Header Ads



அமெரிக்க மதகுருவை விடுதலை செய்தது துருக்கி

அமெரிக்காவை சேர்ந்த பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன், துருக்கியில் ஒரு தேவாலயத்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து சிறைக்காவலில் வைத்தது.

அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புமாறு டிரம்ப் நிர்வாகம் கூறியும், துருக்கி அடிபணிய மறுத்தது. இதனால் இவ்விரு நாடுகள் இடையேயான உறவு பாதித்தது.

இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து துருக்கி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனைக்காலத்தை ஏற்கனவே கழித்து விட்டதால், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்டு அவர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். மனைவி நொரினை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ இந்த நாளுக்காகத்தான் எனது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்தனர். நான் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என குறிப்பிட்டார். தனது ஒட்டு மொத்த குடும்பமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

விடுதலையைத் தொடர்ந்து அவர் மனைவியுடன் துருக்கியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.

இதற்கிடையே, சின்சினாட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். ‘‘வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து அவர் என்னை சந்திப்பார்’’ என்று குறிப்பிட்டார்.

2 comments:

Powered by Blogger.