Header Ads



சிலுவைப் போர்கள்மூலம் இருண்ட உலகிலிருந்து, வெளிச்சத்திற்கு வந்த ஐரோப்பியர்கள்

அரேபியாவில் இருந்து தோன்றிய இஸ்லாம் என்ற மதம், அரசியல் சக்தியாகி அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அவ்வாறு பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாலஸ்தீனத்தையும், துருக்கியையும் கைப்பற்றியதால், ரோமர்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டது.

அது ஐரோப்பாவில் பெரும் பொருளாதார பிரச்சினையை உருவாக்கியது. உதாரணமாக குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தது சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பட்டு போன்ற பொருட்கள் யாவும் தற்போது அரிதாகி, விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.

இதனால் அன்றைய பாப்பரசர் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் சிலுவைப்போரை தொடங்கினார். அத்ற்கு முன்பும் மதத்தின் பெயரால் நடந்த போர்கள் பல இருந்த போதும், உலகம் தற்போது ஐரோப்பிய மையவாத கல்வியை கற்பதால், சிலுவைப்போர்கள் முதன்மைப்படுகின்றன.

கிறிஸ்தவ புனித ஸ்தலங்கள் இருப்பதை காரணமாக காட்டி, அனைத்து ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. மேலும் அன்று ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள் யாவரும், வத்திகானில் இருக்கும் பாப்பரசருக்கு கீழ்படிந்தே ஆட்சி செய்தனர். அன்றைய பாப்பரசர் சிலுவைப்போரை தொடங்கியதற்கு, பாப்பரசரின் அறைகூவலுக்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி பிற்காலத்திலேயே ஆராயப்பட்டது.

பாப்பரசரின் கோரிக்கைக்கு செவிமடுத்து பல்வேறு விதமான படைகள், அரச இராணுவம், தனியார் இராணுவம், ஆயுதக்குழு இவ்வாறு பலவகை படைகள் அன்று ஜெருசலேமை கைப்பற்ற சென்றன. அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக போர் புரிய சென்றாலும், பல இடங்களில் ஒழுங்கற்ற காடையர் கூட்டமாக தான் நடந்து கொண்டனர். ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப் போர்வீரர்களை புனிதப்போராளிகள் போன்று சித்தரித்தாலும், மறுபக்கத்தில் அரேபிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் குற்றம் சாட்டினர். அது ஒன்றும் ஆதாரமற்ற கூற்றல்ல. கிரேக்க கிறிஸ்தவர்கள் கூட சிலுவைப்போர் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ரோமன் கத்தோலிக்க மதமே சிறந்தது என்ற மதவெறியால் வழிநடத்தப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள், முஸ்லிம்களை மட்டுமல்ல கிரேக்க கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தனர்.

அப்போது இஸ்லாமிய மன்னர்கள் ஒற்றுமையின்றி தமக்குள் சண்டையிட்டதால், சிலுவைப்போர் படைகள் முஸ்லீம்களை இலகுவாக தோற்கடிக்க முடிந்தது. இஸ்லாமியர்கள் சலாவுதீன் என்ற குர்திய இனத்தை சேர்ந்த தீரமிக்க தளபதியின் கீழ் ஒன்றிணைந்த பின்னர் தான் ஜெருசலேமை ஒரு நூற்றாண்டாக கைப்பற்றி வைத்திருந்த ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளை ஓட ஓட விரட்டி அடித்தனர். இன்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கியவர்கள், ஐரோப்பிய என்பதால் சிலுவைப்போர் ஞாபகங்கள் அரேபியாவில் மீண்டும் வருவதில் வியப்பில்லை.

துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப்படைகள், துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,(யூதர்களையும்) வாழ விட்டனர். இஸ்லாத்தை பிடித்தவர்கள் விரும்பி மதம் மாறிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. முரண்நகையாக அன்றைய இஸ்லாமிய அரசாட்சியில் இருந்த "சகிப்புத்தன்மை கொள்கை" இன்றைய ஐரோப்பிய நாடுகளின் அரச நிர்ணய கொள்கையாகி உள்ளது.

ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப்போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை. இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் அரச உதவியில் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் அரசர்க்கரசனான காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக பாப்பரசர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய கிருஸ்தவ வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த முஸ்லீம் சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதால், ஐரோப்பிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிறஸ்தவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் எட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்".அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டன. ஸ்பெயினில் இஸ்லாமியர்களை அடித்து விரட்டிய கிறிஸ்தவப்படைகள் இந்த நூல்களை கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது. முஸ்லிம்கள் கடல் வணிகத்தில் முன்னோடியாக இருந்தனர்.அவர்களிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் நாகரிகத்தையும், மருத்துவத்தையும்,விஞ்சனத்தையும், கணிதத்தையும், கடல் வணிகத்தையும், சகிப்பு தன்மையுடைய ஆட்சி முறையையும் கற்று கொண்டனர். இன்று தாம் பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.

ஐரோப்பியர்கள் தமது காலனிகளில் வாழ்ந்த மக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதமாற்றம் செய்தனர். நெப்போலியன் காலத்தில் நாஸ்திகவாதம் கோலோச்சிய பிரான்ஸ் கூட தனது காலனிகளில் கிறிஸ்தவமதத்தை பரப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த "கிறிஸ்தவமயமாக்கல்" உலகம் முழுவதும் ஐரோப்பாவுக்கு விசுவாசமான மக்கள் கூட்டத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது.

ஒரு காலத்தில் தமது காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், பிரத்தியேகமாக உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமை பின்பற்றும் மக்கள், எதிர்காலத்தில் ஐரோப்பாவில் கலாச்சார மாற்றங்களை கொண்டுவரலாம்? இவ்வாறு தீவிர வலதுசாரிகள் மத்தியில் மட்டுமல்ல, அரசாங்க மட்டத்திலும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனால் பல்வேறு "அகதி தடுப்பு", "குடியேற்ற தடுப்பு" சட்டங்கள் மூலம், வெள்ளை-கிறிஸ்தவ இன அடையாளத்தை பேண விளைகின்றனர். எப்போதும் ஒரு திருடன் பிறரை நம்பமாட்டான் தானே? ஒரு காலத்தில், தாம் உள்நோக்கத்துடன் செய்த வேலைகளை, தம்மிடமே கற்றுக்கொண்ட வித்தைகளை, தமக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவ்வாறு நீங்கள் நினைக்காமல் இருக்கலாம். ஆனால் ஐரோப்பிய ஆளும்வர்க்க சிந்தனை அதுதான்.

Sinthikkavum

No comments

Powered by Blogger.