Header Ads



சவூதி அரேபியா இலங்கைக்கு, மதிப்பிட முடியாத உதவிகளை வழங்குகின்றது - றிசாத்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியாவுடனான உறவுகள், மேலும் வலுவடைய வேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரித்தார். 
சவூதி அரேபியா நாட்டின் 88 வது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று மாலை (25) இடம்பெற்ற இந்நிகழ்வில், சவூதி அரேபிய நாட்டின் உயர்மட்ட பிரமுகர்கள், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ், தயாகமகே, அனோமா கமகே மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷ, பல்வேறு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,

சவூதி அரேபியாவின் தேசிய தின விழாக் கொண்டாட்டங்களில் இலங்கை அரசின் பிரதிநிதியாகப் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில், எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அந்நாட்டில் உள்ள இரண்டு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பாளரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் அவர்களுக்கும், முடிக்குரிய இளவரசரான முஹமட் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் சவூதி அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்த சிறப்பான தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையும், சவூதி அரேபியாவும் மிகவும் நெருக்கமான உறவையும், இறுக்கமான தொடர்பையும் ஒன்றை ஒன்றை மதித்து புரிந்துணர்வுள்ள நாடாக செயற்பட்டு வருகின்றது. 1974 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளும், இராஜதந்திர உறவுகளும் மேலும், பலப்படுத்தப்பட வேண்டும். 

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, சவூதி அரேபியாவில் 02 இலட்சம்  இலங்கையர்கள் தொழில் புரிவதுடன் இதுவே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் ஆகக்கூடிய எண்ணிக்கையாகவும் உள்ளது. அந்தவகையில், சவூதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்கான மேலும் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தரவேண்டும். 

வர்த்தகம், முதலீடு, அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப அபிவிருத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை தொடர்பில், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பலமான பொருளாதார பங்குடமையை உருவாக்கியுள்ளது. அந்தவகையில், சவூதி அரேபியா இலங்கை சந்தையில் 23 வது நிலையில் முக்கிய பங்காளராக உள்ளதுடன் இலங்கையானது, சவூதி அரேபிய சந்தையில் 82 வது இடத்தில் உள்ளது. 

கடந்த 03 வருடங்களாக அதாவது, 2014 தொடக்கம் 2017 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் மொத்த வர்த்தகமானது, கிட்டத்தட்ட வருடம் ஒன்றுக்கு 215 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது. அத்துடன், கடந்த வருடம் சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது, 27 மில்லியன் அமெரிக்க டொலராகவும், மொத்த ஏற்றுமதியில் 36% சதவீதமாக இருந்தமையை நான் இங்கு நினைவுகூறுகின்றேன்.

சவூதி அரேபிய நாடானது இலங்கைக்கு மதிப்பிட முடியாத உதவிகளை வழங்கி,  இலங்கையின் பொருளாதாரத்திற்கு காத்திரமான பங்களிப்பை நல்கி வருகின்றது. கொழும்பில் வலிப்பு ஆஸ்பத்திரியை ஸ்தாபித்தல், களுகங்கை அபிவிருத்தித் திட்டம், பதுளை - செங்கலடி வீதிப்புனரமைப்புத் திட்டம், வீதி அபிவிருத்தி வலையமைப்புத் திட்டம், வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டம், களுகங்கை இருபக்க ஆற்றங்கரை அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை சவூதி அரசாங்கம் இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.   

இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும் பலதரப்பட்ட உதவிகளுக்கும் சவூதி அரசு ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கி வருவதை நாங்கள் பாராட்டுகின்றோம். அரசியல், பொருளாதாரம், சமூக விழுமியங்கள் ஆகியவற்றில் இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கக்கூடிய வகையிலும், உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் முன்னோக்கி நகர்வது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரச் சமநிலைக்கேற்ற வகையில், உலக நாடுகள் தமது இலக்குகளை மாற்றி வரும் சூழலே இன்று காணப்படுகின்றது. அந்தவகையில், எமது நாடு 2025 ஆம் ஆண்டு வளமான இலங்கையை நோக்கி தமது இலக்குகளை நகர்த்தி வருகின்றது. இந்து சமுத்திரத்திலே இலங்கை முக்கிய கேந்திர நிலையமாக இருப்பதால், சமூக மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் போட்டிச்சந்தை உள்ள இடமாக மாறியுள்ளது. அந்தவகையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டிய செயற்பாடுகளில் நாம் இறங்கியுள்ளோம்.

சவூதி அரேபிய முதலீட்டு சமூகத்தையும், வர்த்தகர்களையும் எமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பங்குதாரர்களாக இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரான அப்துல் நாசர் அல்-ஹர்தி அவர்களை நாம் வரவேற்பதோடு, எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.