October 08, 2018

பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?

ஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர்ந்தாலும் எங்கள் நாட்டு சிறுவர்களை கடத்த முடியாது. காரணம், அந்நாடுகளில் சிறுவர்கள், பெண்கள் அனைவருமே தற்காப்புக்கலை பயின்றவர்கள்.

இது இவ்வாறிருக்க நமது பகுதிகளில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்காக பள்ளிவாசல்களுக்கு வருகின்ற இளைஞர்களை வைத்து நமது சமூகத்தின் வலுவை நாம் கண்டுகொள்ளலாம்.

இமாம் மிம்பரில் குத்பா உரை நிகழ்த்தும்போது பள்ளிவாசல் சுவர்களிலும் தூண்களிலும் தங்களுடைய முதுக்குப்புறங்களை முட்டுக்கொடுத்த வண்ணம் அமர்ந்திருப்பவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களாகவே காணப்படுகிறார்கள். இதற்கு எந்தவூர் பள்ளிவாசல்களும் விதிவிலக்கல்ல.

அண்ணளவாக ஒரு மணிநேரம் கூட இவர்களால் 'சைட் சப்போர்ட்' இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிவதில்லை. காரணம் சோம்பேறித்தனம், உடல்ரீதியான பலவீனம், ஆர்வமின்மை. வலுவோடு வாழவேண்டிய இளைஞர் சமுதாயம் இன்று வலுவிழந்த பலவீனமான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஒருபக்கம் தொழிநுட்ப சாதனங்களில் பொழுதை கழிப்பதால் விளையாட்டுக்களுக்கு அவசியப்பாடு ஏற்படுவதில்லை. இதனால் உடலும் உள்ளமும் ஒருவகையான இறுக்கமான நிலைக்குள் தள்ளப்பட்டு அது சோம்பேறித்தனத்தையும் ஆர்வமின்மையையும் ஏற்படுத்துகின்றது.

மறுபுறத்தால் இன்றைய இளைஞர்களுக்குள் புகுந்திருக்கும் போதைப்பொருள் பாவனை. இது உடல்ரீதியான பலவீனத்தை மட்டுமன்றி சிந்தனாரீதியான மந்த நிலையையும் ஏற்படுத்துகின்றது. சமுதாயரீதியான நோக்கங்கள் இலக்குகளோடு பயணிக்கவேண்டிய இளைஞர்களை இந்த போதைப்பொருட்கள் ஒருவகையான கனவுலகிற்குள் தள்ளிவிட்டு எதிர்காலத்தை காவுகொள்கின்றன.

இளமைப் பருவம் என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இதைப்பற்றி பிரத்தியேகமாகவே மறுமையில் கேள்வி கணக்குகள் இருக்கின்றன. சிறுவயதில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு உடல்ரீதியான பேணுதலை ஆர்வமூட்டி வளர்ப்பது அவசியம். உடற்பயிற்சி, தற்காப்புக்கலை என்பன இப்போது சமூகத்தில் அருகிவருகின்ற துறைகளாக மாறிவிட்டன.

ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய இளமைப்பருவத்தில் ஏதாவது ஒரு விளையாட்டோடு தொடர்புற்றவனாக இருப்பது அவசியம். அதிலும் தற்காப்புக்கலை சார்ந்த விளையாட்டுக்கள் மிகவும் அவசியம்.

-முஹம்மது நியாஸ்-

3 கருத்துரைகள்:

அவசியமான கருத்துக்களை அழகாய் உரைத்தீர்கள். 

மேலும், ஜூம்ஆத் தொழுகைக்காக வருவோர்களை முடிந்தவரை முன்னால் அமர வைப்பதற்காக பள்ளிவாசல்களில் சிலரை  நியமிப்பது ஏற்றம்.

தவிரவும், இளம் சமுதாயத் தினருக்கான முக்கியமான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும்  சொற்பொழிவின் இறுதிப் பகுதியில்  வைத்துக் கொள்வது நலம்.

ஏனெனில், பலவீனமான அவர்களில் அநேகர் தாமதமாகியே வருகிறார்கள்.

அமைதியைப் பேண ஆங்காங்கே அறிவுறுத்தல்களை காட்சிப்படுத்தலாம்.

கிராமத்திற்கான கிலாபா போன்றதே பள்ளிவாசல்களும் அவற்றின் பொறுப்புக்களும். 

