Header Ads



கொழும்புக்குச் செல்வோர் ஏமாற்றப்படுவதாக வேதனை - அவதானமாக இருக்க எச்சரிக்கை

பிற மாவட்டங்களிலிருந்து கொழும்பு வரும் மக்கள் பல்வேறு வகையில் ஏமாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகளினால் அவர்கள் அதிகம் ஏமாற்றப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான சாரதிகள் அதனை புறக்கணித்துள்ளனர்.

வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்குள் நுழைவோர் இவ்வாறான சாரதிகளிடம் சிக்கி பெருமளவு பணத்தை விரயம் செய்கின்றனர்.

மீற்றர் உள்ள முச்சக்கர வண்டிகளை தேடும் பயணிகள் நுட்பமான முறையில் ஏமாற்றப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பேசிகளில் மீற்றர் உள்ளதாக தெரிவிக்கும் சில சாரதிகள், வழமையான கட்டணத்தை விடவும் அதிகமாக கட்டணத்தை அறவிடுகின்றனர்.

சாதாரணமாக ஆரம்ப கட்டணமாக 60 அறவிடப்படுவதுடன், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீற்றர்களும் 40 ரூபா அறவிடப்படுகிறது. எனினும் இவ்வாறான மோசடியான சாரதிகள் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 60 - 70 ரூபா அறிவிடுகின்றனர்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொழும்பு வருவோரை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் அதிகம் இடம்பெறுகின்றன.

இது குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் போது, அதில் காட்சிப்படுத்தப்படும் பெறுமானங்களை பயணிகள் அவதானிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பை நோக்கி நாளாந்தம் இலட்சக்கணக்கான பொதுமக்கள் தமது தேவைக்காக வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.