Header Ads



ஐ.நா மனித உரிமைகள் புதிய ஆணையாளர், மிச்சேல் பசெலெட் சிறிலங்கா மீது குற்றச்சாட்டு


நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அதிகாரிகள் மிகவும் மெதுவாகவே செயற்படுகின்றனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 39 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எனினும், காணாமல் போனோருக்கான பணியகம் இப்போது கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பணியகம் தமது ஆணையை நிறைவேற்றும் வகையில்ஆற்றலைக் கட்டமைக்க வேண்டும்.

துரிதமாகச் செயற்பட்டு இந்தப் பணியகம், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விரைவாக பதிலளிக்க ஆரம்பிப்பதை எதிர்பார்த்திருக்கிறோம்.

இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்கும் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையைக் கண்டறிதல் என்பன, நாட்டின் நீண்டகால உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கும்.

அதேவேளை, மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் சிறிலங்காவின் திட்டம் மற்றும் இனவாத நோக்கிலான, சமூகங்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நடப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.