Header Ads



புதைந்து போகுமா புத்தளம்..?

புத்தளம் பிரதேச சுற்றுச்சூழலின் தற்போதைய நிலைமை மற்றும் பாதுகாப்பு அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம், எதிர்காலம் என்பன தொடர்பில் சுற்றுச் சூழல் நிபுணர்கள், சூழலியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் நிமித்தம் இவர்களின் புத்தளம் பிரதேசத்திற்கான விஜயமும் அவதானிப்புகளும் அதிகரித்த வண்ணமுள்ளன.
இவ்வாறு புத்தளம் பிரதேச சுற்றுச்சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருப்பது கொழும்பில் சேருகின்ற குப்பைகளை புத்தளம் அறுவைக்காட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமேயாகும்.

கொழும்பிலிருந்து சுமார் 170 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள புத்தளம் அறுவைக்காட்டுக்கு கொழும்பில் சேருகின்ற குப்பைகளை கொண்டுவர தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இக்குப்பைகளை புத்தளம் அறுவைக்காட்டுப் பிரதேசத்திற்குத் தான் கொண்டுவர வேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் குப்பைகளை பணம் கொடுத்து கொள்வனவு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக இருந்தும் அவற்றை அந்நிறுவனங்களுக்கு விற்பனை செய்யாது அவற்றை புத்தளம் பிரதேசத்திற்கே கொண்டு வர முயற்சிக்கப்படுவதேன்?

இக்குப்பைகளை கொழும்புக்கு அருகிலுள்ள பிரதேசங்களுக்கு எடுத்து செல்ல முற்பட்ட போது அப்பிரதேச மக்கள் இரண்டொரு நாட்கள் வெளிப்படுத்திய எதிர்ப்போடு திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் புத்தளம் பிரதேசத்திற்கு கொண்டு வரவேண்டாமென சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள் வரையும் எல்லா மட்டத்தினரும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்ற போதிலும் அது தொடர்பில் கண்டு கொள்ளப்படாத நிலைமை நீடிப்பதானது, புத்தளம் பிரதேச மக்களின் அச்சத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்து வருகின்றது.

இந்த வினாக்களும் ஐயங்களும் புத்தளம் பிரதேச மக்களை மாத்திரமல்லாமல் சுற்றுச்சூழல் நிபுணர்களையும், சூழலியலாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் குடைந்தெடுக்கவே செய்கின்றன.

இதன் விளைவாகத்தான் புத்தளம் பிரதேச மக்கள் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் நிமித்தம் செப்டெம்பர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதம் மறுநாள் முதல் தொடர் சத்தியாக்கிரமமாக பத்து நாட்களுக்கும் மேலாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சர்வமதத் தலைவர்களும் பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் வாண்மையாளர்கள் அடங்கலாக எல்லா மட்ட மக்களும் ஆதரவளித்து வருவதோடு கலந்து கொண்டு பங்களிப்பும் நல்குகின்றனர்.

இதேவேளை கொழும்பு குப்பைகளை புத்தளம் பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு எதிராக புத்தளம் தொகுதியிலுள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்ற அதேநேரம் வன்னி மாவட்டத்திலுள்ள ஒரு உள்ளுராட்சி மன்றமும் வட மாகாண சபையும் கூட இது தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றன.

பிரதேச மட்ட மக்கள் பிரதிநிதிகள் சபைகளின் கோரிக்கையும், பிரதேச மக்களதும் ஆட்சேபனைகளும் கண்டு கொள்ளப்படாத நிலைமை நீடிப்பதால் புத்தளம் கொழும்பு திடல் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு மேலதிகமாக கல்பிட்டி நகரிலும் கடந்த வியாழனன்று (11.10.2018) மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டம் சர்வமதத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளதோடு, சர்வமதத் தலைவர்கள் தலைமையில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலோடு புத்தளம் நகரில் சர்வமதப் பிரார்த்தனையும் பேரணியும் வெள்ளியன்று நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் தான் புத்தளம் பிரதேச சுற்றுச்சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

புத்தளமானது ஏற்கனவே சீமேந்துத் தொழிற்சாலை, நுரைச்சோலை அனல்மின் நிலையம் என்பன காரணமாக சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இந்நிலையில் வெளியிட குப்பைகளும் புத்தளப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்படுமாயின் புத்தளச் சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற தாக்கமும் பாதிப்புகளும் மோசமானதாகவே இருக்கும்.

