September 16, 2018

அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களும், கேள்விக்குறியாகும் முஸ்லிம் சமுகத்தின் இருப்பும்

(ஹெட்டி ரம்ஸி – எஸ்.ஏ.எம்.அஸ்மி)

எமது நாட்டில் தனித்துவம் வாய்ந்ததொரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் துறைமுகத்தோடு, மூவின மக்களும் இரண்டறக் கலந்து வாழும் இம்மண்ணில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து பல்வேறு காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் நிலங்கள் திட்டமிட்ட வகையிலான ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன் குடியேற்றங்களும் நடைபெற்று வருவதனையும் பரவலாக அவதானிக்க முடிகின்றது.

இதன் ஓர் அங்கமாக, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, புல்மோட்டை மாலானா ஊர் என்ற இடத்தில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேவேளை அப்பகுதியைச் சூழவுள்ள தென்னைமரவாடி, விளாந்தோட்டம், குடாத்தறை, மரக்கறிக்குடா பகுதிகளில் சிலாபம், நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலுள்ள சிங்கள மக்கள் வந்து தற்காலிக கொட்டில்களை அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் அப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு உரிமை கோரியும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மாலானா பிரதேசத்தில் தற்போது 12 வீடுகளுக்குரிய அத்திவாரமிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனைத்து பாதுகாப்பு உதவிகளும் பொலிஸார் மற்றும் புல்மோட்டை அரிசிமலை விகாரைக்குப் பொறுப்பாகவுள்ள விகாராதிபதியினால் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக, இங்கு காணப்படுகின்ற பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதுடன், இயற்கை வளங்களும் சூறையாடப்படுகின்றது. இங்கு பகல் வேளைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாது இரவு வேளைகளில் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தற்போது இரவோடு இரவாக ஒன்பது கொட்டில்களை அமைத்து குடியேறும் அத்துமீறிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

குறித்த தேரர் சிங்கள மக்களை காடு வெட்டத் தூண்டி, இந்த கொட்டிலமைக்கும் விடயத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில், ஏற்கனவே புல்மோட்டை முஸ்லிம்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு, வன இலாகா திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த 17 குடும்பங்களுக்குரிய காணிகளிலேயே தற்போதைய குடியேற்றம் நடைபெற்று வருகிறது.

கொட்டிலமைக்கும் முன்னதாக இவர்கள் காடுவெட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வனபரிபாலன இலாகா திணைக்களத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் காடுவெட்டும் செயலைத் தடைசெய்திருந்தும் மறுதினம், குறித்த தேரரின் தலையீட்டினால் மீண்டும் காடுவெட்டப்பட்டு, விடியற் காலையில் கொட்டிலும் அமைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த புதன்கிழமை (05) முதல் அத்திவாரமிடும் வேலைகளும் தீவிரமாக இடம்பெற்று வந்தன.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர், வன இலாகா திணைக்களத்தினர், மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டும் இதுவரைக்கும் குறித்த இடத்திற்கு யாரும் சமுகமளிக்கவில்லை என்பது இம் மக்களின் பாரிய குற்றச்சாட்டுக்களாகும்.

ஏற்கனவே மாலானா ஊர் என்ற இடத்தில், 2014 களில் புதிய விகாரையொன்றும் நிறுவப்பட்டது. பின்னர், பௌத்த தியான நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு, அவற்றைச் சூழ வெளிமாவட்டங்களிலுள்ள சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றியுள்ளனர். இப்பகுதி விஸ்தரிக்கப்படுமாக இருந்தால் இதற்கு அருகாமையிலுள்ள கொக்குளாய்க் களப்பு பறிபோகும் அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. முஸ்லிம்களுக்குரிய 5 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, கொக்குளாய்க் களப்பு பகுதியில் இராணுவ முகாம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் துணையுடன் கொக்குளாய்க் களப்பை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னைமரவாடி, புல்மோட்டை முதலான பிரதேசங்கள் புதிதாகக் குடியேறுகின்ற சிங்கள மக்களின் அதிகாரத்திற்குள்ளாகும் வாய்ப்பேற்படும் என்ற அச்சமும் இருந்து வருகிறது.

நீண்ட காலமாக காணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற முஸ்லிம் பிரதேசங்களில் புல்மோட்டையும் ஒன்று. புல்மோட்டையில் குடியிருப்பு நிலங்களும் ஐந்து தலைமுறைக்கும் மேலாக செய்கை பண்ணப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் தோட்டக் காணிகளும் இலக்கு வைக்கப்படுகின்றன. கடந்த அரசாங்கங்களினால் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் என்றும் வனவள இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் என்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முகாம் அமைப்பதெற்கென்றும் விகாரைக் காணிகள் தியான நிலையங்கள் அமைப்பதெற்கென்றும் பல ஏக்கர் காணிகளை புல்மோட்டை முஸ்லிம்கள் இழந்துள்ளனர்.

