September 23, 2018

"ரூபாவின் குத்துக்கரணமும், அதன் பொருளாதார விளைவுகளும்"

-கலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்-

அண்மைய சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமான விதத்தில் வீழ்ச்சியடைந்து செல்வது அனைவரினதும் பேசுபொருளாகி இருக்கிறது. வரலாறு காணாத வகையில் இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலர் சடுதியாக அதிகரித்து 170 ரூபா என்னும் மட்டத்தை அடைந்திருக்கிறது. இது வியாபார மட்டத்தில் மிகுந்த அதிருப்தியையும் உத்தேச எதிர்பார்க்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 தொடக்கம் செப்டெம்பர் 20 வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதன் மிகப்பெறுமதியாகிய 154.90 இலிருந்து 168.78 ஆகிய மட்டத்தை அடைந்தது.

பின்வரும் அட்டவணை 2018.03.25 – 2018.09.20 காலப்பகுதியில் ஆசியாவின் முக்கிய நாடுகளின் நாணயங்கள் தேய்வடைந்த விதத்தைக் காட்டுகிறது.

இதன்படி நோக்குமிடத்து அமெரிக்க டொலரின் பெறுமதியானது ஆசிய நாணயங்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. சில நாடுகளில் அவற்றின் உள்ளூர் நாணயங்கள் அதிகளவு தேய்வுக்கு உள்ளாகியுள்ளமையும் தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டு நாணயத்தின் பெறுமதி அதிகரித்துச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள இச் சடுதியான வீழ்ச்சிக்கு சர்வதேச ரீதியில் டொலரின் பெறுமதி அதிகரிப்பே காரணமென்றும் உள்ளூர் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையவில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி காரணம் கூறுகிறது. அத்துடன் 2011/12 காலப்பகுதிகளில் ஏற்பட்ட 12 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதெனவும். இலங்கை மத்திய வங்கியிடம் கடன் தவணைகளை மீளச்செலுத்தப் போதுமான வெளிநாட்டு ஒதுக்குகள் உள்ளதாகவும் ஆறுதல் கூறுகிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபா அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை எனவும் ஒப்பீடு செய்கிறது. அதேவேளை வங்காளதேசம் மற்றும் வியட்னாம் ஆகிய நாட்டு நாணயங்கள் மிகவும் குறைந்த மட்டத்தேய்வினையே அடைந்துள்ளதையும் நாம் அட்டவணையிலிருந்து நோக்கலாம்.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கீழ்ச்சியடைந்து செல்கின்றமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று உள்நாட்டுப் பொருளாதாரத்தின் உறுதியற்ற தளம்பல் நிலை. மற்றொன்று உலகளாவியரீதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு வாதப் பொருளாதாரக் கொள்கைகள்.

இவற்றுள் காலங்காலமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதற்கு உள்நாட்டு காரணிகளே பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளன. அரசாங்கம் நாணய மாற்று வீத நிர்ணயிப்பில் தலையிடாத நிலையில் முழுக்க முழுக்க சந்தை சக்திகளால் அது முழுமையாக நிர்ணயிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் ஒரு ஐக்கிய அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவிலான விலையாகிய நாணயமாற்று வீதத்தை ஐக்கிய அமெரிக்க டொலருக்கான சந்தைக் கேள்வியும் அதன் நிரம்பலும் சேர்ந்து நிர்ணயிக்கின்றன.

இலங்கைக்கு டொலர்கள் கிடைக்கும் மூலாதாரங்களும் அவ்வாறே டொலரை செலவிட வேண்டிய தேவைகளும் உண்டு. ஏற்றுமதி, கடன்பெறல், இலங்கையர் வெளிநாட்டில் உழைத்து அனுப்பும் பணம், வெளிநாட்டு முதலீடுகளின் உள்வருகை போன்ற நடவடிக்கைகள் ஊடாக இலங்கைக்கு டொலர் நிரம்பல் செய்யப்படுகிறது. அவ்வாறே இறக்குமதி, கடன் மீளச் செலுத்தல் முயற்சியாண்மை இலாபங்களைக் கொண்டு செல்லல் போன்ற பல்வேறு காரணங்களால் டொலர் வெளியே செல்கிறது. இவ்விருவகையான பாய்ச்சல்களையே நாம் சென்மதி நிலுவை எனக்குறிப்பிடுகிறோம். இலங்கையைப் பொறுத்தவரை உள்வரும் டொலர்களின் அளவைவிட இருமடங்கு செலுத்தல்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளவேண்டிய நிலை தொடர்ச்சியாக உள்ளது. இதனால் டொலருக்கு பற்றாக்குறை ஏற்படுவதனால் அதன் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் மிகப்பலவீனமான ஒரு அம்சமாக இது பார்க்கப்பட்டபோதிலும் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இதனை ஒரு சாதகமான தன்மையாகவே பார்க்க முனைகின்றன. உதாரணமாக

