Header Ads



சரிந்துவிழுந்த மரக்கறிகளின் விலைகள், திண்டாடும் விவசாயிகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தைக்கு, கடந்த சில நாள்களாகக் கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதால், மரக்கறிகளை விற்பனை செய்துகொள்ள முடியாது, வியாபாரிகள் திண்டாடி வருகின்றனர்.   

இறைச்சி உள்ளிட்ட ஏனைய உணவுப் பண்டங்களைப் போன்று, மரக்கறிகளையும் பதப்படுத்த முடியாது என்பதால், தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையில் மரக்கறிக் கழிவுகள் தற்போது குவிந்துகிடக்கின்றன.   

இவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.   

இந்நிலையில், வேறு வழியின்றி அவற்றை யானைகளுக்கு உணவாக வழங்கும் நடவடிக்கையில் தம்புள்ளை நகரசபை ஈடுபட்டு வருகின்றது.   

மேற்படிச் சந்தையில், கடந்த இரண்டு தினங்களாக 50 டொன் மரக்கறிகள் கழிவுகளாக எறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

மூடை மூடைகளாக மரக்கறிகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்லும் நகரசபை ஊழியர்கள், அவற்றை, தம்புள்ளை, டிகம்பத்தா காட்டில் உள்ள யானைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.   

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தம்புள்ள நகரசபையின் தலைவர் ஜாலிய ஓபாத, நகரசபையின் ஊழியர்களைப் பயன்படுத்தி, தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையில் டொன் கணக்கில் குவிந்துள்ள மரக்கறிகளை, அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்ததுடன், இவற்றில் அதிகளவான மரக்கறிகள், நுகர்வோர் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.   

யானைகளுக்கு உணவாக வழங்கப்பட்ட மரக்கறிகளில் தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், கறி மிளகாய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், நோக்கோல், பெரிய வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளே அதிகமாகக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   

மத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நீடித்துவரும் மழை காரணமாகவே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   

மரக்கறிகளை மொத்த விலைக்கு விற்பனை செய்வதற்காக, தம்புள்ளை சந்தைக்கு வரும் விவசாயிகள், தாம் கொண்டு வந்த மரக்கறிகளுடன் காலை முதல் மாலை வரை காத்திருப்பதாகவும் பின்னர் அவற்றை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு எவ்வித இலாபமுமின்றி வீடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.   

தம்புள்ளை சந்தைக்கு கடந்த சில நாள்களாகக் கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதால், மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.   

குறிப்பாக, கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, பூசணிக்காய், கெகிரி, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் ஆகிய மரக்கறி வகைகள், கிலோ ஒன்று, 10 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள்ளேயே பெற்றுக்கொள்ளப்படுகின்றனவென, விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.   

தக்காளிப் பயிர்ச்செய்கைக்கூடாக 10 ரூபாயைக்கூட இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும், தக்காளிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.   

அத்துடன், ஒரு கிலோகிராம் மரவள்ளிக்கிழங்கு எட்டு ரூபாய் முதல் 10 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டுள்ளது.   

பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.   

மரக்கறிகளுக்கு முறையான சாகுபடி இல்லமையே இதற்குப் பிரதான காரணம் என்று, தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் சன்ன எருவுல குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 காஞ்சன குமார ஆரியதாச

No comments

Powered by Blogger.