September 20, 2018

அதாவிடமிருந்து விடைபெற்றார் உதுமா - றிசாத்துடன் இணைவாரா..?

தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் அதிஉயர்பீட பதவிகளிலிருந்தும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சா் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று -20- காலை திடீர் இராஜினமா செய்துள்ளார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியையும், அரசியல் அதிஉயர்பீட பதவியிலிருந்தும் தான் இராஜினமா செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சருமான எல்.எம்.அதாஉல்லாவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

என்மீது நம்பிக்கை வைத்து இதுவரை தேசிய காங்கிரஸ் சார்பில் கட்சி ரீதியிலான உயர் பதவிகளையும், கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் என்ற பதவிக்கு இரண்டு தடவையாக என்னை நியமித்ததுடன் இன்னும் பல உயர்பதவிகளை வழங்கியதோடு, என் மீது நம்பிக்கை வைத்து கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கும் என்னை நியமித்ததற்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்து இதுவரையில் எனக்கு வழங்கப்பட்ட பதவிகளை உங்களுடைய நற்பெயருக்கும் நமது கட்சி வாக்காளர்களின் நம்பிக்கைக்கும், நமது சமூகத்திற்கும், கிழக்கில் வாழும் ஏனைய சமூகங்களுக்கும் சிறிதளவேனும் கலங்கம் ஏற்படாத வகையிலே செயல்படுவதற்கும், நமது தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பாதையில் உச்ச தியாகத்துடன் செயற்படுவதற்கும்  எல்லாம் வல்ல இறைவன் என்னைப் பாவித்தமை குறித்து நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன். 

இருந்தபோதிலும் எனக்குப் புதிதாக தங்களால் வழங்கப்பட்ட தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலும் , அரசியல் அதிஉயர்பீட உறுப்பினர் பதவியிலும்  எனது தனிப்பட்ட காரணங்கள் நிமிர்த்தம் தொடர்ந்தும் செயற்பட முடியாமையினால் இவ்விரு பதவிகளிலிருந்தும் 2018.09.18ம் திகதியிலிருந்து இராஜினாமா செய்து கொள்கின்றேன் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றேன். என அக்கடிதத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் 2008ம் ஆண்டு நடைபெற்ற போது அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு அதிகப்படியான தெரிவு வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாண சபையின் முதலாவது  வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக 04 வருடம் பதவி வகித்தார்.

கிழக்கு மாகாண சபைக்கான 02வது தேர்தல் 2012ம் ஆண்டு நடைபெற்ற போது அம்பாரை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸில் போட்டியிட்டு  அதிகப்படியான தெரிவு வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாகவும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்தார். 

தேசிய ரீதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையின் எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக எதிர்க்கட்சித் தலைவராக சுமார் 02 வருடங்கள் பதவி வகித்து கிழக்கு மாகாண மக்களின் குரலாகவும், மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கம் பறித்தெடுக்க முற்பட்ட வேளையில் அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். 

அதேவேளை உதுமாலெப்பை அமைச்சர் றிசாத்துடன் இணைந்துகொள்ள உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

3 கருத்துரைகள்:

Koodu vittu koodu paayum kuruvigal.....!
India, Tamil naattu arasiyal...go on your way....
Settlement olungaaha nadakkavillai pola...!

நீங்கள் விலகுவதற்கான உமையான காரணங்ளை உங்களைநேசிக்கின்ற நாம் அறியவேண்டும்?.அதாவுல்லாவை விட்டு நீங்கள் மாறுவது அல்லது அதாவுல்லா உங்களை விடுவது இரண்டுமே நீதி நியாயத்திற்கு முரண்பாடானசெயற்பாடுகளாகும்.ஏனெனில் இரண்டுபேருமே தேசிய காங்ரஸ் கட்சி அரசியலில் சமனான பலன்களை அனுபவித்தவர்கள்.ஆனால் பாவம்உங்கள் இருவயையும்நேசிக்கின்ற உண்மையான கட்சி
பற்றாளர்கள்.இதில் கட்சி நலனா அல்லது உங்கள் இருவரினதும் தனிப்பட்ட நலனா என்பதும் எம்மால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

நீங்கள் விலகுவதற்கான உண்மையான காரணங்ளை உங்களைநேசிக்கின்ற நாம் அறியவேண்டும்?.அதாவுல்லாவை விட்டு நீங்கள் மாறுவது அல்லது அதாவுல்லா உங்களை விடுவது இரண்டுமே நீதி நியாயத்திற்கு முரண்பாடானசெயற்பாடுகளாகும்.ஏனெனில் இரண்டுபேருமே தேசிய காங்ரஸ் கட்சி அரசியலில் சமனான பலன்களை அனுபவித்தவர்கள்.ஆனால் பாவம்உங்கள் இருவயையும்நேசிக்கின்ற உண்மையான கட்சி
பற்றாளர்கள்.இதில் கட்சி நலனா அல்லது உங்கள் இருவரினதும் தனிப்பட்ட நலனா என்பதும் எம்மால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

Post a Comment