Header Ads



பலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்


-போருதொட்ட றிஸ்மி-

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்ட 5,000 குடும்பங்கள் வரை வசிக்கின்ற இக்கிராமத்தின் மேற்கே இந்து சமுத்திரம் காணப்படுகிறது. இதனால் இக்கிராமத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றாக கடற்றொழில் காணப்படுகிறது. அதிலும் பாரம்பரிய முறைப்படி பாய் மரத் தோணி மூலம் இறால் பிடிப்பது முக்கிய அம்சமாகும்.

நீர்கொழும்பு என்றாலே உல்லாச பிரயாணத் தொழிலுக்கு பிரபல்யமான இடமாக காணப்படுகிறது. அதன் தாக்கம் எமது கிராமத்திற்கும் உண்டு. இங்குள்ள சில வாலிபர்கள் உல்லாசப் பிரயாணிகளுக்கான அலங்கார பொருட்கள், கடல் உற்பத்தி பொருட்கள், உள்ளூர் உல்லாச பிரயாணத்துறை போன்றவற்றில் நேரடி தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் உல்லாச பிரயாணத் துறையுடன் எமது ஊரும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. இக்கிராமமானது நீண்ட காலமாகவே முஸ்லிம்கள் மாத்திரம் வாழக்கூடிய தனித்துவமான பண்பை கொண்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக எமது கிராமத்தின் தெற்கு எல்லை வரை உல்லாச பிரயாணிகளுக்கான விடுதிகள், உணவகங்கள், மதுபானசாலை என்பன உருவாக்கப்பட்டு வருகின்றன. இது எமது எதிர்கால சந்ததியினரை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

அதை விட பாரதூரமான ஒரு பிரச்சினையும் உள்ளது. எமது ஊரின் தெற்கு எல்லையாக "காக்கை தீவு" காணப்பட்டது. அது வரை முஸ்லிம் செறிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று வெளித் தரப்பினரின் ஆதிக்கம் காக்கை தீவையும் தாண்டி வந்து விட்டது. எமது முஸ்லீம்களின் காணிகள் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்டு உணவகங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வெற்றுக் காணிகளை முஸ்லிம்கள் இழந்து வருகின்றனர். காக்கை தீவுக்கும் பெரிய பள்ளிக்கும் இடையில் காணக் கூடிய சில காணிகளை பாரிய தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளை பார்க்கும் போது 100 வீதம் முஸ்லீம்கள் வாழ்ந்த இக்கிராமம் இனி சகோதர இன மக்கள் வாழும் ஒரு கிராமமாக மாறும் அபாயம் ஏற்படலாம். அதிலும் சகோதர மதத்தினர் தம் குடியிருப்புக்களை அமைப்பதை விட பல மடங்கு ஆபத்தை விளைவிக்க கூடிய உல்லாச பயணத்துறையின் வளர்ச்சிக்கு இக்காணிகள் பயன்படப் போகின்றன என்ற விடயம் உற்று நோக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலை தொடருமானால் பெரிய பள்ளி எல்லை வரைக்கும் அந்நியர் ஆதிக்கம் வரலாம். மக்கள் தமது சொந்தக் காணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம்.

எமது ஊரின் இந்நிலைக்கான காரணம் என்னவென்று பார்த்தால், மக்கள் தமது தேவைக்காக காணி உறுதிப் பத்திரங்களை வங்கியில் அல்லது தனியாரிடம் அடகு வைத்து பணத்தை பெறுகின்றனர். சில போது அவற்றை மீட்க முடியாத சந்தர்ப்பங்களில் காணிகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அல்லது பணத் தேவைக்காக காணிகளை விற்க முற்படும் போது அந்நியர்கள் அதிக விலை கொடுத்து காணிகளை கொள்வனவு செய்ய முன் வருகின்றனர். இந்நிலையானது பாலஸ்தீன பூமியில் சியோனிஸ பயங்கரவாதிகள் திட்டமிட்டு குடியேறிய வரலாற்று நிகழ்வை நினைவு கூர்கின்றது. எனவே இந்த நிலைமைக்கு பின்னால் இனவாத கும்பல்கள் இருக்கலாமோ என சந்தேகிக்க தோன்றுகிறது. எமது ஊரின் தெற்கு எல்லையை தாண்டி உல்லாச பயணத்துறையின் முதலீட்டாளர்கள் வருகின்றனர். வடக்கு எல்லைப் பக்கம் உல்லாச பயணிகளுக்கான பாரிய விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டுக்குமிடையில் எமது ஊர் சிக்கி எதிர்காலத்தில் தனது தனித்துவத்தை பாதுகாக்க பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

