Header Ads



குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations Inter-agency Group for Child Mortality Estimation) வெளியிட்டுள்ள அறிக்கை.

உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப் ) மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய இந்தக் குழுவின் அறிக்கையில் குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், உலகெங்கும் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

2016இல் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 8,67,000. கடைசி ஐந்து ஆண்டுகளிலேயே 2017இல்தான் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனினும் அந்த அறிக்கையின் தரவுகளைப் பகுத்தாய்ந்தால், (ஓர் ஆண்டுக்கு உள்ள 3,15,36,000 வினாடிகளை 8,02,000ஆல் வகுத்தால்) 2017இல் சுமார் 39.3 வினாடிக்கு ஒருமுறை ஒரு வயதுக்கும் குறைவான ஓர் இந்தியக் குழந்தை உயிரிழந்துள்ளது தெரிய வருகிறது.

உலகெங்கும் பிறக்கும் குழந்தைகளில் 18% குழந்தைகள் பிறக்கும் இந்தியாதான், உலகிலேயே ஒரு வயதை அடையும் முன்பு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடும் ஆகும்.

உலகில் பிறந்து 28 நாட்களுக்குள் இறக்கும் குழந்தைகளில் சுமார் கால் பங்கு இந்தியக் குழந்தைகள்தான். அதாவது உலகில் பிறக்கும் குழந்தைகளில் 18 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள். அதே நேரம் உலகில், பிறந்து 28 நாள்களில் இறக்கும் குழந்தைகளில் இந்தியக் குழந்தைகள் 24 சதவீதம்.

"இந்தியக் குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு, தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்கிற விவரம், பெண்கள் கல்வி விகிதம், மருத்துவ வசதிகள் எந்த அளவுக்கு எல்லோருக்கும் கிடைக்கிறது என்ற விவரம் ஆகியவற்றை குழந்தைகள் இறப்பு விகிதத்துடன் பொருத்தி பார்க்க வேண்டும்," என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரனாத்.


1990-ல் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டத்தில் இறக்கும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை 1.26 கோடியாக இருந்தது. இது 2017-ல் 54 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் உலகளவில் 50% பங்கு வகிக்கும் ஆறு நாடுகளில் (இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, சீனா) இந்தியா முதன்மையான நாடாக உள்ளது.

ஐந்து வயதுக்கு முன்னரே இறக்கும் குழந்தைகளில் 32% குழந்தைகள் இந்தியாவையும், நைஜீரியாவையும் சேர்ந்தவை. அதாவது இரு நாடுகளில் நடக்கும் இத்தகைய மரணங்கள் உலக அளவில் நடப்பதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு.


"1990களுக்கு பிறகு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதற்குக் காரணம் அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் உண்டாகியுள்ள முன்னேற்றங்கள். இதே காலகட்டத்தில் சீனா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவைவிட மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. பொது சுகாதாரத்துக்கு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 - 6% ஒதுக்கப்படவேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தியா அவ்வளவு தொகை ஒதுக்குவதில்லை," என்கிறார் ரவீந்திரனாத்.

உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள உலக சுகாதார செலவீனங்களுக்கான தரவுகளின்படி அதிக வருமானம் உள்ள நாடுகள் 5.2%, உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் 3.8%, கீழ் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் 2.5% மற்றும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் 1.4% எனும் விகிதத்தில் பொது சுகாதாரத்துக்காக செலவிடுகின்றன.

ஆனால், இந்தியாவின் விகிதம் இவை அனைத்தையும்விடக் குறைவு. மத்திய புள்ளிவிவர அலுவலகத்தின் 2018ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி 2017-18ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.28% பொது சுகாதாரத்துக்காக செலவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% நிதியை பொது சுகாதாரத்துக்கு செலவிட வேண்டும் என்று 2017இல் மத்திய அரசு வெளியிட்ட தேசிய சுகாதாரக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009-10இல் 1.12% ஆக இருந்த பொது சுகாதாரத்துக்கான செலவீனம், ஒன்பது நிதி ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதுதான் 1.28% ஆகியுள்ளது. இது 2025ல் அடையவேண்டிய இலக்கில் ஏறக்குறைய பாதி அளவுதான்.
BBC

No comments

Powered by Blogger.