September 18, 2018

ஐ.நா வின் வருடாந்த அமர்வு, இன்று ஆரம்பம் - சாதிப்பார்களா..? கேளிக்கை ஆகுமா..??

-By : M.Naushad Mohideen-
ஓவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் பிறந்து விட்டால் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்க்கும் விடயம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடராகும். இவ்வருடமும் செப்டம்பர் 18ம் திகதி இந்த உலகத் தலைவர்கள் ஒன்று கூடும் ஐக்கிய நாடுகள் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் 73வது வருடாந்த பொதுக் கூட்டத் தொடராகும்.

இரண்டாவது உலக மகா யுத்தம் முடிவடைந்த கையோடு 1945ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பு தான் ஐக்கிய நாடுகள் சபை. இரண்டாவது உலக மகா யுத்தம் போன்ற ஒரு அழிவும், நாடுகளுக்கு இடையிலான மோதலும் இனிமேல் இந்தப் புவியில் இடம்பெறக் கூடாது என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம். நாடுகளுக்கு இடையில் சமாதானம், தேசங்களுக்கு உள்ளே வாழும் மக்கள் மத்தியில் சமத்துவம், நல்லுறவு, நல்லாட்சி, ஜனநாயக விழுமியங்கள் என்பன அதன் ஏனைய குறிக்கோள்களாக உள்ளன. 51 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று 73 வருடங்களை எட்டியுள்ள நிலையில் 193 இறைமையுள்ள தேசங்கள் அங்கம் வகிக்கின்றன. அங்கத்துவ நாடுகள் ரீதியாகவும், சனத்தொகை ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பலம் அதன் ஆரம்பத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அது உருவாக்கப்பட்ட உன்னதமான நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற ஒரு மேலோட்டமான ஆய்வினையை இங்கு நாம் மேற்கொள்ள விளைகின்றோம். மிகவும் கவலை தரும் வகையில் அது இன்னமும் நிறைவேறவில்லை என்ற பதிலோடு தான் இந்த ஆய்வுக்குள் பிரவேசிக்க வேண்டியும் உள்ளது. இதற்காக நாம் ஆராய்ந்த சில தகவல்களை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆரம்ப கட்டத்திலேயே அதன் நோக்கங்களைத் தவறவிட்டு அவற்றில் தோல்வி கண்ட ஒரு அமைப்பாத் தான் காணப்படுகின்றது. ஐ.நா உருவாக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் அதாவது 1948 மே 14ல் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு உருவாக்கப்பட்டது. இந்த நாட்டை உருவாக்குவதற்காக சுமார் ஏழு லட்சம் பலஸ்தீன மக்கள் தங்களது பூர்வீக இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். உலக நாடுகள் பலவற்றில் அவர்களுள் பலர் இன்னமும் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தமது காணிகளுக்குரிய உறுதிப்பத்திரங்களும் வீடுகளுக்கான சாவிகளும் கூட இன்னமும் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் இன்று வெறும் நினைவுப் பொருள்கள் ஆகிவிட்டன. இன்று வரை பலஸ்தீன மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத கையாலாகாத அமைப்பாகத் தான் ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒரு காலம் கடந்த கட்டமைப்பு என்று நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அதை எந்த வகையிலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில் தான் ஐ.நா அமைப்பு உள்ளது. பொதுச் சபையில் 193 நாடுகள் இருந்தாலும் கூட அங்கு பெரும்பான்மை பலத்தோடு மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும், ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள பாதுகாப்புச் சபையால் ஒரேயொரு வீட்டோ வின் மூலம் வலுவற்றதாக்கி விடலாம். இதன் மூலம் உலகின் ஒட்டு மொத்த ஜனநாயக விழுமியங்களும் தலைகுனிந்து நிற்கும் ஒரு இடமாகத்தான் ஐ.நா காணப்படுகின்றதே தவிர அங்கு ஜனநாயக விழுமியங்கள் தலைத்தோங்கவில்லை.

