Header Ads



தீயினால் பெண் வைத்தியர் பலி - மயங்கிக்கிடந்த கணவரும், குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி

பொரலஸ்கமுவ- பெல்லன்வில பிரதேசத்தில்  வசித்து வந்த, வைத்திய தம்பதியினரின் இரண்டு மாடிகளைக் கொண்ட  வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக, குறித்த வைத்திய தம்பதியினரும், அவர்களது 5 வயது குழந்தையும் காயமடைந்து களுபோவிலை வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட பின்னர், 37 வயதான பெண் வைத்தியர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (6) பகல் 1.25 மணியளவில் குறித்த மூவரும், அவர்களது வீட்டின் மேல் மாடியில் இருந்தப் போதே, இந்த தீவிபத்து ஏற்பட்டதுடன், இதன்போது, வீட்டின் கீழ் பகுதியிலிருந்த அவர்களின் தாய் வீட்டை விட்டு வெளியே பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குளியலறையில் மயங்கிக் கிடந்த வைத்திய தம்பதியினரையும், அவர்களது குழந்தையையும் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தப் பின்னர், பெண் வைத்தியர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த விதர்சி டயஸ்  என்ற பெண் வைத்தியர் ஹொரன வைத்தியசாலையில், கடமையாற்றி வந்துள்ளதுடன், தற்போது சேவையில் இருந்து விலகியிருப்பவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ள வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கண் வைத்திய நிபுணராக கடமையாற்றுபவரென்றும், தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு குறித்த தீ பரவலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லையென்றும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.