Header Ads



உள்ளங்கள் காயப்படாது, மனித உறவைக் கட்டியெழுப்ப உதவும் அல்குர்அன் - பேராசிரியர் பீரிஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆற்றிய உரையிலிருந்து தொகுக்கப்பட்டது.

முஸ்லிம் மீடியா போரத்தின் மிகச்சிறப்பான 32 வருட சேவையைப் பற்றி என்.எம்.அமீன் என்னிடம் குறிப்பிட்டார். அமீன் அவர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்று சிங்களம் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை மிகச் சரளமாகக் கையாள்வதைப் பற்றி பெருமைப்படுகிறேன். எமது  தாய் நாடு. தற்போதைய மிக நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. இலங்கையின் முன்னுரிமைகளின் அடிப்படையில் முஸ்லிம் மீடியா போரம் மிக முக்கியமானதொரு பணியை நிறைவேற்ற வேண்டிய நிலையிலுள்ளது. அதை இன்று நிலவும் பயம், சந்தேகம், ஐயம் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே செய்ய வேண்டியுள்ளது. இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இந்நிலையே காணப்படுகின்றது. 9.11 சம்பவத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அங்கு செல்லும் முஸ்லிம்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்தது. விமான நிலையங்களிலும் சோதனைகள், துருவித் துருவித் தேடுதல், தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு இழிவுபடுத்தவும், புண்படுத்தவும் செய்தன. அதனால் முஸ்லிம் நாடுகள் பலவும் வழக்கமாக ஓய்வு காலத்தைக் கழிக்கச் செய்வதை நிறுத்திக்கொண்டன. இவர்கள் மீது ஏற்பட்ட தப்பெண்ணமே அதற்குக் காரணமாக அமைந்தது. எங்கும் சந்தேகமும் பயமும் நிலவின. 

தனிப்பட்ட வகையில் எனக்கு ஒரு குடும்பத்தைத் தெரியும். அவர்களுடைய பிள்ளை மேற்கு அமெரிக்காவிலும் பெற்றோர் கிழக்கு அமெரிக்காவிலும் வசித்தனர். அந்தப் பிள்ளை மேற்கே இருந்து பெற்றோர்களிடம் செல்ல வேண்டுமென்று விரும்பியது. பெற்றோர் ஏன் வரவேண்டும் என்று கேட்டதற்கு இங்கு அளவுக்கதிகமான தொல்லைகளும், தொந்தரவுகளும் தருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலைமையே சர்வசாதாரணமாக எங்கும் காணப்பட்டது. இது தேவையற்ற ஒன்றாகும். இந்நிலையில் திரு அமீன் அவர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு உள்ளது. இந்தப் பீதியையும் சந்தேகங்களையும் தப்பெண்ணங்களையும் களைய வேண்டிய பொறுப்பை ஏற்று கஷ்டப்படுகிறார். 

இஸ்லாம் அன்பைப் போதிக்கும் மார்க்கம் குர்ஆனையும் திருத்தூதரின் கூற்றுக்களையும் ஆழமாகப் படித்துப் பார்க்கும்போது மிக அருமையான குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு முறை ஒரு சிலர் வந்து எமக்கு பெரும் பிரச்சினையொன்று ஏற்பட்டால் நீங்கள் எமக்கு மத்தியில் இருக்கும்போது உங்களிடம் வந்து கூறி நேரடியாகத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் இல்லாதபோது எமக்குப் பெரும் பிரச்சினையொன்று ஏற்பட்டால் எப்படித் தீர்வு காணலாம் என்று கேட்டனர். 