1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மனித உரிமைகள் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பல நாடுகள் இன்னமும் உலகில் உள்ளன. அது மட்டுமல்ல அதை தொடராகவும் அவ்வப்போதும் பகிரங்கமாக மீறி வருகின்ற பல நாடுகளும் உலகில் உள்ளன. இந்த நாடுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட நாடுகள் பல அதற்கான தண்டனைகளை அனுபவித்துள்ளன. ஆனால் அவர்களின் விருப்புக்குரிய பல நாடுகளுக்கு இந்த விடயத்தில் விடுபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளமை நிதர்ஸனமாகும். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் மனித உரிமைகளை கிள்ளுக்கீரையாக மதித்த சம்பவங்களை இங்கு குறிப்பிடத் தொடங்கினால் வேறு விடயங்கள் பற்றி பேசவே முடியாமல் போய்விடும்.

1970ம் ஆண்டு உலகளாவிய அணு ஆயுத பரம்பல் தவிர்ப்பு பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. இதில் 190 நாடுகள் ஒப்பமிட்டன. ஆனால் இந்தப் பிரகடனத்தின் பின் அணு ஆயுத பலத்தை வைத்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை அலங்கரித்து வரும் எல்லா நாடுகளும் பல அணு ஆயுத சோதனைகளை நடத்திவிட்டன. ஆனால் தமது சொந்த சக்தி தேவைக்காக அணு சோதனையை மேற்கொள்ள முயன்ற நாடுகள் சில நசுக்கப்பட்டன. அறிவு ரீதியான வளங்கள் நாடுகள் மத்தியில் சமமாக இருப்பதைச் கூட அங்கீகரிக்காத ஒரு அமைப்பாகவே ஐ.நாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

நவீன உலக பயங்கரவாதத்தின் தோற்றம் எனக் குறிப்பிடப்படும் சம்பவம் 1968ல் இடம்பெற்றது. பலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களால் இஸ்ரேலிய விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவமே அதுவாகும். இந்த சம்பவத்தின் பின் 2001 செப்டம்பர் 11ல் இடம்பெற்ற மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் வரையான எல்லா சம்பவங்களையும் வெறும் வார்த்தைகளால் கண்டிக்கும் ஒரு வார்த்தை ஜால அமைப்பாகத் தான் ஐக்கிய நாடுகள் சபை இருந்து வந்துள்ளது. இந்த கையாலாகத் தனத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் நேரடியாக பல நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையான விதத்தில் தான்தோன்றித்தனமாக உலக நாடுகளில் மேய்ந்து கொண்டிருப்பதை இன்றும் அவதானிக்க முடிகின்றது.

உலக நாடுகளில் இடம்பெற்ற பாரிய அளவிலான மனித அழிவுகளின் போதும் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு அமைப்பாகத் தான் ஐக்கிய நாடுகள் சபையை அவதானிக்க முடிகின்றது.

1975 முதல் 1979 வரை கம்போடியாவை ஆட்டிப் படைத்த பொல்பொட்டின் கமரூஜ் ஆட்சியின் அட்காசங்களின் விளைவாக அந்த நாட்டின் அன்றைய சனத்தொகையில் 33 வீதமாக இருந்த சுமார் 25 லட்சம் மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இதைத் தடுக்க முடியாத ஒரு அமைப்பாகத் தான் உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா காணப்பட்டது. அப்போது அண்டை நாடான வியட்நாம் பொல்பொட்டின் அநியாயங்களைத் தட்டிக் கேற்கும் வகையில் கம்போடியாவுக்குள் படையெடுப்பு ஒன்றை நடத்தியது. இதனால் பொல்பொட் நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தார். வியட்நாம் அங்கு ஒரு புதிய ஆட்சியை உருவாக்கியது. ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்தப் புதிய அரசை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது. அந்தப் புதிய அரசுக்கு வியட்னாமின் ஆதரவு உள்ளதாக வினோதமான ஒருகாரணத்தை ஐ.நா முன்வைத்தது. 25 லட்சம் மக்களைக் கொன்று குவித்த கமரூஜ் ஆட்சிதான் கம்போடியாவின் அதிகாரம் மிக்க ஆட்சி என்ற நிலைப்பாட்டிலேயே 1994 வரை ஐ.நா காணப்பட்டது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஐரோப்பாவின் வரவாற்றில் இடம்பெற்ற மிக மேசமான மனிதப் பேரவலம் பொஸ்னியாவில் 1995ல் இடம்பெற்றது. முஸ்லிம்களைப் பொரும்பான்மையாகக் கொண்ட பொஸ்னிய இனத்தவர்கள் மீது சேர்பிய இளத்தவர்கள் மேற்கொண்ட இன ஒழிப்பு நடவடிக்கைகள் இதற்கு காரணமாக அமைந்தன. பொஸ்னியா இன ஒழிப்பு நடவடிக்கையின் மிக மோசமான சம்பவம் 1995ம் ஆண்டு ஜுலை மாதம் 18ம் திகதி இடம்பெற்றது. அன்றைய தினம் பொஸ்னிய எல்லையில் ஐக்கிய நாடுகள் சமாதானப் படையின் ஒரு பிரிவான டச்சு வீரர்கள் சுமார் 600 பேரைக் கொண்ட ஒரு படைப்பிரிவு பொஸ்னிய முஸ்லிம்களைக் காப்பாற்ற நிலைநிறுத்தப் பட்டிருந்த பின்னணியில் தான் சேர்பிய படைகள் அங்கு ஊடுறுவி சுமார் எண்ணாயிரம் முஸ்லிம்களை ஒரேயடியாக கொன்று குவித்தனர். இன்று வரை இதனோடு சம்பந்தப்பட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை.

