Header Ads



இலங்கை தேசிய கபடி அணியில், முதலாவது முஸ்லிம் வீரர்

– அனஸ் அப்பாஸ் –

முஹம்மது தம்பி – ரஹ்மத்தும்மா தம்பதிகளின் நான்கு பிள்ளைகளில் இளையவர் அஸ்லம் சஜா. இவர் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவர். தற்போது 21 வயதான அஸ்லம் கமு/நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் கல்விப் புலமை பெற்றவர்.

இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18 தொடக்கம் செப்டம்பர் 02 வரை நடைபெற்ற  ஆசிய விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றும் இலங்கை தேசிய கபடி அணியின் தமிழ் பேசும் முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திர வீரரான இவர் மிகச்சிறந்த கபடி கில்லியாக தனது திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக தேசிய அணியில் வாய்ப்பு இவரைத் தேடி வந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை கடற்படை கபடி அணியில் சிறந்த வீரராகவும் விளையாடி வருகின்றார். மேலும், முப்படைகள் பங்குகொள்ளும் முத்தரப்பு முத்தொடரில் தனது திறன் வெளிப்பாட்டால் மூன்றாமிடம் வென்றுள்ளார்.

நாட்டுக்கு பெருமை சேர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள அஸ்லம், 2016 ஆம் ஆண்டு ஈரானில் இடம்பெற்ற ஆசிய கனிஷ்ட கபடி போட்டியில் தேசிய அணி சார்பாக பங்குபற்றி இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் பெற்றுக் கொடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கபடி, சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் இவ்விளையாட்டை இந்திய தமிழர் அறிமுகம் செய்து பாரம்பரிய விளையாட்டாக விளையாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.

இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் இருப்பார்.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும். ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடிக் கபடி” (அல்லது “சடுகுடு”) என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்’ என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பாக கருதப்படுவதுண்டு. ஆண்களுக்கான கபடிக்கும், பெண்களுக்கான கபடிக்கும் சிறிய வேறுபாடும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியை வைத்துள்ள கபடி விளையாட்டை அஸ்லம் சஜா தனக்குள் உள்ளீர்த்தது எவ்வாறு? அல்லது அஸ்லம் சஜாவை கபடி விளையாட்டு தன்னுள் உள்ளீர்த்தது எப்படி? என்ற கேள்விக்கு அவரது விளக்கம் இவ்வாறு அமைகின்றது.

“பாடசாலை இளம் மாணவப் பருவத்தில் எனது பாடசாலையிலுள்ள உயர் தரத்திலுள்ள மாணவர்கள் மைதானத்தில் கபடி விளையாடுவார்கள். அப்போது நானும் விளையாட வேண்டுமென்ற எண்ணம், ஆர்வமாக அன்று எனக்கு உதித்தது. இவ்வாறு மைதானத்தில் விளையாடும் மாணவர்களை மதீனா விளையாட்டுக் கழகமே வழிநடாத்தி வந்தது. துறைசார் பல அதிகாரிகளை இக்கழகம் கொண்டிருப்பதால் இவ்விளையாட்டுக்கு ஒருவரை பயிற்சிக்கு சேர்ப்பதற்கும் சில தகுதிகளை இக்கழகம் எதிர்பார்த்தது. மதீனா விளையாட்டுக் கழகம் எதிர்பார்த்தபடி கபடி விளையாட்டுக்குத் தேவையான உடல் வலிமை, ஆர்வம், தியாகம், கீழ்ப்படிவு, நன்னடத்தை என்பவற்றால் அஸ்லம் சஜா இதில் இலகுவாக உள்ளீர்க்கப்பட்டார். தொடர் பயிற்சி தேசிய, சர்வதேச மட்டங்களுக்கு இன்று இவரை உயர்த்தி இருக்கின்றது.

