Header Ads



அழிந்து போகுமா புத்தளம்..?

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- 

புத்தளம் மாவட்டத்தில் சீமெந்து தொழிற்சாலை (1967) ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் சுற்றுச் சூழல் மாசடைதல் பற்றி பேசப்பட்டது, பின்னர் நுரைச் சோலை அனல் மின்சார உற்பத்தி நிலையம் (2006) ஆரம்பிக்கப் பட்ட பொழுது சுற்றுச் சூழல் மாசடைதல் குறித்து குரல் எழுப்பப் பட்டது எதுவும் நடக்க வில்லை, அவற்றின் விளைவுகளை அந்த மாவட்ட மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது கொழும்புக் கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டிற்கு கொண்டு சென்று முகாமை செய்வதற்கான பாரிய வேலைத் திட்டத்தை 105 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து சுமார் 1200 மெற்றிக் டொன் கழிவுகளை புகையிரதம் மூலம்  அங்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றன, மேற்படி கழிவு முகாமை செயற்திட்டத்தை சீனா ஹார்பர் எனும் ஒரு சீன நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை மக்கள்  அதிகமாகக் கொண்ட பகுதிகளிலேயே இந்த கருத்திட்டங்கள் மேற்கொள்ளப் படுவதாகவும் குற்றம் சுமத்தப் படுகின்றது, வளி மாசடைதல், நிலத்திற்கு கீழ் நீர் வளம் மாசடைதல், கடல் களப்புக்கள் மாசடைதல் போன்ற காரணிகளால் மனிதர்கள் அவர்களது வாழ்வாதாரங்கள் (உப்பு உற்பத்தி, இறால் வளர்ப்பு, மீன்பிடி, விவசாயம்)  மாத்திரமன்றி நிலத்தில் நீரில் உயிரினங்கள் பறவைகள், பயிர்ச் செய்கைகள் என சகலதும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர் வரும் காலங்களில் அணுமின் உற்பத்தி நிலையமும் புத்தளப் பிரதேசத்தில் அமையும் சாத்தியப் பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது, உண்மையில் இத்தகைய நீண்டகால விளைவுகளை கருத்திற் கொள்ளாத கருத் திட்டங்களால் புத்தள கரையோரப் பிரதேசங்கள் மாத்திரமன்றி குருநாகல் மன்னார் அனுராதபுரம் பொலன்னறுவை மாவட்டங்களும் வெகுவாகப் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது.

இது ஒரு சிறுபான்மைச் சமூகத்திற்கோ பிரதேசத்திற்கோ உள்ள பிரச்சினை அல்ல, இது முழு தேசத்திற்குமான ஒரு பிரச்சினையாகும், இலங்கையில் (குறிப்பாக மேல்மாகாணத்தில் 60%)  தினமும் சேர்க்கப் படும் 8000 மெற்றிக் டொன் கழிவுப் பொருட்களில் சுமார் 58% வீதமானவை சேதனப் பசலையினை உற்பத்தி செய்ய முடியுமானவை, அவற்றிலிருந்து உயிரியல் எரிவாயு பெறப்பட முடியும், கணிசமான கழிவுகளை மீள் சுழற்சி செய்ய முடியும் என்றிருக்கும் பொழுது குறுகிய அரசியல் மற்றும் முதலீட்டு நோக்கங்களுடன் ஊழல் மோசடிகள் நிறைந்த திட்டங்களை அவசர அவசரமாக அரசாங்கங்கள் மேற்கொள்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் காட்டு யானைகள் கிராமங்களிற்குள் நகர்ந்து பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றமைக்கு முறைகேடான கழிவகற்றல் காரணமாக இருக்கிறது, நாடுங்கும் சுமார் 55 இடங்களில் 300 இற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குப்பை மேடுகளை நோக்கி படையெடுக்கின்றமையால் சுற்று வட்டாரத்திலுள்ள பல கிராமங்கள் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

தற்பொழுது துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவரும் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம் கொழும்பு மாநகர சபையிடமிருந்து ஏன் பாரிய நகர பிவிருத்தி அமைச்சிடம் சென்றது? எவ்வாறு அவசர அவசரமாக சுற்றுச் சூழல் தாக்கங்கள் அறிக்கைகள் பெறப்பட்டன?, எவ்வாறு கருத்திட்ட விலை மனுக் கோரல் இடம் பெற்றது?, குறிப்பிட்ட சீன நிறுவனத்தின் துறை சார் பின்புலம், அதன் சர்வதேச தொழிற்பாடுகள் சார் பரிசீலனை, முதலீட்டுக்கான கடன் பெறப்படும் முறை என இன்னொரன்ன விவகாரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை பிரதேச மற்றும் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.

அதேவேளை, கழிவு முகாமைத்துவம் என்பது முழு தேசத்திற்குமான ஒரு பிரச்சினையாகும், அதற்கு குறிப்பிட்ட எந்தவொரு சமூகமும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை, தெரிவிக்கவும் கூடாது ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் மாத்திரமே இவ்வாறான எல்லாத் திட்டங்களையும் குவிப்பதுவும், மாற்று வழிகள் கண்டறியப் படாமையும் அல்லது கவனத்திற் கொள்ளப் படாமையும் தான்  கவலைக்குரிய விடயங்களாகும்.

