Header Ads



தன்னை புதைக்கத் திட்டமிட்டவர்களுடன், கூட்டுச் சேரமாட்டார் மைத்திரி – சஜித் நம்பிக்கை

2015  அதிபர் தேர்தலுக்கு பின்னர், தன்னைப் புதைக்கத் திட்டமிட்டவர்களுடன் இணைந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கமாட்டார் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அனுராதபுரவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ”2015இல் தனக்கு அளிக்கப்பட்ட மக்களாணைக்கு மாறாக, சிறிலங்கா அதிபர் செயற்படமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தனது கட்சிக்கு விசுவாசமானவராக மைத்திரிபால சிறிசேன இருந்த போதிலும், சரத் பொன்சேகா, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க போன்றவர்களுக்கு நேர்ந்த கதியை நன்றாகத் தெரிந்திருந்த போதிலும், 2015இல் மிகவும் கடினமான பணியைச் செய்ய அவர் முன்வந்தார்.

2015 அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்திருந்தால், ஆறு அடி நிலத்துக்குள் அவரது கதை முடிந்திருக்கும்.

அப்படியான ஒரு சூழ்நிலையில், யாரும் செய்ய முன்வராத ஒரு நேரத்தில், மைத்திரிபால சிறிசேன முன்வந்தார். அவரது அந்த செயலுக்காக ஐதேகவினரும், எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் நன்றியுடன் இருக்க வேண்டும்.

2015இல் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முற்படுகின்றன. மீண்டும் ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.