இதன் விளைவாக வெளியிடக் குப்பைகள் புத்தளம் பிரதேசத்திற்கு கொண்டு வரப்படுமாயின் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து மாத்திரமல்லாமல் ஏற்கனவே புத்தளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களால் வளிமண்டலத்திலும், சுற்றுச்சூழலிலும் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்தும் அவற்றின் விளைவாக பிரதேச மக்களுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்படும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பில் புத்தளம் பிரதேச சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.எஸ். முபாரக் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

‘நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர் புத்தளத்தின் சில பிரதேசங்களில் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பும் புத்தளம் நகரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னொருபோதும் இல்லாதபடி ஆஸ்துமா நோய்க்கு உள்ளாவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் பாதிப்புக்களுக்கான மூல காரணிகள் என்பன தொடர்பில் ஆராய்வதில் இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கரையோடு செயற்படுகின்ற இரண்டு முக்கிய நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன. குறிப்பாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தினால் ஏற்படுகின்ற தாக்கங்கள், பாதிப்புக்கள் குறித்து இந்நிறுவனங்கள் அதிக அக்கரை கொண்டுள்ளன’.

அதேநேரம் புத்தளம் நகரிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் உள்ள தாவரங்களிலும் கட்டடங்களிலும் மா போன்ற ஒரு வகை பொருள் அண்மைக்காலமாகப் படிவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுவாக நிலக்கரி அனல்மின் நிலையத்திலிருந்து கண்களுக்கு புலப்படாத நுண் துகல்களும், பறக்கும் சாம்பலும் (flyash) வெளியாகும். இப்பறக்கும் சாம்பல் தொடர்பில் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகவரகம் (EPA) அளித்துள்ள வரைவிலக்கனத்தின்படி, ‘இந்த பறக்கும் சாம்பலானது மனிதனின் தலைமயிரின் பத்திலொரு பங்கு தான் பாரமானது. இது காற்றில் பறக்கக்கூடிய கண்ணுக்குப் புலப்படாததாகும்.

இந்த சாம்பலில் சல்பர் டயக்சைட் (sulpur dioxide) என்ற இரசாயனப் பதார்த்தம் முக்கியமாகக் காணப்படும். இதுவும் காற்றில் பறக்கக் கூடியதே. அதனால் இச்சாம்பல் வளி மண்டலத்தில் பறந்து கொண்டிருக்கும்போது மழை பொழியுமாயின் அம்மழை அமில மழையாகவே மாற்றமடையும். அது மஞ்சள் நிறத்திலான மழையாக இருக்கும். இதுவே அமில மழையாகும். இம்மழை தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். குறிப்பாக மனிதனுக்கு சரும நோய்கள் ஏற்படும்.

மேலும் இச்சாம்பல் மற்றும் நுண்துகள்களை சுவாசிக்கும்போது அவை நுரையீரலில் படியலாம். அதன் விளைவாக நச்சுத்தன்மை புற்றுநோய் (toxic cancer) ஏற்படலாம். இதனை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணத்தினால் ‘சுற்றுச்சூழல் குறித்த நீதிக்கான மத்திய நிலையம்’ அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் பறக்கும் சாம்பலும் நிலக்கரி தூசும் புத்தளம் களப்பில் படிதல் மற்றும் அவை மீனின் ஊடாக மனிதனுக்கு சென்றுள்ளதா என்பதை ஆராயும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் அடிப்படையில் புத்தளம் களப்பின் இரு மருங்கிலுமுள்ள சில பிரதேசங்களில் வசிக்கும் பெண்களின் தலைமயிர் மாதிரிகள் பெறப்பட்டு அவற்றில் அனல்மின் நிலையத்திலிருந்து வெளிப்படும் இரசாயனங்களின் தாக்கம் காணப்படுகின்றதா? என்பதைக் கண்டறிவதற்காக பிரித்தானியாவிலுள்ள ஆய்வுகூடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்நிலையத்துடன் இணைந்து செயற்படும் பிரதிநிதியொருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தளம், நுரைச்சோலைப் பிரதேசங்களின் காற்றின் தரத்தை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ‘சுற்றாடல், காலநிலை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான மன்றம்’ மேற்கொண்டுள்ளது. இதன் நிமித்தம் புத்தளம் நகரிலும் நுரைச்சோலை பிரதேசத்திலும் காற்றின் தரத்தை அளவீடு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை இவ்வாறிருக்க வெளியிடக் குப்பைகளும் புத்தளம் பிரதேசத்திற்கு கொண்டு வரப்படுமாயின் அதிலிருந்து வெளியாகும் மீதெய்ன் வாயு சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அதிக நச்சுத்தன்மைமிக்க ஒரு வாயு. இதனால் அடிக்கடி காற்றுத்தீ கூட ஏற்படலாம். அதேநேரம் இக்குப்பைகளில் இருந்து வெளிப்படும் லீச்செட் திரவம் நச்சுத்தன்மை மிக்கதுடன் நில கீழ் நீரையும் பாதிப்படையச் செய்யும். அவை மேலும் பல்வேறுவிதமான தாக்கங்களையும் பாதிப்புக்களையும் புத்தளம் பிரதேசத்தில் ஏற்படுத்தவே செய்யும்.

ஆகவேதான் புத்தளம் பிரதேச சுற்றுச்சூழல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிபுணர்களும், சூழலியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் தம் கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். இது புத்தளம் பிரதேச சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு பக்கபலமாக அமைய வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மர்லின் மரிக்கார்

No comments

Powered by Blogger.