Header Ads



ஆவாவை அடக்க பொலிஸார் போதுமானவர்கள், இராணுவம் தேவையில்லை

வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அனுமதித்தால், வடக்கில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களை அடக்குவதற்கு இராணுவம் தயாராக இருக்கிறது என்று இராணுவத் தளபதி கூறியதாக, செய்திகளை படித்தேன்.

நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. இராணுவத் தளபதியின் இது தொடர்பான கருத்து, பொருத்தமற்றது என்று நினைக்கிறேன்.

இராணுவத்தை நாம் பயன்படுத்தினால் அது உலகத்துக்கு தவறான செய்தியை அனுப்பும். நான் அண்மையில் வடக்கிற்குச் சென்று அங்குள்ள கள நிலவரங்களைப் பார்வையிட்டேன்.

உண்மையில், ஆவா குழுவில் இருப்பவர்கள், 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் தான். அவர்கள் தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

வடக்கில் உள்ள 53 காவல்துறை பிரிவுகளில்,  சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 காவல்துறைப் பிரிவுகளில் மாத்திரம் இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளன.

பெரும்பாலான குழு மோதல்கள் இணுவில், கொக்குவில் பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன.

2011ஆம் ஆண்டில் இருந்து இந்தக் குழுக்கள் செயற்படுகின்ற போதிலும், இவர்களால் ஒரு கொலை கூட இடம்பெறவில்லை. ஆனால், வாள்கள், கத்திகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்துகிறார்கள். எனினும் இந்தச் சம்பவங்களை அனுமதிக்க முடியாது.

ஆவா குழுவின் செயற்பாடுகளை காவல்துறையினால் அடக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில், என்னால் 100 வீதம் உறுதியளிக்க முடியும்.

அதேவேளை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியைப் பெறுவது குறித்து சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.