பாடசாலை ரீதியாகவும், மாவட்ட, தேசிய இளைஞர் மன்றம் ஊடாகவும் போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய மட்டம் வரை சென்ற அஸ்லம், பாடசாலை கோட்ட, வலய, மாவட்ட மட்டங்களில் பல சான்றிதழ்களை வென்று முன்னேறியவர். தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து 10 வருடங்கள் தலைமை தாங்கியிருக்கின்றார். அதன் பின் இராணுவ அணியிலிருந்த நண்பர்களின் ஆலோசனைப்படி செயற்பட்டதில், நிந்தவூரிலிருந்து 8 பேர் தேசிய தெரிவுப்போட்டிக்கு சென்றனர். முதலாவது தெரிவு கண்டியில் இடம்பெற்றது. அதில் அஸ்லம் தெரிவானார். பின்னர் அத்தெரிவு தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் கொழும்பு டொரிங்டன் உள்ளக அரங்கில் இடம்பெற்ற தெரிவின் போது அஸ்லம் தேசிய ரீதியில் 8 ஆவது நபராக தெரிவு செய்யப்பட்டார்.


பின்னர் 2016 இல் ஈரான் நாட்டில் இடம்பெற்ற போட்டியில் ஜுனியர் அணியில் விளையாடினார். அதில் எங்களுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. 2016 இல் தேசிய மட்ட கடற்கரை போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்தார். அதன்பின், முப்படையின் அணியில் விளையாட அஸ்லம் சஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவ்வேளையில்தான் இலங்கை தேசிய கபடி அணிக்கான தேர்வு இடம்பெற்றது. அதில் அஸ்லம் தேசிய அணிக்கு மகிழ்வுடன் தெரிவானார். பின்னர் 12 பேர் தரப்படுத்தலில் இவருக்கு மூன்றாமிடம் கிடைத்தது. அத்துடன் தேசிய கபடி அணியின் முக்கிய 5 வீரர்களுள் ஒருவராக இவர் போற்றப்படுகின்றார். மேலும் இக் கபடி அணிக்குச் சென்ற முதலாவது சிறுபான்மையினரும் முதல் முஸ்லிம் என்ற பெருமை தனக்குண்டு என்றும் உவகை கொள்கின்றார்.

அல்ஹம்துலில்லாஹ்! முதலில் இத்தனை அடைவுகளுக்கும் உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும், அடுத்து பெற்றோர், பாடசாலை அதிபர், வழிநடத்திய ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மதீனா விளையாட்டு கழகத்தினர், நலன் விரும்பிகள், பிரதேச அரசியல்வாதிகளுக்கும் மற்றும் குறிப்பாக ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்த முன்மாதிரி S. முஹம்மது இஸ்மத் அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றார் அஸ்லம்.

தேசிய அணியில் விளையாடும் திருப்தியும், சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்த மகிழ்ச்சியும் அஸ்லம் சஜாவை உற்சாகப்படுத்தினாலும், இந்தியாவில் பிரபல கபடி ஆட்ட நட்சத்திரங்களின் பங்கேற்புடன் நடைபெறும் “Pro கபடி” விளையாட்டுப் போட்டியில் விளையாட வேண்டுமென்ற “அடுத்த இலட்சியம்” அவரை தொடர்ந்து துரத்தி வருகின்றது.

ஒருவர் எத்துறையை தெரிவு செய்தாலும் அத்துறையில் ஆசையுடன் கூடிய இலக்கு இருக்க வேண்டும். அந்த வகையில் விடாமுயற்சி மற்றும் சிறந்த பயிற்சி மூலம் சிறந்த இளைஞர், யுவதிகள் அணியொன்றை உருவாக்கி, இலங்கையில் கிழக்கு மாகாணத்தை கபடி துறையில் முன்னேற்ற ஆர்வத்துடன் கூடிய யோசனையுடன் காணப்படுகின்றார் அஸ்லம். தனது உயர்கல்வி நகர்வாக உடற்கல்வித்துறை பட்டப்படிப்பை விரைவில் தொடரவுள்ள அஸ்லம் சஜாவுக்கு வாழ்த்துக்கள்!

1 comment:

Powered by Blogger.