Header Ads



ஜனாதிபதி கொலை சதி, ராஜித்த என்ன சொல்கிறார்

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்களை வழங்குவோருக்கு பணம் வழங்குவார்கள். அவ்வாறு இரகசிய தகவல்களை பெற்றுகொண்டு பணம் வழங்காமையினாலே ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சரவையில் கலந்துரையாடவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித் செய்யும் விதமாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரை சிக்கலில் தள்ள திட்டம் தீட்டும் விதமாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அமைச்சரவையில் நேற்று கலந்துரையாடப்படவில்லை.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து முதலில் மாற்றுமாறு விசாரணையாளர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் நாலக சில்வா  பொலிஸ் தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி. விசாரணைகள் இடம்பெறும் நிலையில் பாரதூரமான விடயம் என்பதால் பொதுவில் கதைப்பது சிறந்தது அல்லது.  

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜிதஜயசுந்தர ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.

பொலிஸார் பணம் வழங்கவில்லை

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்களை வழங்குவோருக்கு பணம் வழங்குவார்கள். அவ்வாறு இரகசிய தகவல்களை பெற்றுகொண்டு பணம் வழங்காமையினாலே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

அரசியல் செய்ய வேண்டாம்

கொலை சதி முயற்சி தொடர்பில் தகவல் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு முன்னதாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்த வேண்டும்

நாலக சில்வா மறுப்பு

ஊழலுக்கு எதிரான படை எனும் அமைப்பு சார்பில் அதன் நடவடிக்கை பணிப்பாளரான  நாமல் குமார என்பவர் வெளிப்படுத்திய தொலைபேசி கலந்துரையாடல் பதிவுகள் தன்னுடையது அல்ல என நாலக சில்வா முற்றாக மறுத்துள்ளார். நாலக சில்வாவிடம் 2 நாட்கள் சி.ஐ.டி.யினாரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. முதலில் சாட்சியங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

இந்திய உளவுபடைக்கு தொடர்பா?

நாலக சில்வாவுக்கும் இந்திய உளவு படைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் நிறைய தகவல் மறைந்துள்ளன. விசாரணைகளுக்கு முன்னதாக எதனையும் திட்டவட்டமாக கூறமுடியாது.

பதவி நீக்க முடியாது

நாலக சில்வா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து அவரை பதவி நீக்க முடியாது ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

அவர்களின் உரிமை

பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாலக சில்வாலும் களனி விகாரைக்கு ஒன்றாக சென்றார்கள் என்பதற்காக விசாரணைகளில் பாரபட்சம் காணப்படும் என கூற முடியாது. விகாரைக்கு ஒன்றாக செல்வது அவர்களின் உரிமையாகும்.

பொலிஸ் மா அதிபர் விசாரணை செய்யவில்லை

நாலக சில்வா சம்பந்தப்பட்ட விடயங்கள் பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணை செய்யப்படவில்லை. சிஐடி யினரே விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். மஹிந்த ஆட்சியில் பொலிஸ் ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டது என்று அறிவீர்கள். ஆனால் நல்லாட்சியில் அனைத்தும் சுயாதீனமாக இயங்குகின்றன.



(ரொபட் அன்டனி)

No comments

Powered by Blogger.