இது தொடர்பாக பொது மக்களை தெளிவுபடுத்த ஊரின் நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், ஏனைய அமைப்புக்கள் முன் வர வேண்டும். இது அவசியமாக ஆனால் அவரசமாக செய்யப்பட வேண்டிய வேலையாகும். இதற்காக கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம். துண்டு பிரசுரங்களை வெளியிடலாம். மேலும், எமது ஊரின் "ஸகாத் நிதியம்" போன்ற அமைப்புக்கள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஊரில் உள்ள ஸகாத் கொடுக்கக் கூடியவர்களை ஒன்றிணைத்து இதன் தேவையை உணர்த்தி இதற்கான நிதியை பெற்று காணிகளை பாதுகாக்கலாம். அல்லது ஊரின் செல்வந்தர்கள், ஊரின் தலைமைகள், இயக்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரு பொதுவான குழுவாக இயங்கி பைத்துல் மால் நிதியை உருவாக்கி அதன் மூலம் ஊரின் காணிகளை பாதுகாக்க முன்வர வேண்டும். மேலும் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடும் பெருந்தொகை நிதியை கொண்டு அந்நியர்களுக்கு விற்கப்படும் காணிகளை பள்ளிவாசல் நிர்வாகம் கொள்வனவு செய்யலாம். இதன் அர்த்தம் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட கூடாதென்று அல்ல. மாறாக எமது ஊர் மக்களின் இருப்பை உறுதி செய்வது இன்றை காலத்தில் மிக அவசியமாக உள்ளது என்பதாகும்.

இன்று மக்கள் சொந்த நிலமில்லாமல் படும் துயரத்தை உலகெங்கும் நாம் பார்க்கிறோம். ஏன் நமது நாட்டில் கூட கொழும்பு போன்ற பெரும் நகரங்களில் தீப் பெட்டி போன்ற குடிசை மாற்று குடியிருப்புக்களில் அடைக்கப்பட்டு மக்கள் வாழ்வதை காண்கிறோம். நாளை அந்த நிலைமை எமது மக்களுக்கு வரக் கூடாது.

இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன் எமது மூதாதையரின் முயற்சியால் வெளி நபர்களின் சொத்தாக இருந்த பெரியதோட்டம், ஆப்தீன் மாவத்தை, ரீட்டா மாவத்தை, காக்கை தீவு, அத்தார் அஸ் ஸலபிய்யா (சென்டர்) பள்ளியை சூழ உள்ள காணிகள், பைரூஸ் ஹாஜியாரின் வீட்டு பின்பகுதி காணிகள், ரஸ்னா திருமண மண்டப காணிகள், பாடசாலை பின்பகுதி ஜயா மாவத்தை, மாய பஜார், கேணிமூலை, பங்கலாவத்தை போன்ற பெரும் பெரும் காணிகள் இன்று முஸ்லிம்களுக்கு சொந்தமானவையாக உள்ளன. ஆனால் நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லப் போவதென்ன??? ஐந்து நட்சத்திர விடுதிகள், மது பரிமாறப்படும் உணவகங்கள், கசினோ நிலையங்கள், இவை தானா??? இல்லை. நிச்சயமாக நாம் இவைகளை நாம் எமது சந்ததியினருக்காக விட்டுச் செல்ல முடியாது.