ஆதலால், அப்பிரதேச மக்களின்  தேவைகள் அங்கு அலசப்படுவது அவசியமாகிறது.

எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் அரசியலாளர்கள் பள்ளிவாசலின் உள்ளிருந்தே தெரிவு செய்யப்பட்ட வேண்டும்.

முஹம்மது நியாஸ் அவர்களும் Mahibal M. Fassy அவர்களும் சமகால உண்மை நிலைமைகளை மிகத் துள்ளியமாகப் பதிவிட்டுள்ளனர். தற்போதைய பெரும்பாலான மஸ்ஜிதுகள் இஸ்லாமியர்களின் மத்திய நிலையம் என்ற முக்கிய கருப் பொருளிலிருந்து விலகி அவற்றை தம் ஓய்வு நேரங்களில் (சும்மா) தரிசிக்கும் தளங்களாகவே இன்றைய இளைஞர்கள் கருதி வருகின்றமையை ஜமாஅத் தொழுகைக்கு வரும் மக்களின் தொகையினைப் பார்க்கும்போது மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பொதுவாக எடுத்து நோக்கினால் நமது அரசியலாளர்கள்கூட மஸ்ஜிதுகளை (தமக்கு நேரம் இருந்தால் மாத்திரம்) தரிசிக்கும் தளங்களாகவே பார்க்கினறனர். உள்பள்ளி வெளிப்பள்ளி என்று தரம் பார்க்காமல் (ஊர்மக்களும், உலமாக்களும் ஏன் பள்ளிப் பொறுப்பாளர்களும் கூட) ஊர்பலாய்களை கதிரைகளில் கால்மேல் கால் போட்டு இருந்த வண்ணம் விரிவாக அலசும் ஸ்தலமாகவும் இன்று மஸ்ஜிதுகள் மாறி வருகின்றமை அங்கு தொழுகைக்காக வரக்கூடிய மக்களின் ஆத்திரத்திற்குரிய விடயமாக விளங்குகின்றது. மஸ்ஜிதுகளின் முக்கிய தொழிற்பாடு மக்களைப் பள்ளிக்கு அழைப்பதாகும். புள்ளி நிர்வாகிகளிடம் சென்று உங்களுடைய நிர்வாகக் காலத்தில் தொழாத எத்தனை மக்களை மஸ்ஜிதுக்குக் கொண்டு வந்தது என்று கேட்டால் அதற்குப் பதில் அளித்துக் கொள்ள மாட்டார்கள். பல மஸ்ஜிதுகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கின்றன. மஸ்ஜிதுகளின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன என்பதை நிர்வாகிகள் (வக்பு சபையினரிடம்) தெளிவாக அறிந்து செயற்படும்போது நிர்வாகம் நன்கு நடைபெறும். புள்ளிக்கு வராதவர்களும் பள்ளிக்கு வருவர்.

உண்மையில் சிறந்த ஒரு ஆக்கம்.
இப்போது எம்மில் பலருக்கு குந்தி வுழூ செய்ய முடியாது. வண்டி வயிறு தரை தட்டும்.
பல பள்ளி வாசல்களில் குந்தி வுழூ செய்யும் ஹவ்ளுகள் இல்லை. அவை நின்று கொண்டு செய்வதாகவோ , Tap ஆகவோ மாற்றீடு செய்யப்பட்டு விட்டன. இதிலிருந்தே எமது உடல் நிலை விளங்கும்.
முன்பெல்லாம் பள்ளிவாசல்களில் கதிரையில் இருந்து தொழுபவர்களை வித்தியாசமாக பார்க்கும் காலம் போய் இப்போது 50 வயது தாண்டி நின்று தொழுபவர்களை வித்தியாசமாக பார்க்கும் நிலை வந்துவிட்டது.

வீதியில் பல மணி நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் கூட பள்ளி வாசலுக்கு வந்தால் "நிலையில்" கூட எழுந்து நிட்பது இல்லை.
இன்னும் சில காலம் போனால் தொழுகை என்பது கத்திரைக்கு மாறிவிடும்.

இலங்கையில் முஸ்லிம்கள் 10% ஆக இருந்தாலும் தொற்றா நோய்களான (Diabetes, Hypertension) இல் 40% உள்ளனர்.

Post a comment