Header Ads



இலங்கையில் கடன்பெற்ற பெண்களிடம், பாலியல் லஞ்சம் கேட்கிறார்கள் - ஐ.நா. அதிகாரி வேதனை

நுண்கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்களிடம், தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக, பாலியல் சலுகைகள் வழங்கவேண்டும் என, கடன் சேகரிப்பாளர்கள் ஒரு சிலரினால், பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள விடயம், தனது கவனத்துக்குக் கொண்வரப்பட்டுள்ளது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார்.  

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, மனித உரிமைகள் மீது வெளிநாட்டு கடன் எடுத்து வரும் தாக்கங்கள் குறித்த ஐக்கிய நாடுகளுக்கான சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த இவர், கொழும்பில் நேற்று (11) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன் போது, இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, தன்னால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் தொடர்பாக அவர் கருத்துரைத்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   

உலகெங்கிலுமுள்ள பெருந்தொகையான மக்களை, வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காக உதவியிருக்கும் நுண்நிதி கடனளிப்பு தொடர்பாக, தன்னுடைய இந்த இலங்கைக்கான விஜயத்தின் போது தான் கவனம் செலுத்தியதாக் கூறிய அவர், கடனளிப்பவர்களால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை, அவை, அடிக்கடி இடம்பெறும் நிலை மற்றும் அவற்றின் பாரதூரமான இயல்பு என்பவற்றை, தான் அவதானித்ததாகவும் இதற்கு, இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.   

இந்த நுண்நிதி கடனளிப்புக்கு, வறுமையிலுள்ள பிரதேசம், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பெண்கள் இலக்காக இருந்து வருகின்றனர் என்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், 220 சதவீதம் வரையிலான வட்டி வீதங்களை அறவிடுவதாகவும் கூட்டு வட்டி கணிப்பு முறையை பின்பற்றி வருவதாகவும் ​அவர் கூறினார்.   

ஒரே நேரத்தில், பல கடனளிப்பு நிறுவனங்களிலிருந்து, 3 அல்லது 4 கடன்களைப் பெற்று, அவற்றை நிலுவையில் வைத்திருக்கும் பெண்களை, சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகின்றது என்று கூறிய அவர், இதனால், பெண்களிடம், கடன் சேகரிப்பாளர்களால், பாலியல் சலுகைக்கள் கோரப்படுவது தொடர்பில் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மேலும், பணத்தைச் செலுத்துவதற்காக, கடன் பெற்றிருக்கும் ஒரு சிலர், தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கும் முயன்றுள்ள சம்பவம் தொடர்பிலும் தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.   

எனவே, இந்நிறுவனங்கள் தொர்பாக, ஒரு வட்டி வீத உச்சவரம்பை உருவாக்குமாறும், வலுவான கண்டிப்பான ஒழுங்குவிதிகளை நிறைவேற்றி, அவற்றை அமுல் செய்யுமாறு, தான் அரசாங்கத்திடம் வலிந்து கோருவதாகவும் அவர் கூறினார்.   

மேலும், நுண்நிதிக் கடனளிப்பு நிறுவனங்கள், கடன் தொடர்பான இடர்நேர்வுகளை, எவ்வாறு மதிப்பிடுவது என்பது தொடர்பாக, மனித உரிமைகள் தரநியமங்களுடன் பொருந்தக்கூடிய விதத்தில், வழிகாட்டுதல்களிருந்து வருதல் வேண்டும் என்றும் இச்சட்டவாக்கம் நிறைவேற்றப்படும் வரையில், கடனளிப்பு நிறுவனங்களால், மிகவும் பலவீனமான நிலையில் இருந்துவரும் குழுக்கள் சுரண்டப்படுவதையும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதையும் தடுத்துக்கொள்ளும் பொருட்டு, கடன் தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதை, நிறுத்தி வைக்கும் ஒரு காலப் பிரிவை பிரகடணம் செய்யவேண்டும் என்று, தான் அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

அனைவரையும் உள்ளடக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கென, இலங்கை முன்னெடுக்கும் ​அனைத்து வழிமுறைகளிலும், மனித உரிமைகள் மையமாக இருந்துவரவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதன் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதும் அதன் உட்கட்டமைப்பு வசதி மீதும், மனித உரிமைகள் எடுத்து வந்திருக்கும் தாக்கம் குறித்த மதிப்பீடு ஒன்றை, இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.   

2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவடைந்ததையடுத்து, கொழும்பு வெளிச்சுற்றுவட்ட கடுகதிப் பாதை, மின் உற்பத்தி நிலையங்கள், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை விமான நிலையம் என்பவற்றையும் உள்ளடக்கிய பாரியளவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டாலும், அத்தகைய கருத்திட்டங்கள் ஆரம்பிக்கடுவதற்கு முன்னர், அனை மனித உரிமைகள் மீது எடுத்துவரக்கூடிய தாக்கம் குறித்து, விரிவான மதிப்பீட்டை நடத்தவேண்டும் என்ற கடப்பாட்டை, இலங்கையின் சட்டத்​தொகுப்பு உள்ளடக்கியிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

எனவே, தற்போதைய சர்வதேச மனித உரிமைகள் தர நியமங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கம் வலுவான, அனைத்துமடங்கிய சட்டங்களை நிறைவேற்றிவைக்கவேண்டு​மென, தான் ஆலோசனைக் கூறுவதாகவும் தனது ஒன்பது நாள்கள் விஜயம் குறித்த விரிவான அறிக்கையை, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.  

கவிதா சுப்ரமணியம்

No comments

Powered by Blogger.