Header Ads



பாம்புக் கடித்தால் மூடநம்பிக்கைகளை நாடாதீர்கள் (இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்)

-Dr. M.J.M.Suaib-

ஒப்பாரிச் சத்தத்தோடு 50 வயது மதிக்க ஆண் ட்ரொலியில் கொண்டு வரப்பட்டார். இறந்து விட்டதை உறுதிப்படுத்தி விட்டோம். இனி எதைச் செய்தாலும் எழப்போவதில்லையென்பது உறுதியானதால், மரண பரிசீலனைக்கு உத்தரவிடப்பட்டது.

வயலில் வேளாண்மை வேலை செய்து கொண்டிருக்கையில் காலில் ஒரு திடீர் வலியேற்பட்டுத் திரும்பிப்பார்க்க ஒரு பாம்பு விலகிப் போய்க் கொண்டிருந்தது. அருகிலிருந்தோர் சேர்ந்து அப்பாம்பை அடித்துக் கொன்று, அதையும் எடுத்துக் கொண்டு பாம்புப் பரிகாரியிடம் போக... பரிகாரியோ அவரின் வித்தையைக் காட்டிவிட்டார்.

அப்பாம்பு விசப்பாம்பு என்பதால் விசத்தை உறிஞ்சும் கல்லைக் கடிபட்ட இடத்தில் வைத்து அவ்வளவு விஷத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டு கூடவே பணத்தையும் உறிஞ்சு விட்டு, இனி பயப்பட வேண்டியதில்லை, எல்லா விஷத்தையும் எடுத்து விட்டேன் என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தார். விஷத்தையும் பணத்தையும் உறிஞ்சவர் இவரது உயிரையும் உறிஞ்சுவார் என அவர்கள் சிறிதும் நினைக்கவில்லை...

வீட்டுக்குப் போகையிலேயே சிற்சில உடல் மாற்றங்கள் ஏற்படத்துவங்கியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் அந்தளவு அந்தப் பரிசாரி மேல் நம்பிக்கை...

நேரஞ் செல்லச்செல்ல கண்களை முழுமையாகத் திறக்க முடியாமலும் மூச்செடுக்க முடியாமலும் அவதிப்பட, வைத்தியசாலை ஞாபகத்தில் வந்தது.

வைத்தியசாலைக்கு வரும்போதே உயிர் பிரிந்து விட்டது. இறந்த உடலையும் இறந்த பாம்பையும் தான் எங்களால் காண முடிந்தது!

கொண்டு வந்த பாம்பு, புடையன் பாம்பு என்றழைக்கப்படும் Russels viper (கண்ணாடி விரியன்/තිත් පොළගා) ஆகும். இது மிகவும் விஷமான பாம்புகளிலொன்று.

கடித்த பாம்பு விஷப்பாம்பென இனங்கண்டு கொண்டாலோ கடிபட்ட பின்னர் விஷம் உடலில் ஏறியமைக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது விஷமேறியமைக்கான மாற்றங்கள் இரத்தப் மரிசோதனை மூலம் கண்டறியப்பட்டாலோ உடன் அவ்விஷத்தை நடுநிலைப்படுத்த ஊசி மருந்தேற்றப்படும். கடிபட்ட நேரத்திலிருந்து எவ்வளவு சீக்கிரம் இம்மருந்து கொடுக்கப்படுகிறதோ அதன் பெறுபேறும் மிக நல்லதாகவேயிருக்கும். எனவே கூடிய சீக்கிரம் இம்மருந்து ஏற்றப்படல் நல்லது.

இலங்கையில் பிரதான விஷப்பாம்புகள் பின்வருவன.
1. Cobra- நல்லபாம்பு
2. Russels viper - கண்ணாடி விரியன்(புடையன் பாம்பு)
3. Common krait- 
4. Ceylon krait- 
5. Saw scaled viper-
6. கடற்பாம்புகள்.

பாம்பு கடித்து விஷம் உடலுக்குள் பாய்ச்சப்பட்டிருப்பின் பின்வரும் பொதுவான மாற்றங்களை உடல் வெளிக்காட்டும்.
கடித்த அடையாளங்கள் (இரண்டு),
கடித்த இடத்தில் வலியோடு வீக்கமும் சிவப்பு நிறமாதலும்,
பார்வை மங்குதலும் இமைகளை முழுமையாகத் திறக்க முடியாமையும்,
மூச்சுத்திணறல், 
வாந்தியும் வயிற்று வலியும்,
தானாக இரத்தம் வெளியேறல்(உ-ம்: சிறுநீருடன்),
அதிகம் வியர்த்தல்,
இரத்த அழுத்தம் குறைதல்.
இவை பொதுவான அறிகுறிகளாகும், இவற்றில் சில அறிகுறிகள் சில பாம்புகளுக்கு மட்டுமே உரியனவாகவும் உள்ளன.

பாம்புக்கடி ஏற்பட்டால் உடன் நீங்கள் செய்ய வேண்டியவை;

கடிபட்ட இடத்தை நன்கு ஓடும் நீரில் கழுவ வேண்டும்.
கடிபட்ட இடத்துக்கு மேல் (உ-ம்: காலை) இருகக்கட்டக் ""கூடாது"".
கடிபட்ட இடம் முடியுமான வரை உடலிலிருந்து கீழ் மட்டத்தில் வைக்கப்படல் வேண்டும்.
கடிபட்ட இடத்தில் வாயை வைத்து (விஷத்தை நீக்க) உறிஞ்சக் கூடாது.
கடிபட்டவரை நடக்க/அசைய விடாது ஓய்வாக இருக்க விடல்.
வைத்திய அனுமதியின்றி எம்மருந்தையும் கொடுக்கக் கூடாது.
உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லல்.

முடியுமானால் கடித்த பாம்பையும் கொண்டு போதல் வேண்டும். ஏனெனில் விஷப்பாம்பு தான் கடித்தது எனில் உடல் மாற்றங்கள் வருமுன்னமே உரிய மருந்து கொடுக்கப்படும். 
சிலரது கொள்கைப்படி அவர்கள் பாம்பைக் கொள்வதை விரும்பாவிடின், கடித்த பாம்பின் புகைப்படத்தையாவது எடுத்து வைத்தியரிடம் காட்டுதல் உதவியாக இருக்கும்.

பாம்புகளுக்கு எங்களால் ஏதேனும் இடையூறு ஏற்படின் மாத்திரமே அவை கடிக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டவொன்று!

விஷத்தை உறிஞ்சும் கல் பற்றி கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இச்சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, கல்லை மறந்து விட்டு வைத்தியசாலையை நினைப்பதே சாலச்சிறந்தது.

Dr.M.J.M.Suaib 
Base Hospital Wathupitiwala 
09/09/2018.

2 comments:

Powered by Blogger.