நீங்கள் உங்களுக்கிடையில் கலந்துரையாடி முடிவுக்கு வாருங்கள் என்று கூறினார்கள். எவ்வளவு கடுமையான பிரச்சினையானாலும் மனந்திறந்து பேசுதல் மூலம் முடிவுக்கு வருதல் என்று சுருக்கமாகக் கூறினார்கள். ஜனநாயகத்தின் சாரமே இக்கூற்றில் அமைந்துள்ளது. ஜனநாயக எண்ணக்கருவின் அடிப்படையை இது எடுத்துக் காட்டுகிறது. இக்கூற்றில் எல்லோரையும் சமமாக மதித்து எல்லோரையும் இணைத்துச் செயல்படடும் முறை தரப்படுகின்றது. இஸ்லாத்தில் விசுவாசங்கொண்டவர் விசுவாசங்கொள்ளாதவர் என்ற பேதம் இல்லை. நீங்கள் எல்லோரும் கடவுளின் சிருஷ்டகள் என்று கூறி எல்லோரையும் உள்வாங்கி அணைத்துப் பேசுகிறார்கள். ஏற்றத்தாழ்வின்றி சமத்துவமாக கலந்துரையாடி முடிவுக்கு வருமாறு கூறினார்கள். 

இதுபோன்று மிகவும் அழகான கருத்துக்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. ஒருவர் உங்களிடம் வேலை செய்தால் அவருக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை அன்பளிப்பை, கூலியை அவருடைய தோலில் இருந்து வியர்வை உலர்ந்து விட முன்னரே கொடுத்துவிடுங்கள். நீதிமன்றத்துக்குச் சென்று நீதி கேட்டுப் பெறவேண்டியதொன்றல்ல. அது ஒரு மானசீகமான கடப்பாடு. அவரை மதித்து அவருக்கு வழங்க வேண்டும். மனிதாபிமான உணர்வுபூர்வமாக இஸ்லாம் 
வேலையாளனை எவ்வாறு மதிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 

இன்னும் மிக இனிமையான கருத்துக்கள் காணப்படுகின்றன. உங்கள் வீட்டில் சுவையான மணம் வீசும் உணவுகளைச் சமைக்க நேர்ந்தால் ஏதோ காரணத்தால் அதை மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்ள முடியாவிட்டால் அந்தச் சமையலின் வாசம் அயல் வீட்டுக்காரர்களுக்கு எட்டாமற் பாதுகாத்துக்கொள்ளுங்கள் இன்றே. அதனால் பொறாமை, வைராக்கியம், கோபம் ஏற்படும் என்றார்கள். அண்டை வீட்டாரோடு அத்தகைய வெறுப்பு துவேசம் ஏற்பட இடமளிக்கக்கூடாது என்று போதித்தார்கள். மற்றவர்களுடைய உள்ளம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய இஸ்லாமிய வேத வாக்கியங்கள் மனித சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்ப ஆதாரமான நினைவுச் சின்னமாக விளங்குகிறது. மக்களின் மனங்களை வென்று நெருங்குவதற்கு வழிவகுக்கின்றது. உள்ளங்கள் காயப்படாது மாண்பு மிக்க மனித உறவைக் கட்டியெழுப்ப உதவுகிறது. 

நாகரிகங்களுக்கு இடையிலான மோதல் என்ற நூலில் சாமுவேல் ஹண்டிங்டன் கிறிஸ்த்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான வெளிப்படையான வெறுப்பையும் சந்தேகத்தையும் எடுத்துக்காட்டுகிறார். இவ்விரு சமயங்களும் இருவேறு துருவமுனையில் புகுத்தப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு சமயங்களினதும் பெறுமானங்களுக்கும் விழுமியங்களுக்குமிடையில் அடிப்படையில் வித்தியாசம் இல்லை. வெறும் சந்தேகங்களே காரணம் எனக்கூறுகிறார். மேடையிலே துருக்கி நாட்டுத் தூதுவரும் பங்களாதேஷ் நாட்டுத் தூதுவரும் வீற்றிருக்கிறார்கள். இரண்டும் முஸ்லிம் நாடுகள் ஆனால் கலாசாரங்கள் வேறுபட்டவை. சவூதி அரேபியாவிலும், ஈரானிலும் உள்ளதுபோன்றே இந்நாடுகளிலட் கலாசாரங்கள் இல்லை. ஆனால் அதேநேரம் பெறுமானங்கள் விழுமியங்களுக்கிடையில் எவ்வித வேறுபாடு இல்லை. சற்று முன்னர் அமீன் அவர்கள் எமது நிலையைக் குறிப்பிட்டார். 

