October 17, 2018

முஸ்லிம் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுக்க நான் தயார் - மாணவர்கள் தயாரா..? சவால் விடுக்கிறார் ஹரீஸ்

தமிழ் தலைமைகளுக்கு யாழ் பல்கலைக்கழகம் ஒரு அழுத்த சக்தியாக இருக்க முடியுமென்றால் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு மாணவ இயக்கம் அழுத்த சக்தியாக இருக்க முடியாது? இந்நாட்டில் முஸ்லிம் கொள்கைகளுக்கு உயிரோட்டம் கொடுக்கின்ற அடிப்படையில் மாணவர்களும் மாணவ இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் இளைஞர் வலுவூட்டல் 7 நாள் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற அந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

யாழ் பல்கலைக்கழகம் இந்த நிமிடம் வரை அதனுடைய வகிபாகத்தை வகித்துக்கொண்டிருக்கின்றது. அது ஒரு அழுத்தக் குழு போன்று செயற்படுகிறது. இந்த நாட்டின் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தினுடைய தலைமைத்துவத்தை அடையாளப்படுத்துகின்ற தீர்மானங்களை உருவாக்குகின்ற ஒரு தளமாக அது இயங்குகிறது. 

அவ்வாறான ஒரு கருத்தியலில்தான் நாம் எங்களுக்கான ஒரு தளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மறைந்த பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் ஊடாக உருவாக்குவதற்கு முயற்சி எடுத்து வெற்றி கண்டோம். எவ்வாறான சமூக ரீதியான கடமையை அது செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதேபோன்று அதன் ஆரம்ப காலத்தில் செய்து வெற்றி கண்டது. ஒலுவில் பிரகடனம் அன்றைய சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்கு நியாயமான விடயங்களை பெற்றுக் கொள்வதில் பெரியதொரு வகிபாகத்தை மேற்கொண்டது. ஒலுவில் பிரகடனம் அரசுக்கு மிகப் பெரும் அச்சத்தையும் அழுத்தத்தையும் கொடுத்திருந்தது. அதன் பின்னர் புலிகள் அரசு பேச்சுவார்ததை ஒரு பிரளயமாக மாறி முஸ்லிம்களுக்கு தனித் தரப்பு, முஸ்லிங்களுடைய தீர்வு என்ற விடயம் வேறொரு பரிணாமத்துக்குச் சென்றது. 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அந்த மாணவப் பலம் இன்றைய நாளில் இல்லை. பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் விட்ட தவறை முஸ்லிம் பெரும்பான்மையான தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் விட்டு விடக்கூடாது என்பதற்காக இன்று திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம் மாணவர்களுடைய விகிதாசாரம் குறைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அங்குள்ள மாணவர் ஒன்றியத்தின் முஸ்லிம் மாணவர்களின் ஆதிக்கம் ஏதோ ஒருவகையில் கட்டுப்போடப்பட்டு ஒரு மாணவ போராட்டத்தை கொண்டுவர முடியாத சூழ்நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் வரலாறு மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப் பகுதியிலும் கூட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் முடிந்தபாடில்லாமல், நாளுக்கு நாள் ஏதோ ஒரு வடிவத்தில் பிரச்சினை தொடர்கின்ற இக்கட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபடுத்திய ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டிய தேவை அனைவராலும் உணரப்படுகிறது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் பலம் இல்லாது இருக்கின்ற தறுவாயில் அடுத்த தெரிவாக எங்களுடைய கனவுகளை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய ஒரு மாணவ அமைப்பினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இன்று சமூகத்திற்கு இருந்து கொண்டிருக்கிறது. 