எனவே, இது விடயத்தில் நாம் இன்று சிந்திக்காது இருந்தால் இன்று கொழும்பில் சேரிப்புற பகுதிகளில் அல்லது அடுக்கு மாடித் தொடர் குடியிருப்புக்களில் சொந்த நிலம் இல்லாமல் வாழும் மக்களின் நிலை தான் நாளை எமக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சிந்தித்து செயல்படுவோம், பலஹத்துறை பலஸ்தீனாக மாறுவதை தடுப்போம்.

6 comments:

  1. இது போல ஒரு கட்டுரையை அவர்களும் எழுதினால் நமது நிலமை என்னவாகும் என்று மட்டும் முதலில் சிந்தித்து செயற்ட்படுங்கள்.
    என்னை பொருத்தவரை இந்த கட்டுரையாளர்தான் இனவாதி
    இங்கு குருப்பிட்டுள்ள அம்சங்களை நோக்கும்போது எதுவும் பலாத்காரமாக நடைபெறவில்லையே!!!!!!

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் காணிகள் பறிபோவதை கவலையாக சொல்லியிருக்கிறார்... இனப்பரம்பல் ஐதாக்கம்...
    கிழக்கில் காரைதீவு இந்து கோவில்களால் அயலில் உள்ள மாளிகைக்காடு, சாய்ந்தமருது முஸ்லிம் மக்களுக்கு காணி விற்கக்கூடாது என்று எந்த முறையில் முடிவெடுக்கப்பட்டதோ அந்த வகையான ஒரு அக்கறைதான் இந்த கட்டுரை

    ReplyDelete
  3. கட்டுரையை நிதானமாக வாசித்தால் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களின் சொத்துக்களாக இருந்த நிலங்கள் இப்போது உல்லாசப்பிரயாண ஹோட்டல்கள், கசினோக்கள்,மதுபான விற்பனை நிலையங்களாக முஸ்லிம்களின் காணிகள் மாறினால் அங்கு செய்யப்படும் பாவங்களுக்கு ஆண்டாண்டு களாக பாவச்சுமைகளை முஸ்லிம்கள் சுமக்க வேண்டிவரும் அது நிச்சியம் மரணத்தின் பின் காணி உரிமையாளர்களுக்கு நிம்மதியைக் கொடுக்காதது போலவே, எதிர்கால பரம்பரைக்கும் அநியாயத்திலும் அக்கிரமத்திலும் ஈடுபட அவை காரணமாக அமையும் என்ற தூரதரிசன நோக்கில்தான் இந்த கட்டுரையாளர் எழுதியிருக்கின்றாா். ஆனால் பலஸ்தீனமானமாக மாறுமோ என்ற தலைப்பு அவ்வளவு பொறுத்தமானதாக விளங்கவில்லை. கட்டுரையை நிதானமாக படித்து அதில் கூறப்பட்ட ஆலோசனைகளை அமல் செய்ய உரியவர்கள் அக்கறைஎடுக்குமாறு பணிவாக வேண்டுகிறேன்.அனைவருக்கும் தௌிவான சிந்தனையை அல்லாஹ் அருள்வானாக.

    ReplyDelete
  4. செல்வநாயகம் காலம்தொடக்கமே முஸ்லிம்கள் தனித்து நிலத்தை பாதுகாக்க முடியாது என்கிற குரல் ஒலிக்கிறது, பதவித் தோணியில் வலது காலும் பரம்பரைக் காணியில் இடது காலுமாக வாழ்கிற வாழ்க்கையின் துயரம் இலங்கை முழுவதும் முஸ்லிம்களின் துயரமாக உள்ளது.

    ReplyDelete
  5. Don't Be Communally Minded, Try Live Like Brotherhood

    ReplyDelete

Powered by Blogger.