குறிப்பிட்ட பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மீது அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் மீதும் பாரிய கடப்பாடு இருக்கிறது, அரசியல் ரீதியான அணுகுமுறைகள், சட்டரீதியிலான அணுகுமுறைகள், தேசிய சர்வதேசிய அடிப்படை உரிமைகள், சூழல் அமைப்புகளூடான நடவடிக்கைகள் அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் அவற்றிற்குத் தேவையான நிதிவளங்களை மற்றும் நிபுணத்துவ உதவிகளை பெற்றுக் கொடுத்தல் என்பவற்றை மக்கள் பிரதிநிதிகளே முன்னின்று செய்தல் வேண்டும், அவர்களுக்குரிய சிறப்புச் சலுகைகளை அவர்கள் முழுமையாக பயன படுத்துதல் வேண்டும்.

இவாறான பாரிய வெளிநாட்டு முதலீடுகளின் பொழுது ஊழல் மோசடிகள் இடம்பெறுவது மூன்றாம் உலக நாடுகளில் புதிய விடயமும் அல்ல, இலங்கையைப் பொறுத்தவரை அன்றாடம் ஒரு செய்தியை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம், அத்தகைய மோசடி நோக்கங்களிற்காகவே பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்பட்டும் உள்ளன, உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பல்வேறு தரப்புக்களும் விலை போயுள்ளமையும் அன்றாட செய்திகளாகிவிட்டன.

சிறுபான்மை சமூகங்கள் வாழுகின்ற பிரதேசங்களில் மாத்திரம் பாகுபாடுகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் இடம் பெறுமாயின் அவ்வப்பிரதேச மக்கள் குறுகிய இடைக்கால மற்றும் நீண்டகால நன்மைகளைக் கருத்திற் கொண்டு மிகவும் சமயோசிதமான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் கட்டாயமாகும், வேகமாக வளர்ந்துவரும் நகரமயமாக்களுடன் இவ்வாறான அணுகுமுறைகள் மறைமுகமான தொடுக்கப் படும் நூதனமான மோதல் நிலையாகவே அணுகப் படுதல் வேண்டும்.

கழிவகற்றல் தொடர்பான சவால்களை ஒரு தேசியப் பிரச்சினையாக கையாண்டு நாடளாவிய ரீதியில் திட்டமிட்டு தேசியக் கொள்கை மூலோபாயத் திட்டங்களினூடாக தற்பொழுது இருக்கின்ற மாகாண மற்றும் உள்ளூராட்சிக் கட்டமைப்புக்கள் சுதேச முதலீட்டாளர்களூடாக ஏன் அரசிற்குச் செய்ய முடியாதுள்ளது? எதற்காக  சுமார் 4500 உறுப்பினர்களாக இருந்த ஊராட்சி நகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப் பட்டது?

இத்தகைய குறுகிய இலக்குகளைக் கொண்ட திட்டங்களால் சுற்றுச் சூழல் மாசடைவது மாத்திரமன்றி மனிதர்கள் உயிரினங்கள் மற்றும் ஏனைய வளங்கள் பாரிய பாதிப்பிற்கு உள்ளாவதோடு வரியிருப்பாளர்களின் பணம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விரயமாக்கப் படுகின்றமை ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மீது மென்மேலும் வரிச் சுமைகளை மாத்திரமன்றி வாழ்க்கைச் செலவினங்களையும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இறுதியாக, சூழல் சார் பிரச்சினைகள் ஒரு தேசியப் பிரச்சினையாகும், அவை இன மத குல பிரதேச வேறுபாடுகளின்றி சகல குடிமக்களையும் ஏதோ ஒருவகையில் பாதிக்கத் தான் போகின்றன, இவ்வாறான சவால்கள் எமது வீட்டுக் கதவுகளை தட்டும் வரை காத்திராது நாட்டின் எந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டாலும் சகல இன மத மக்களுடனும் கைகோர்த்து தோளோடு தோள் நின்று நாம் போராட முன்வருதல் வேண்டும், அதேபோன்றே பொதுவான பிரச்சினைகளின் பொழுது சமூகத்தை முன்னின்று வழி நடத்துகின்ற குழுக்களிற்கு சகல தரப்புக்களும் தம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு முன்வருதல் வேண்டும்.

அறுவக்காட்டு கழிவு முகாமை செயற்திட்டம் அனல் மின் நிலையம் போன்று சிமெந்து ஆலை போன்று மக்கள் மீது திணிக்கப் படுகின்ற சாத்தியக் பாடுகளே அதிகம் இருப்பினும் தொடர்ந்தேர்ச்சியிலான மக்கள் அழுத்தத்தின் மூலம் பல சாதகமான விளைவுகளை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தேசிய கொள்கை வகுப்பினூடாக நாடு தழுவிய கழிவு முகாமை, மீள் சுழற்சி வேலைத்திட்டங்களை உள்ளூராட்சிக் கட்டமைப்புகளூடாக  மேற்கொள்வதற்குரிய முனைப்புகளை அரசு எடுப்பதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தலாம்,  அவ்வாறான நாடு தழுவிய சமநிலை பேணும் திட்டங்களூடாக புத்தளத்தில் குவியும் கழிவுகளை மற்றும் அதன் தாக்கங்களை கணிசமான அளவு கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

1 comment:

Powered by Blogger.