Header Ads



மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் கடந்த மே மாதம் 9-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு 60 ஆண்டு காலமாக ஆட்சி நடத்தி வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) படுதோல்வி அடைந்தது. இதனால் நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். 92 வயதான மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அங்கு 8 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த நஜிப் ரசாக், பெரும் ஊழலில் ஈடுபட்டதே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், ‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை அவர் முறைகேடாக எடுத்து, சொத்துக்குவிப்பில் ஈடுபட்டார் என்ற புகார் மீதான விசாரணை சூடு பிடித்தது. அதன் ஒரு பகுதியாக, அவருக்கு சொந்தமான கட்டிடங்களில் ஊழல் தடுப்பு போலீஸ் படையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் மலேசிய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 273 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,856 கோடி) மதிப்பிலான நகைகள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன.

ஊழலில் தொடர்பு உடையதாக கருதப்படுகிற 272 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,849 கோடி) டெபாசிட்டுகளுடன் கூடிய 408 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், நஜிப் ரசாக்கிடமும், அவரது மனைவி ரோஸ்மா மன்சோரிடமும் ஊழல் தடுப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நஜிப் ரசாக் மதியம் கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 23(1)ன்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

No comments

Powered by Blogger.