இக்காணிகள் போக, மேலும் பல ஏக்கர் நிலங்களுக்கும் குறிவைக்கப்படுகிறது. அரசாங்க படைகளின் கெடுபிடிகளாலும் குறித்த விகாராதிபதியின் முயற்சியாலும் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்ற – அதிகார துஷ்பிரயோகங்களாலும் புல்மோட்டை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் இன்று கையறு நிலையில் உள்ளன.
பொன்மலைக்குடா அரிசிமலை, மண்கிண்டிமலை (மதீனா நகர்), இரும்படிச்சான் (செம்பிலிய கந்தை), கண்ணீராவி பிலவு, ஆண்டாங்குளம், சாத்தானமடு, காட்டுத் தென்னை முறிப்பு, தோண்டாம் முறிப்பு, ஸபா நகர் (ஓடாமலை) போன்ற பிரதேசங்களிலெல்லாம் புல்மோட்டை முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் காடுவெட்டினால் உடனடியாக குச்சவெளி பிரதேச செயலாளர், வனவள இலாகாவினர் முதற்கொட்டு சகல அரச தரப்பினரும் களத்தில் இறங்கி விடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேண்டப்பட்ட சமூகத்தவர்கள் என்றால் சட்டங்களும் அதிகாரங்களும் மௌனித்து விடுகின்றன.

இது இவ்வாறிருக்க, புல்மோட்டை 13ம் கட்டை பகுதியில் சட்ட விரோதமாக பெரும்பான்மை மதகுருவினால் இலங்கையின் தென் பகுதி மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது விடயமாக கடந்த 10ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களினால் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இச்சட்ட விரோத குடியேற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயமாக ஜனாதிபதியின் செயலாளர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு சட்ட விரோதக் குடியேற்றங்களை நிறுத்தும்படி உத்தரவிட்டதிற்கமைவாக பிரதேச குச்சவெளி பிரதேச செயலாளர், உதவிச்செயலாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், புல்மோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொறுப்பான கிராம சேவகர் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு உடன் விஜயம் மேற்கொண்டு களநிலவரத்தினை பார்வையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரினால், சட்ட விரோதக் குடியேற்றங்கள் மற்றும் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிசைகள் உள்ளிட்டவைகளைப் பார்வையிட்டு உடன் அறிக்கையொன்றினை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளரை வேண்டிக் கொண்டதுடன், வன பரிபாலன திணைக்களம், புல்மோட்டை பொலிஸ் நிலையம், அரசாங்க அதிபருக்கு சட்ட விரோதக் குடியேற்றங்களை அகற்றும்படி கடிதத்தை அனுப்பி வைப்பதாகக் தெரிவித்துள்ளார்.

அரசின் தற்காலிக தடையுத்தரவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் அது எவ்வளவு தூரம் அமுல்படுத்தப்படுகிறது என்பதையும் இனிமேல்தான் அவதானிக்க வேண்டியிருக்கிறது. பிரச்சினை பூதாகரமான பின்பு அரசாங்கம் இவ்வுத்தரவை பிறப்பித்திருக்கிறது. எனினும் இவ்வுத்தரவையும் மீறி சட்டவிரோதக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களது அவாவாகும்.
இதே வேளை இவ்வாறானதொரு பிரச்சனையை தோப்பூர், நீணாக்கேணி பிரதேச முஸ்லிம் குடும்பங்களும் எதிர்நோக்கியுள்ளன.

சேருவில பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காணப்படும் ஒரே ஒரு முஸ்லிம் கிராமம் நீனாக்கேணிக் காட்டு கிராமமாகும். இப்பிரதேசத்தில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வசித்துவருவதுடன், விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் வாழ்ந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் காணப்படுகின்றன.
கடந்த 1987ம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரதேசத்தை அண்டியுள்ள பல சிங்கள கிராமங்களுக்கு காணி உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அக்காலத்தில் இடம்பெற்ற கொடூர யுத்தம், போக்குவரத்து பிரச்சினைகள், உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரியான தொடர்பின்றி காணப்பட்டமையினால் இவ் அனுமதிப்பத்திரம் நீனாக்கேணிக்காடு கிராம மக்களுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த வருடம் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவரும் 49 1ஃ2 ஏக்கர் காணிகளும் தொல்பொருள் ஆய்வுகள் திணைக்களத்துக்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 49 1ஃ2 ஏக்கர் காணி உட்பட அதனைச் சூழவுள்ள 1000 ஏக்கர் காணிகள் சேருவில ரஜமகா விகாரைக்கு சொந்தமானது என உரிமை கோரப்பட்டுள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு காணிகளும், 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பறிபோகும் நிலையில் உள்ளது..
கடந்த வருடம் தொல்பொருள் ஆய்வுகள் திணைக்களத்துக்கு காணிகள் உள்வாங்கப்பட்ட பின் மக்களின் வேண்டுகோளுக்கமைய நீனாக்கேணி கிராமத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர், இக்கிராமத்தில் வசிக்கும் எவரும் வெளியேறத் தேவையில்லை, தங்களது காணிகளில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டதோடு பிற்காலத்தில் இதற்கு சுமுகமான வொன்றினை பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.