முன்னைய ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் எங்களுடைய உரிமைகளைப் பெறமுடியும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இப்போதைய ஆட்சியிலும் எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தாக்குதல்கள் நடைபெற்றன. முன்னைய அரசின் அதே பொறிமுறை இவ்வரசினாலும் கையாளப்படுகின்றன. மறுபுறத்தில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை பகடைக் காய்களாக பயன்படுத்துவதற்கும், சர்வதேச பூகோள அரசியலில் துரும்புச் சீட்டாக கையாழ்வதற்கும் முனைகிறார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 

இந்நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்பு மையமான பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அவருடைய தகவல் வழங்குனர் நாமல் குமார ஆகியோரின் குரல்கள் உத்தியோக பற்றற்ற ரீதியில் உறுதி செய்யப்பட்டதன் மூலம் அது புலனாகிறது. இலங்கையில் வன்செயலை தோற்றுவித்து பூகோள அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவந்து தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்புகள் மில்லியன் டொலர் கணக்கில் பணம் கொடுத்து, எங்களுடைய முஸ்லிம் சகோதரிகள், பள்ளிவாசல்கள், முஸ்லிங்களை பெரும்பான்மையாக கொண்ட நகரங்கள், வியாபார நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை அவர்களின் குரல் பதிவுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை கொலை செய்வதற்கும் திட்டங்களை வகுத்திருக்கின்றார்கள்.  
இன்று சமுத்திர ரீதியான போர்களமாக இலங்கை கடல் பிராந்தியம் மாற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் - முஸ்லிம், சிங்கள - முஸ்லிம் கலவரங்களை தோற்றுவிப்பதன் மூலம் முஸ்லிம்களை காவுகொடுத்து இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறுகின்றது என தெரியப்படுத்தி, இலங்கைக்கு பொருளாதார ரீதியான சர்வதேச தடைகளை ஏற்படுத்துவதன் ஊடாக இந்நாட்டின் அரசை வழிக்கு கொண்டுவருவதற்காக அவர்கள் பாவிக்கின்ற ஒரு உபாயமாக இது அமைகின்றது. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் முஸ்லிம் மாணவர்களை ஒரு இயக்கத்தின் கீழ் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் சமகாலத்தில் முஸ்லிம் பிரச்சினைகள் என்பது நுனிப்புல் மேய்வது போன்று ஆட்சியாளர்களும் அரசும் சூழ்நிலைகளை மாற்றி இருக்கின்றது. இதில் மாறுபாடு ஏற்பட வேண்டும் என்றால் 88 காலப்பகுதியில் அன்று இருந்த மாணவர்கள் உயிர்ப்பித்தது போன்ற ஒரு சிந்தனை இந்த நாட்டின் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.  

முஸ்லிம் மாணவர்களை சீரழிப்பதற்கான சகல முயற்சிகளும் திட்டமிட்ட அடிப்படையில் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. போதை வஸ்துக்களை குறைந்த விலையில் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கின்ற ஒரு சூழல் இந்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், முஸ்லிம் மாணவ சமூகம் சீரழிவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு கவலை கிடையாது என்பதனால் அவர்கள் அசமந்தமாகவே செயற்படுகின்றனர். இது பெரியதொரு சவாலாக தோற்றம் பெற்றுள்ளது. இவற்றுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் போராடுவதற்கு முஸ்லிம் மாணவர்கள் முன்வர வேண்டும். 


தமிழ் தலைமைகளுக்கு யாழ் பல்கலைக்கழகம் ஒரு அழுத்த சக்தியாக இருக்க முடியுமென்றால் ஏன் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஒரு மாணவ இயக்கம் அழுத்த சக்தியாக இருக்க முடியாது? எனவே தென்கிழக்கு மாணவர் போராட்டத்தின் தோல்வியை ஈடுசெய்கின்ற வகையில் இந்த நாட்டில் முஸ்லிம் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுக்கின்ற அழுத்தம் கொடுக்கின்ற பணியை நாடு பூராகவும் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ள வேண்டும். அதற்கான அத்தனை ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்; என பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

(அகமட் எஸ். முகைடீன்)

3 கருத்துரைகள்:

ஏன் எல்லாத்திற்கும் தமிழர்களையும், கிருஸ்தவ நாடுகளையும் காப்பி அடிக்க முயற்சிக்கிறீர்கள்?

ஏன்னா இந்த உலகில் நீங்க மட்டும்தான் அறிவுக்கொழுந்துகள்...

நீங்க பாராளுமன்றத்திற்குப் போன இவ்வளவு காலமும் முஸ்லிம் கொள்கைகளுக்கு எப்படி எப்படி எல்லாம் உயிரோட்டம் கொடுத்தீங்க என்கிறதை விலாவாரியாக எடுத்து வைங்க பாப்போம்.

Post a Comment