Header Ads



ஜனாதிபதியாகும் கனவுடன் பசில் - அமெரிக்க குடியுரிமையையும் ரத்துச் செய்கிறார்...?

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் பிரவேசித்து உள்ளதாகவும், இதற்காக கோத்தபாய ராஜபக்சவை போல் அறிவுஜீவிகளை ஒன்று திரட்டும் கருத்துக்களை நடத்தும் வேலைத்திட்டத்தை அவர் ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 14ஆம் திகதி கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலாவது கருத்தரங்கும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு, கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான எளிய அமைப்பு நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் கருத்தரங்குகளை போன்று கருத்தரங்குகளை நடத்த தீர்மானித்துள்ளது.

பசில் ராஜபக்ச தலைமையில் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணியின் முதலாவது கருத்தரங்கில் உரையாற்றியவர்கள், போரை முடிவுக்கு கொண்டு வந்தமை தொடர்பில் படையினருக்கு நன்றி கூறி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

எனினும் கோத்தபாய ராஜபக்ச இதுபற்றி எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை. மேலும் பசில் ராஜபக்ச நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டதாகவும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு பசில் ராஜபக்ச தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் எனவும் கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவர், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. This is nothing but just a beginning of the end of the peaceful lives of the people of this country.

    ReplyDelete

Powered by Blogger.