Header Ads



`ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் ரத்த வாந்தி' - விநோத நோயால் அவதிப்படும் கிரிக்கெட் வீரர்


கிரிக்கெட் வீரர் ஜான் ஹேஸ்ட்டிங்ஸ்தான் விநோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜான் ஹேஸ்ட்டிங்ஸ் (32), ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு டெஸ்ட், 29 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து பிக் பாஷ் லீக் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், ``தான் விநோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் தனக்கு ரத்த வாந்தி வருகிறது" எனக் கூறி அதிரவைத்துள்ளார் ஜான் ஹேஸ்ட்டிங்ஸ். இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் கூறுகையில், ``கடந்த 4 மாதங்கள் எனக்குக் கடினமான காலகட்டம். இந்த நான்கு மாதங்களிலும் எனது உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் பந்துவீசப் போகும்போது இருமல் வருகிறது. தொடர்ந்து ரத்த வாந்தி வருகிறது. இது எனக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. முன்பே எனக்கு இந்தப் பிரச்னை இருந்தது. ஆனால், முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை தான் வரும். இப்போது ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் வருகிறது. 


இது என்ன வியாதி எனத் தெரியவில்லை. இதனால் என் நிம்மதி தொலைந்துவிட்டது. இந்த விநோதமான நோயால் என்னால் பௌலிங் செய்யமுடியவில்லை. இது என்ன நோய் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. உலகம் முழுவதும் சென்று பல்வேறு தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்காகவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினேன். ஆனால் இந்தப் பிரச்னையால் எனது ஆசை நிகழாதோ என்ற அச்சம் வருகிறது. இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இதிலிருந்து மீண்டு என்னால் கிரிக்கெட் விளையாட முடியும்'' என உருக்கமாகத் தெரிவித்தார். சமூகவலைதளம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹேஸ்ட்டிங்ஸுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஹேஸ்ட்டிங்ஸ் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடன்

No comments

Powered by Blogger.