Header Ads



வடகொரியா, எதியோப்பியா பட்டியலில் இணைந்த சிறிலங்கா

எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி.

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (Henley Passport Index) தொடர்பான 2018ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நுழைவிசைவு இன்றி பயணம் செய்யக் கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், இதனைச் சார்ந்த பிற தரவுகளின் அடிப்படையிலும், நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி தரவரிசைப்படுத்தியுள்ளது.

106 நாடுகளின் கடவுச்சீட்டுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சிறிலங்காவின் கடவுச்சீட்டு 99 ஆவது இடத்தில் உள்ளது. இதே இடத்திலேயே வடகொரியா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில், சிங்கப்பூரைப் பின்தள்ளி இம்முறை ஜப்பான் கடவுச்சீட்டு முதலிடத்தில், உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் மியான்மாரும் ஜப்பானிய கடவுச்சீட்டுக்கு நுழைவிசைவு பெறத் தேவையில்லை என அறிவித்ததை அடுத்து, ஜப்பானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, 190 நாடுகளுக்கு நுழைவிசைவு இன்றிப் பயணம் செய்ய முடியும்.

189 நாடுகளுக்கு நுழைவிசைவின்றிப் பயணம் மேற்கொள்ளக் கூடிய சிங்கப்பூர் கடவுச்சீட்டு இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.

முன்னர் இரண்டாமிடத்தில் இருந்த ஜேர்மனி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாமிடத்தில், தென்கொரியா கடவுச்சீட்டும் உள்ளது.

நான்காமிடத்தில், பிரான்ஸ், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, சுவீடன், ஸ்பெய்ன்  ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் உள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கடவுச்சீட்டுகள் ஐந்தாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளன.

1 comment:

  1. But as per the World passport index organization web mentioned that Sri lankan passport world rank 83 & can travel without visa for 47 countries.

    ReplyDelete

Powered by Blogger.