1990ல் ஆபிரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ருவாண்டாவில் மிக மோசமான சிவில் யுததம் மூண்டது. அதனைத் தொடர்ந்து 1994ல் அந்த நாட்டின் பிரதான இனங்களான டூட்ஸி இனத்தவர்களுக்கும் ஹுட்டு இனத்தவர்களுக்கும் இடையிலான மோதலில் பத்து லட்சம் ருவாண்டா மக்கள் பலியானார்கள். அப்போதும் ஐ.நா வேடிக்கைப் பார்த்ததே தவிர அதனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

2003 முதல் 2005 வரையான காலப்பகுதியில் சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு மோதலில் பல குழுக்கள் அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்தக் குழுக்களை சமாளிப்பதற்காக சூடான் அரசு ஜன்ஜவீத் என்ற நாமம் தாங்கிய ஒரு குழுவை உருவாக்கி மனித வேட்டைக்கு தூண்டி விட்டது. இந்த ஜன்ஜவீத் மேற்கொண்ட வெறித்தனமான தாக்குதலில் மூன்று லட்சம் சூடான் பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தடுப்பதற்கு ஐ.நா மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது இன்னமும் விடை காண முடியாத வினாவாகவே எஞ்சி நிற்கின்றது.

இறுதியாக நமது நாட்டை எடுத்துக் கொள்வோம் 1983 முதல் 2009 வரையான காலப் பகுதியில் நாட்டில் தலைவிரித்தாடிய பிரிவினைவாத யுத்தத்தின் போது பயங்கரவாதிகளை அடக்குவதாகக் கூறி அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக அரச படைகள் பல அட்டூழியங்களைப் புரிந்துள்ளன. இந்த விடயத்தில் நாங்களும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் பிரிவினைவாத விடுதலைப் புலிகளும் மக்களுக்கு எதிராக அநியாயங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் உச்ச கட்டமாக 2009ல் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் சரியா பிழையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்தத் தகவலின் நம்பகத்தன்மையை நிலைநாட்டவாவது பாதிக்கப்பட்ட மக்கள் கோரும் பக்கச் சார்பற்ற விசாரணைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு வலுவற்ற அமைப்பாகத் தான் ஐ.நா உள்ளது. 

நாம் அவதானித்த இத்தனை கையாலாகாத் தனங்களையும் பொருட்டாகக் கொள்ளாமல் தான் ஐ.நா அதன் வருடாந்த அமர்வை உலகத் தலைவர்கள் ஒன்று கூடும் ஒரு கேளிக்கை நிகழ்வாக நடத்திக் கொண்டு இருக்கின்றது என்பதுவே இன்றைய யதார்த்தம்.0 கருத்துரைகள்:

Post a Comment