Header Ads



அலரி மாளிகையில் இருந்து, ஓடிய ஜனாதிபதி - நடந்தது என்ன..?

அலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும், ‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளிலான மாநாடு நேற்றுக்காலை அலரி மாளிகையில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டை, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்திருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. இங்கு அவர் முக்கிய உரை நிகழ்த்தவும் ஏற்பாடாகியிருந்தது.

எனினும், மாநாட்டின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர், சற்று நேரத்தில், பிரதான மாநாடு ஆரம்பமாக முன்னரே, மண்டபத்தில் இருந்து தனது மெய்க்காவலர்களுடன் வெளியேறினார்.

முக்கிய பிரமுகர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போதும், சிறிலங்கா அதிபர் பார்வையாளர் பகுதியிலேயே அமர்ந்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் பூகோள பொருளாதார திட்டத்தின் தலைவர் கலாநிதி கணேசன் விக்னராஜா, பெருங்கடல்களுக்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் மேடைக்கு வந்தனர்.

அப்போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஏன், மேடைக்கு வராமல் அமர்ந்திருக்கிறார் என்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டார்.

அவ்வேளை அரங்கு மிகவும் அமைதியாக இருந்தது. அப்போது சிறிலங்கா அதிபர், அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுடன் முணுமுணுத்து எதையோ கூறியதைக் காண முடிந்தது.

அதற்குப் பின்னர், சிறிலங்கா அதிபர் அவசர விடயமாக அரங்கில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவர்  அங்கிருந்து வெளியேறினார்.

அதேவேளை, மாநாட்டில் அவரது பங்கு தொடர்பாக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியப்படுத்தப்படவில்லை என்றும், உரையாற்றுமாறு கேட்கப்படவில்லை என்றும், சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிலங்கா அதிபர் வெளியேறியதை அடுத்து, பேச்சாளர்கள் வரிசையில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். எனினும் அவர் அதனை நிராகரித்து விட்டார்.

இதையடுத்து. சபாநாயகர் கரு ஜெயசூரிய மேடைக்கு அழைக்கப்பட்டு, சிறிலங்கா அதிபருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர வைக்கப்பட்டார். எனினும் அவர் உரையாற்றவில்லை.


No comments

Powered by Blogger.