத்தமது பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தினர்.

இதற்குப் பின்னர், மோடியும், ரணிலும் தனியாக – மூடிய அறைக்குள் சந்தித்துப் பேசினர். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து மர்மமாக இருந்து வந்த நிலையில், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், “அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய இருதரப்பு பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் ‘றோ’ பற்றிக் கூறியது தொடர்பான எந்த விடயமும், கலந்துரையாடப்படவில்லை.

இந்தக் கலந்துரையாடலில், இந்திய- சிறிலங்கா கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்துவது மற்றும் தடைகளை அகற்றுவதிலேயே பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, மோடியும், ரணிலும் நடத்திய தனியான சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடாமல் இரண்டு தரப்புகளும், விலகிக் கொண்டன.

எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாகவே ரணிலும், மோடியும் தனியாக சந்தித்த போது முக்கியமாக கலந்துரையாடியதாக இந்த விடயங்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் பற்றிய துல்லியமான படத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து, இந்தியப் பிரதமர் பெற்றிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என, சிறிலங்கா பிரதமருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது.” என்றும் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. பணம்-பதவிகளுக்காக அன்று தமிழர்களை காட்டிகொடுத்தவர்கள், இப்போ அதை விட அதிகமாக கிடைத்தவுடன், ஜனாதிபதியை காட்டி கொடுத்து விட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.