இலங்கையிலும் நாம் எமக்கிடையே காணப்படும் பொதுவான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். அரசியலில் தனித்தனியாக இனங்களுக்கென்று அரசியல் கட்சிகள் தேவையா? முஸ்லிம் கட்சி, சிங்களக் கட்சி, தமிழ்க் கட்சி என்று தேவையா? ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இது முற்றிலும் நூதனமான ஒரு போக்காகும். 

மேன்மை வாய்ந்த மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களிடம் ஒரு குழுவினர் வந்து தேர்தலில் போட்டியிடுவதற்கா கத்தோலிக்க அரசியல் கட்சியொன்றை உருவாக்கப் போவதாக கூறினார். அவ்வாறு செய்ய வேண்டாம். கத்தோலிக்கருக்கென தனியே ஒரு கட்சி தேவையில்லை. கத்தோலிக்க சமயம் அதற்கு உங்களுக்கு உதவாது. நாம் இணைந்து வாழ வேண்டும் என்று எல்லாப் பெறுமானங்களுக்கும் எதிரானதாகும். ஏன் உங்களுக்கு வேண்டும் அரசியல் நல்லிணக்கத்துக்கு முரணானது என்று கூறி தடை செய்ததாக என்னிடம் கூறினார். தனிப்பட்ட எந்தக் கட்சியையும் கருத்திற் கொண்டு இதை நான் கூறவில்லை. நிலையான ஒத்துப்போகும் சமாதானமே எமக்குத் தேவை. பொதுவாக நோக்கும்போது சில கருத்துக்களை உங்கள் சிந்தனைக்காக சமர்ப்பிக்க விரும்புகிறேன். 

அமைச்சர் கபீர் ஹாசீம் ஐ.தே.க வின் பொதுச் செயலாளராக இருக்கிறார். அதற்கு முன்னர் அவர் அதன் தலைவராக இருந்தார். அவர் மாவனல்லையைச் சேர்ந்தவர். முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் மட்டும் அவர் அனுப்பப்டவில்லை. பெருமளவு சிங்கள வாக்குகளாலும், ஏனைய இனங்களின் வாக்குகளினாலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கௌரவ ஏ.ஸீ.எஸ்.ஹமீத் நீண்ட காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர். நாட்டில் குழப்பகரமான சூழல் நிலவிய கொந்தளிப்பான காலத்தில் 11 வருடங்கள் அமைச்சராக இருந்தார். கொழும்பு பல்கலைக்ககை உபவேந்தர் ஸ்டன்லி விஜேசுந்தர சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் நான் உபவேந்தராக பதவியேற்றேன். அதிகாலை 1.00 மணிக்கு தொலைபேசியில் அழைத்தாலும் உடனே தொடர்பு கொள்வார். ஹாரிஸ் பத்துவைச் சேரந்தவர். அவருக்கு அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களைவிட ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் பெருமளவு ஆதரவு இருந்தது. ஐ.தே.க முஸ்லிம் தலைவராக இருந்தார். கௌரவ பாக்கீர் மாக்கார் அவர்களும் மாக்கான் மாகார் ஆகியோரும் ஐ.தே.க தலைவர்களாக இருந்தனர். ஸ்ரீ.சு.க அப்படித்தான் இருந்தது. எனது சகபாடி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி அவர்களுக்கும் பெருந்தொகையான சிங்கள வாக்குகள் கிடைத்தன. அவர் ஒருமுறை மொறட்டுவ தொகுதியில் போட்டியிட்டபோதும் பெருமளவு ஆதரவு கிடைத்தது. இவ்வாறு ஐ.தே.கவிலும் ஸ்ரீ.சு.க விலும் தமது திறமைத் தகுதிக்கு ஏற்ப இருந்தனர். அதற்கு முன்னர் எஸ்.டப்.ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்தில் சி.ஏ.எஸ்.மரிக்கார் பதியுதீன் மஹ்மூத் ஆகியோரும் இருந்துள்ளனர். 


ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்து வந்துள்ளது. முஸ்லிம்கள் திறமையின் அடிப்படையில் உச்சத்துக்கே வர முடிந்தது.  அமீன் ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்களும் பிரச்சினைகளும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.  இந்நிலையில் தவிர்க்க முடியாததாகவும் எதிர்பாராததுமாக முஸ்லிம் கட்சிகள் உருவாகின. 1994 இருந்து நான் அரசியலில் ஈடுபடுகிறேன். எமது பிரச்சினைகளுக்கு எம்மிடம் தீர்வு உள்ளது. எம்முடன் ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பல்கலைக்ககத்தில் கற்பித்தேன். சிங்களம், தமிழ், முஸ்லிம் என எல்லா மாணவர்களும் இருந்தனர். 

கடந்த 17/18 மாதங்களுக்கு முன்னரே நாம் பொ.ஐ.மு யின் மகாநாட்டை அநுராதபுரத்தில் கூட்டியிருந்தோம். அதில் 850 முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் சமூகமளித்திருந்தனர். பின்னர் பத்தரமுல்லையிலும் கூடினோம். முஸ்லிம்களும் பஸில் ராஜபக்ஷவும் நானும் விரிந்த மனதுடன் சீர்திருத்தியமைக்கிறோம். இதை விட வேறு எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பதைப்பற்றி ஆழமாக சிந்திக்கிறோம். எல்லோரையும் இணைத்துக் கொண்டு எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை அனுபவ ரீதியாக எமது வரலாறு காட்டுகிறது. எமது சமுதாயம் மேலும் துண்டாடப்பட்ட கட்சிகளாகவும் தனித்தனியாக பிரித்து நோக்கும் கட்சிகளாகவும் இருக்கக்கூடாது. முஸ்லிம் நலன்களைக் கவனிக்க முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தேவையில்லை. தேசியக் கட்சிகளினால் முடியும். உண்மையில் நாம் இப்போது அதைத்தான் கவனித்திற்கொள்ள வேண்டும் என்பதை உங்ளது சிந்தனைக்கு விடுகிறேன். அமீன் அவர்கள் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் நல்ல நோக்கத்தோடுதான் சொல்கிறேன். அமீன் தலைமை தாங்கும் மு.மீ போரத்துக்கு இந்த இக்கட்டான காலத்தில் பெரும்பொறுப்பொன்று இருக்கிறது. கிராமிய மட்டத்தில் எமது உறவுகள் நன்றாக இருக்கிறது. இன்பத்திலும் துன்பத்திலும் எந்த வேறுபாடும்யின்றிக் கலந்து கொள்கிறார். மரணச்சடங்குகளிலும் ஒன்றாகக் கூடுகிறார்கள். சமாதானமும் சகவாழ்வும் நிலவுகிறது. துரதிஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றதாக அமீன் அவர்கள் குறிப்பிட்டார். 

இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்கு உறுதியாகவும் மனச்சாட்சிக்குப் பொருத்தமாகவும் மிகவும் நேர்மையாகவும் கூறுகிறேன். நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். நாட்டு மக்கள் எல்லோரும் சமயம், மொழி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோருக்கும் பாதுக்காப்பாகவும் மனிதன் என்ற வகையில் எல்லா ஆற்றல்கள், திறமைகளையும் வளர்த்துக்கொள்ளவும் அவற்றை பூரணமாக அனுபவிக்கவும் நடவடிக்கை எடுக்கிறோம். பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சிறுபான்மையினரின் உணர்வுகளையும் மதித்துக் கருத்தில் எடுத்துள்ளோம். இவற்றை பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்தே செய்ய வேண்டும். பொதுஜன பெரமுன எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. விரிவான, வீடு மற்றும் சொத்துக்கள், வியாபாரம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பும் உறுதியும் வழங்குகிறோம். என்றார்.

தமிழில் எம்.எம். றாசிக்

2 comments:

  1. இஸ்லாத்தைப் பற்றி முஸ்லீமல்லாதோர் தெரிந்துகொண்டளவு கூட முஸ்லீம்கள் தெரிந்து கொண்டுள்ளார்களா?

    ReplyDelete
  2. No,No. Leave us alone. Thank you for your golden advice.

    ReplyDelete

Powered by Blogger.