Header Ads



"சிறிசேனவுடன் இடைக்கால அரசாங்கத்தை, அமைப்பது முட்டாள்தனமானது"


பொது எதிரணியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது என்ற யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்த்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிசின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த யோசனையை கடுமையாக  எதிர்த்துள்ளார்.

கிராமங்களில் வாழும் மக்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் கடுமையாக எதிர்க்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் நான் இடைக்கால அரசாங்கத்தை  எதிர்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் குமாரவெலகமவும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை கடுமையாக எதிர்த்துள்ளார்.

தலைமை வேண்டுகோள் விடுத்தால் நான் அதற்கு சம்மதிப்பேன் என தெரிவித்துள்ள அவர் என்றாலும் இடைக்கால அரசாங்கம் உருவானால் நான்  எதிர்கட்சி ஆசனத்திலேயே அமருவேன் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ள ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது முட்டாள்தனமான முடிவு என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் சம்மதத்துடனேயே இடைக்கால அரசாங்கம் அமையும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.