இதனை நம்பிய கிராம மக்கள் கடந்த வருடம் பயிர்ச்செய்கைக்கு தயாரான வேளை விகாரைக்கு சொந்தமான காணிகளில் எதுவும் செய்ய முடியாது என்ற தோரணையில் இனந்தெரியாத சிங்கள இளைஞர்களால் இப்பிரதேசம் தாக்கப்பட்டது. இதில் இருவர் காயமடைந்ததுடன், ஏழு வீடுகளும் சேதமாக்கப்பட்டது. இப்பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலில் இதற்கான நிரந்தரத் தீர்வொன்று பெறப்படும் வரை, இப்பிரதேசத்தில் குடியிருப்பவர்கள் மாத்திரம் குடி இருக்கலாம், புதிய கட்டிட வேலைகள், திருத்த வேலைகள் எதுவும் மேற்கொள்ள முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானமெடுக்கப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகியும் மக்களுக்கான காணி உரிமைப் பத்திரங்களோ, நிரந்தர தீர்வோ பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களின் எதிர்கால இரும்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் தமது காணிகளில் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது திண்டாடுகின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது நல்லதொரு தீர்வு கிடைக்குமென்று நம்பி தினம் தினம் அரசியல்வாதிகளின் பின்னால் இம் மக்கள் அலைந்து திரிகின்றனர். இம்மக்களின் எதிர்கால இருப்பினை கருத்திற் கொண்டு இதற்கு நிரந்தர தீர்வினை காண வேண்டியது மாவட்ட முஸ்லிம் தலைமைகளின் கடமையாகும்.

எனினும் இதுவரைக்கும் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்குப் பதிவொன்றைச் செய்து, சட்டத்தின் முன்நிறுத்த யாரும் முன்வரவில்லை. அவ்வாறு வழக்குப் பதிவுவொன்றைச் செய்து சட்டத்தின் முன்நிறுத்தப்பட வில்லையாயின் புல்மோட்டை மாலானா, தோப்பூர் நீணாக்கோணி இதுபோன்ற இன்னும் பல இடங்களையும் முஸ்லிம்கள் இழக்க நேரிடலாம்.6 கருத்துரைகள்:

Buddhist Terrorism.. Stop Buddhist Terrorism...

இதுபோன்ற பிரச்சினைகளை தமிழர்களும் எதிர்கொள்கிறார்கள். அண்மையில் தமிழ் மீனவர்களதும் சிவில் சமூகத்தினதும் தொடர்போராட்டங்களால் நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேற்றப்பட்ட சேதி யாவரும் அறிந்ததே. திருகோணமலை முஸ்லிம் பிரதேசங்கள் சிங்கள மீனவர்கள் அத்துமீறும் சேதிகளை முழுமையாக வாசித்தேன். அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை பற்றிய சேதிகளைத் தவிர மக்கள் போராட்ட தகவல்கள் ஏதும் இல்லை. கடந்த 75 வருடமாக கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கபட்ட சேதிகளின்போதும் இதே சூழல் இதே சேதிகள்தான். இதுபற்றி இனியேனும் முஸ்லிம்கள் யோசிக்க வேண்டும்.

It means Saffroon rope can break any law and orders in the Island?

முஸ்லிம்களுக்கு தங்கள் உரிமைக்காக சிங்களவர்களோடு போராட பயம்.

Yeah, முட்டாள் தனமாக சண்டையிட்டு சனத்தொகையை குறைக்கலாமா அந்தோனி உங்களைப்போன்று

முஸ்லிம்களாகிய நமக்கு மன்னின் மீது பேராசை கிடையாது. புலிகள் இயக்கம் பேராசை கொன்டு இருந்ததையும் இழந்த மாதிரி ஆகிவிடும்

Post a Comment