Header Ads



"உறுதிப்படுத்தப்படாத செய்திகளை, வெளியிடுவது மன்னிக்க முடியாத குற்றம்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படும் பாரதூரமான சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது என ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், இவ்வாறான சதித்திட்டம் இருப்பதற்கான எவ்வித சாட்சியங்களையும் இதுவரை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை எனவும் அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இந்த கொலை சதித்திட்டம் தொடர்பாக இருக்கும் ஒரே மூலம் நாமல் குமார என்பவர் வெளியிட்டுள்ள தகவல் மாத்திரமே.

இவ்வாறான கொலை சதித்திட்டம் இருக்கின்றது என்பதற்கான எந்த சாட்சியங்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைக்கவில்லை.

மேற்படி குற்றச்சாட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான மிகவும் பாரதூரமான விடயம் என்பதால், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சகல கருத்துக்கள் மற்றும் தகவல்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த திங்கள் கிழமை மேர்சிலி தோமஸ் என்ற இந்தியரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த நபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

1979 இலக்கம் 48 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 5 வது பந்தியின் பயங்கரவாத செயல் சம்பந்தமான திட்டத்தை தெரியப்படுத்தவில்லை என்ற சந்தேகத்தில் இந்திய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்த சந்தேகம் தொடர்பாக காரணத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிக்கை மூலம் விபரமாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இந்த நிலையில், இப்படியான கொலை சதித்திட்டங்கள் இருப்பதை இந்திய பிரஜை உறுதிப்படுத்தியதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான, அடிப்படையற்ற செய்திகளை வெளியிட்டன.

எனினும் கொலை சதித்திட்டம் இருப்பதற்கான சாட்சியங்கள் எதனையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்து கொள்ள அவை தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்ள ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது.

ஆனால், இப்படியான மிகவும் பாரதூரமான விடயம் ஒன்றில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுவது மன்னிக்க முடியாத குற்றம்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.