தற்போது டொலரின் விலை சடுதியாக அதிகரித்துச் செல்வதால் இறக்குமதி பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்கின்றன. இறக்குமதி செய்யப்படும் எதுவும் இதில் விதிவிலக்கில்லை. உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடக்கம் அதி ஆடம்பர சொகுசு மோட்டார் ஊர்திகள் வரை பலவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக உள்நாட்டு நுகர்வோர் வெளிநாட்டுப் பொருள்களைக் கைவிட்டு உள்ளூரில் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொள்வனவு செய்ய முயல்வர். இதனால் உள்ளூர் உற்பத்தி பெருகும்; இறக்குமதிகள் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக டொலர் நாட்டுக்கு வெளியில் செல்வது குறையும் எனக் கருதப்படுகிறது. மறுபுறம் வெளிநாட்டவர் பார்வையில் முன்னர் ஒரு டொலரைக் கொடுத்து 153 ரூபா பெறுமதியான இலங்கைப் பொருளை இறக்குமதி செய்த ஒருவர், தற்போது 169 ரூபா பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்யமுடியும். எனவே இலங்கைப் பொருள் வெளிநாட்டவருக்கு மலிவானதாக மாறியுள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான கேள்விகளை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதிகள் அதிகரிப்பதால் டொலர் இலங்கைக்கும் அதிகளவில் உள்வருவதால் டொலரின் விலை படிப்படியாகக் குறையும் என்பது கோட்பாட்டு ரீதியாக சொல்லக்கூடிய விளக்கமாகும். ஆனால் இவ்வாறு நடைமுறையில் நிகழக்கூடிய வாய்ப்புகள் மிகமிக அரிது. எனவே டொலரின் எழுச்சியானது இலங்கைப் பொருளாதாரத்திலும் மோசமான பணவீக்க நிலைமையினையும் வெளிநாட்டு முதலீட்டு உள்வருகையில் பெருந்தாக்கத்தையும் ஏற்படுத்தும். இது பொருளாதார உறுதிப்பாட்டை பாதித்து நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தும். இந் நிச்சயமற்ற சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கும்.

ஒரு அண்டாவில் நீர் நிரப்பி அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டிய நிலையில் அதன் உள்ளே விடப்பட்ட நண்டு எவ்வாறு சூடேறு முன்னர் நீந்திக் களிக்குமோ அவ்வாறே பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் இப்போதைய பொருளாதார சூழலை இலகுவாக எடுத்துக் கொள்கின்றன. அடுத்து வரும் வாரங்களுக்குள் பாரிய டொலர் உட்பாய்ச்சல் நாட்டுக்குள் உள்வராவிட்டால் நி​ைலமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இயலாது.

நுகர்வுப் பொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள்விலை அதிகரிப்பு பயணக்கட்டண அதிகரிப்பு, உள்ளிட்ட அதிகரிப்புகள் வாழ்க்கைச் செலவினை எகிறச்செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் அதேவேளை அண்மையில் வரிகளின் அதிகரிப்பு காரணமாக மத்தியதர வர்க்கத்தின் மெய்வருமானத்தில் பாரிய ஒரு அடி விழுந்துள்ளது. எனவே 100 ரூபா சம்பளமாகப் பெறும் ஒருவர் செலவு செய்யக்கூடிய அளவாக 50 ரூபா மட்டுமே அமையும்.

மீதி 50 ரூபா ஒரு புறம் விலை அதிகரிப்பினாலும் மறுபுறம் அரசாங்க வரிகளாலும் விழுங்கப்பட்டு விடும்.

சர்வதேசக் காரணங்களால் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுக்க முடியாவிட்டாலும் உள்ளூர் காரணிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அவசியம். அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்காக அரசாங்கம் இறக்குமதி செய்யும் வாகனங்கள், தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட எல்லா மட்டங்களிலும் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய காலப்பகுதி இது.

அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக செலவினக்குறைப்பை செய்ய வேண்டியது அவசியம். அரச துறை நடவடிக்கை காரணமாக வெளியேறும் ஒவ்வொரு டொலரையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தே அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எதிர்பார்ப்பை விட மோசமானதொரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதிலிருந்து மீண்டு வருவது இலகுவானதாக இருக்காது. பதவியில் உள்ள அரசாங்கம் அதற்காக செலுத்த வேண்டிய 'அரசியல்' விலை மிக மிக அதிகமானதாக இருக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment